இலங்கையில் மோட்டார் சைக்கிள் திருடும் சம்பவங்கள் பாரியளவு அதிகரித்துள்ளமையினால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நேகம பிரதேசத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்து பாகங்களை விற்பனை செய்யும் இடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இடத்தில் பல்வேறு வகையான மோட்டார் சைக்கிள்களின் பாகங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மோட்டார் சைக்கிள் திருட்டு பாரிய அளவு அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 6 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன.
திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்யும் இடமாக கல்னேவ உள்ளதாக சந்தேகப்படுகின்றோம்.
இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இணைந்து இது தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. எனவே மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடம் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.