விவசாயிகளும் கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்களும் கோரிக்கை
(மன்னார் நிருபர்)
(02-03-2021)
மன்னாரில் குளங்கள் அபிவிருத்தி செய்யப்படும் போது குளங்களில் நடுவில் உள்ள பற்றைக் காடுகளையும் துப்பரவு செய்ய வேண்டும் என உரிய திணைக்கள அதிகாரிகளிடம் மன்னார் விவசாயிகளும் கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்களும் பொது மக்களும் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
கடந்த காலங்களில் அபிவிருத்தி செய்யப்பட்ட குளங்களில் கட்டுகள் மட்டுமே உயர்த்தப்பட்டு நடை பாதை அமைக்கப்பட்டது. ஆனால் குளங்களின் நடுவில் காணப்படும் பாரிய பற்றைக் காடுகளும் நீருக்கும் நிலத்துக்கும் பாதீப்பை ஏற்படுத்தக்கூடிய ‘கருவேல’ மரங்களும் அகற்றப்படாமல் குளங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
இதனால் குளங்களின் நடுவில் காணப்படும் கருவேல மரங்களும் பற்றைக் காடுகளினாலும் விரைவாக குளங்கள் வறண்டு விடுகிறது.
எனவே இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட இருக்கின்ற 128 குளங்கள் புனரமைப்பின் போது குளங்களின் நடுவில் உள்ள பற்றைக் காடுகளையும் கருவேல மரங்களையும் துப்பரவு செய்வதன் மூலமாக அதிகளவான நீரைத் தேக்கி வைக்க முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த குளங்களில் நடுவில் உள்ள பற்றைக் காடுகளும் கருவேல மரங்களும் துப்புரவு செய்யப்படும் பட்சத்தில் அதிக அளவான நீரைத் தேக்கி வைக்க முடியும் . பயிர் அறுவடையின் பின் கால் நடைகளுக்கு குடி நீராக பயன் படுத்தப்படும்.
நன்னீர் மீன்பிடி மேற்கொள்ள உதவும் குளங்களின் நடுவில் காணப்படும் பற்றைக் காடுகளில் நிறைய பறவைகள் சிக்கி உயிரிழப்பதை தவிர்க்க முடியும்.
எனவே இந்த விடையத்தில் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாய அமைப்புகள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் விவசாய மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புகள் அனைவரும் இணைந்து மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி செய்ய இருக்கின்ற குளங்களை நல்ல முறையில் அபிவிருத்தி செய்வதற்கு ஒன்றிணைய வேண்டும் என்று மன்னார் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருவேல மரங்கள் இருக்கின்ற நிலங்கள் விரைவில் வறட்சி நிலையை அடைந்து விடும் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் படி கருவேல மரங்கள் வேரின் மூலமாக கிட்டத்தட்ட 50 மீற்றருக்கு அதிகமான தூரத்தில் உள்ள நீரினை உறிஞ்சி எடுத்து விடும் தன்மை கொண்டுள்ளது. அதனால் தான் கருவேல மரங்கள் நிறைந்து காணப்படும் பகுதி வறண்டு பாலை நிலம் போல் காட்சி தருகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.