1996ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி கனடா ஶ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் கனடா உதயன் முதலாவது இதழ் வெளியிடப்பெற்றதை கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு மகிழ்ச்சியோடு ஞாபகப்படுத்திய ஊடக நண்பர் தற்போதைய கனடா 102.7 FM பண்பலை வானொலி நிலையத்தின் அதிபர் நடா ராஜ்குமார் அவர்களுக்கு எமது ஆசிரிய பீடத்தின் நன்றி.
சில நாட்களுக்கு முன்னர் எமது உதயன் பிரதான அலுவலகத்திற்கு ஒரு கடித உறையை தற்போதை பிரதிநிதியும் கலைஞருமான ஶ்ரீமுருகன் ஒரு கொண்டு வந்து எம்மிடம் கையளித்தார். அதை ஆர்வத்துடன் திறந்தபோது இங்கே காணப்படும் ஒரு குறிப்பும் அன்பளிப்பு ஒன்றும் இருந்தது.
அதில்
“அன்பு நண்ப!
உனது உழைப்பே வெற்றி. உதயன் பத்திரிகை 25வது ஆண்டை அடைந்ததை காணும் இந்த நேரம் அதன் முதற் பிரதியை அருள் மிகு துர்க்காதேவி அம்பாள் ஆலயத்தில் வைத்து பெற்றுக்கொண்ட நேரத்தை பெரு மகிழ்ச்சியுடன் நினைத்துப் பார்க்கின்றேன். வாழ்க! இங்ஙனம் அன்புடன் – நடா ராஜ்குமார் ”
என்று தனது கைப்பட எழுதியிருந்தார் நண்பர் நடா ராஜ்குமார்.
இதைப் பார்த்துப் படித்ததுடன் பல கடந்த கால நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வந்தன.
1999ம் ஆண்டு மே மாதம் கனடாவிற்கு அழைக்கப்பெற்றிருந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எமது உதயன் பிரதம ஆசிரியருக்கு ‘நட்பின் நாயகன்’ என்னும் பட்டத்தையும், நண்பர் நடா ராஜ்குமாருக்கு ‘வெண்கலைக் குரலோன்’ என்னும் பட்டத்தையும் ‘தமிழன் வழிகாட்டி’ செந்திலாதனுக்கு ‘செயல்வீரன்’ என்னும் பட்டத்தையும் வழங்கிவிட்டுச் சென்றார்.
‘வெண்கலக் குரலோன்’ நண்பர் ராஜ்குமார் தற்போது.அதாவது அந்தப் பட்டத்தைப் பெற்று 21 வருடங்களுக்குப் பின்னரும் 102.7 FM என்னும் பண்பலை வானொலியின் அதிபராக வெண்கலக் குரல் எழுப்பிய வண்ணம் புகழ் பெற்றவராக திகழ்கின்றார்.
இனி 1996ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை எவ்வாறு எமது கனடா உதயன் முதலாவது இதழ் வெளியிடப்பெற்றது என்பதைப் பார்ப்போம்.
அதற்கு முன்னர், 1993ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு நாள் கனடாவில் முதலாவது இலவச வாரப் பத்திரிகையாக “சூரியன்’ வெளியிடப்படுகின்றது. அதன் பங்காளியாக இல்லாமல், பிரதம ஆசிரியராக பதவியில் அமர்த்தப்படுகின்றார், தற்போது வெள்ளி ஆண்டில் தடம் பதித்துள்ள ‘கனடா உதயன்’ பிரதம ஆசிரியர் லோகன் லோகேந்திரலிங்கம் அவர்கள்.
‘சூரியன்’ பத்திரிகையின் பங்காளர்களான ‘தமிழர் மத்தியில்’ அதிபர் அமரர் நந்தகுமார், பற் புஸ்பகாந்தன், விவேகா அச்சகத்தின் நண்பர் ஶ்ரீ, மற்றும் கணக்காளர் குமார் இரத்தினம் ஆகியோர் ஒன்றாக அன்போடு அழைத்துச் சென்று ‘சூரியன்’ பத்திரிகையின் ஆசிரியராக லோகன் லோகேந்திரலிங்கம் அவர்களை நியமனம் செய்தார்கள்.
அந்த ஆரம்பமே சரியாக மூன்று வருடத்தின் பின்னர் ‘கனடா உதயன்’ வார இதழை எமது வாசகர்களுக்கு வழங்குவதற்கு காரணமாக அமைந்தது.
‘சூரியன்’ பத்திரிகை நிறுத்தப் பெற்று சில நாட்களுக்குள்ளாகவே, அதாவது 1996-03-03 வெள்ளிக்கிழமையன்று, நாம் முன்னரே திட்டமிட்ட படி, கனடாவின் ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள, ‘துர்க்கேஸ்வரம்’ ஶ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தில் வெளியிடப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பெற்றன.
அன்றைய தினம் அங்கு கூடியிருந்த கனடா உதயன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் ‘துர்க்கேஸ்வரம்’ ஶ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் பிரதம குருவும் நிறுவனருமான சிவஶ்ரீ கணேச சுவாமிகள், தியாகராஜக் குருக்களிடமிருந்து நண்பர் நடா ராஜ்குமார் பத்திரிகையின் முதற் பிரதியை பெற்றுக்கொண்டார்.
இன்று சரியாக இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவுற்ற வேளையில் மகிழ்ச்சியானதும் பல அனுபவங்களைத் தேடித்தந்ததுமான பத்திரிகை வெளியிட்ட நாளை பக்தியுடனும் மகிழ்ச்சியுடன் நினைத்துக் கொள்கின்றோம்.
.இந்த 25 வருட பத்திரிகைத் துறைப் பயணத்தில் பல வெற்றிகள், மகிழ்ச்சி, சவால்கள், தாக்குதல்கள், நஸ்டங்கள், பாதிப்புக்கள் விருதுகள், ‘வெட்டுக்கள்’ ஆகியவற்றை அனுபவித்துள்ளோம். நிச்சயமாக உலகில் கனடாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இந்த அனுபவங்களைப் பெற்றிருக்க முடியாது என்பதே எம் அனுபவப் பகிர்வாகும்.
இந்தப் பயணத்தில் நாம் வெளியிட்ட வெறும் கறுப்பு- சிவப்பு முதற் பக்கம், எமது 1000 வது இதழ், 1993ம் ஆண்டு வெளிவந்த ‘சூரியன்’ இதழ் ஆகியவற்றின் முன்பக்கங்கள் காணப்படுகின்றன.
நன்றி- சத்தியன்