கடந்த பல வருடங்களாக இலங்கையில் உள்ள தேயிலை மற்றும் றப்பர் மரத்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் வகையில் பல போராட்டங்கள் பல தொழிற்சங்களினால் நடத்தப்பெற்று வந்தன. ஆனால் அவை தொடர்ந்தும் இழுபறி நிலையிலேயே இருந்தன.
தற்போதைய அரசாங்கம் அண்மையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு கட்டாயம் ஆயிரம் ரூபாய் சம்பளம் உடனடியாக வழங்கப்பெற வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தது. அதனால் மலையக தொழிற்சங்கங்களும் அதற்கு வரவேற்பைத் தெரிவித்தன.
ஆனாலும் பெருந்தோட்டங்களின் உரிமையாளர்களாக பல அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளமையால் அவர்கள் இந்த சம்பள உயர்வை விரும்பவில்லை. இதனால் அவர்கள் காலத்தைக் கடத்தும் காரியங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்று அறியப்படுகின்றது.
இந்த நிலையில் பெருந்தோட்டப்பகுதிகளில் பணியாற்றும் முகாமையாளர்கள் உட்பட தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், ஓல்டன் சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டும் ஹற்றன், மல்லியப்பு சந்தியில் நேற்று 3ம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு பின்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு தொடர்பு உள்ளது என சில தொழிற்சங்கத் தலைவர்கள் தெரவித்துள்ளனர் என அறியப்படுகின்றது.
முதல் தடைவையாக தோட்ட முகாமையாளர்கள் நேற்று புதன்கிழமை ஹற்றன் மல்லியப்பு சந்தியில் இரு மருங்கிலும் பதாதைகளை காட்சிபடுத்தியவாறு சுகாதார விதிமுறைகளுக்கமைய அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஈடுப்பட்டனர்.
சுமார் 300இற்கும் மேற்பட்டோர் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட துரைமார் சங்கத்தினாலேயே இந்த எதிர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் சகல பெருந்தோட்ட முகாமையாளர்களும் கலந்துகொண்டனர்.
தொழிலாளர் அராஜகம் ஒழிக, தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக, தோட்டங்களில் அரசியல் மயமாக்கலை நிறுத்து, முகாமைத்துவத்துக்கு எதிரான வன்முறையைக் கண்டிக்கின்றோம் என்றெல்லாம் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பதாதைகளை ஏந்தியிருந்தனர். கைகளில் கறுப்பு பட்டிகளையும் அணிந்திருந்தனர்.
பெருந்தோட்டப்பகுதிகளில் தோட்ட அதிகாரிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. அண்மையில் ஒல்டன் தோட்ட முகாமையாளரை வீடு தேடி சென்று கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே, தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவது, உறுதிப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும். என்ற கோரிக்ைகயும் இதன்பாேது முன்வைக்கப்பட்டது.
நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு தோட்ட அதிகாரிகளும் பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர். எனவே, எமக்கு எதிரான வன்முறை சம்பவங்களைக் கண்டிக்கின்றோம்.
நீதி கிடைக்க வேண்டும். இப்பிரச்சினையை சர்வதேசம் வரை கொண்டு செல்வோம் என்று தோட்ட துரைமார் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். எனினும் இவர்களது குற்றச்சாட்டுக்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் சதித்திட்டம் தான் இதுவென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து ராஜபுத்ரன்