சிவா பரமேஸ்வரன் — மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
இலங்கையின் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் தமிழர்களுக்கு சொந்தமான செழுமையான விளைநிலங்கள் திட்டமிட்ட வகையில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி எனும் பெயரில் தொடர்ந்து அபகரிக்கப்படுகின்றன.
ஐ நா விசாரணையில் சிக்கித் தவிக்கும் இலங்கை வெளிநாடுகளுக்கு ஒரு முகமும் உள்நாட்டுக்கு தனது மற்றொரு கோர முகத்தையும் காட்டி ஏமாற்றி வருகிறது.
தொல்லியல் அகழ்வாராய்ச்சி என்று கபளீகரம் செய்யப்படும் தமிழர்களில் நிலங்களில் இலங்கை இராணுவம் நிலைகொள்வதும் அங்கு பௌத்த விகாரைகள் அமைப்பதும் சர்வ சாதாரணமாகியுள்ளது.
சொந்த காணிகளை துப்புரவு செய்யும் பணிகள் கூட இப்போது தடுக்கப்படுகின்றன. இப்படியான செயல்களுக்கு பிக்குகளும் உடந்தையாக உள்ளனர்.
அண்மையில் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை துப்பரவு செய்து எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கோடு வேலைகளில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவரை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்தி பொலிஸார் மற்றும் வன வள திணைக்களத்தினரை ஏவி விட்டு வேலைகளுக்கு தடைவிதித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் குமுளமுனை தண்ணிமுறிப்பு குள வீதிக்கு அருகாமையிலுள்ள தனது சொந்த விவசாய நிலத்தை நிலத்தினை துப்பரவு செய்து கொண்டிருந்த முதியவர்.
இயந்திரம் மூலம் சமப்படுத்தும் ஈடுபட்டிருந்தவேளை அங்கு வந்த அதிகாரிகளும் குறித்த பிக்குவும் அந்தக் காணியைச் சுற்றியுள்ள 500 ஏக்கர் நிலங்கள் அனைத்தும் குருந்தூர்மலைக்கு சொந்தமான தொல்லியல் புராதன பூமி என்று கூறி அங்கு யாரும் எந்த வேலைகளிலும் ஈடுபடமுடியாது என்று அச்சுறுத்தியுள்ளனர்.
சொந்த காணிக்கு அந்த முதியவர் செல்வதை தடுத்தோடு மட்டுமின்றி அங்கு எவருக்கும் நிலங்கள் இல்லை என தெரிவித்து அவரை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உள்ளூர் கிராம மக்கள் செய்தியாளர்களை தொடர்பு கொண்டு விடயத்தை தெரிவித்தனர். உடனடியாக அங்கு சென்ற செய்தியாளர்களும் அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
தேசிய அடையாள அட்டை மற்றும் ஊடக அடையாள அட்டையை பரிசோதிக்கும் உரிமை பொலிசாருக்கு மட்டுமே இருக்கும் நிலையில், வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்ற செய்தியாளர் ஒருவரின் அடையாள அட்டையை வலிந்து பெற்று அதிலிருந்து விவரங்களை பதிவு செய்துள்ளார்.
ஊடகச் சுதந்திரத்தில் இலங்கை மிகவும் கீழ் நிலையிலுள்ளது என்பதற்கு இப்படியானச் சம்பவங்கள் தொடர்ந்து சன்றாக உள்ளன.
தண்ணிமுறிப்பு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள அந்தப் பிரதேசம் தமிழ் மக்கள் பல ஆண்டு காலமாக குடியிருந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட பகுதியாகும். மேலும் போருக்கு பின்னர் மீண்டும் தற்போது அப்பகுதியில் உள்ள தமது காணிகளை துப்பரவு செய்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த காணிகளில் மா ,பலா, தென்னை, போன்ற மரங்கள் இன்றும் கூட நிற்பதை காணமுடிகின்றது. இந்த நிலையில் கடந்த மாதம் தொடக்கம் குருந்தூர் மலையில் இராணுவம , தொல்லியல் திணைக்களம் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிலையில் தற்போது அதனை அண்டிய தமிழ் மக்களுக்கு சொந்தமான குடியிருந்த நிலங்கள் ,விவசாய நிலங்கள் என்பனவற்றை அபகரிக்கும் நோக்கமாக கருதப்படும் இந்த கிராம மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
இதேவேளை குருந்தூர் பகுதியிலுள்ள ஆறுமுகத்தான்குளத்தையும் இலங்கைப் படையினர் வலிந்து தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். அங்கு பல தலைமுறையாக பாரம்பரிய முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழ் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டு அங்கு வெளியாட்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தக் குளத்திலிருக்கும் `ஜப்பான் மீன்களை` தடை செய்யப்பட்ட வலை கொண்டு `வெளியிலிருந்து வந்தவர்கள்` பிடித்து இராணுவத்தின் பயன்பாட்டுக்கு அளிக்கின்றனர் எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராஜபக்ச அரசாங்கம் தொடர்ந்து தமிழர்களின் நிலங்கைப் பறிப்பதும், தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை நசுக்குவதிலும் திட்டமிட்ட வகையில் ஈடுபடுகிறது என்று பன்னாட்டு அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
எனினும் அண்மையில் வெளியான ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை நில அபகரிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயங்களில் பாதிக்கப்பட்டோர் பக்கம் நிற்காமல் அரசின் பக்கமே நின்றுள்ளது என்று தமிழ் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.