வட மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை
(மன்னார் நிருபர்)
(05-03-2021)
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மன்னார் நகர அபிவிருத்திக்கு முன்னெடுக்கப்பட உள்ள 420 மில்லியன் ரூபாய் அபிவிருத்தி திட்டத்துக்கு மன்னார் நகர சபையின் உறுப்பினர்கள் பலர் விருப்பம் தெரிவித்த போதும் நகர சபை தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளதால் குறித்த திட்டம் மன்னாரை விட்டு கை நழுவிச் செல்லும் நிலை உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
எனினும் குறித்த அபிவிருத்தி திட்டத்திற்கு என எவ்வித நிதியும் இது வரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என வட மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் டி.வி.எஸ்.கே.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மன்னார் நகர சபைக்கு நேற்று வியாழக்கிழமை (4) அனுப்பி வைத்துள்ள கடித்தில் மேலும் குறிப்பிடுகையில், இயற்கை பூங்கா அமைத்தல் தொடர்பான செயல் திட்டமானது 2022 ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்காக முன் மொழியப்பட்டுள்ளது. ஆனால் இச் செயல் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இது வரை தீர்மானிக்கப்படவில்லை.
நகர அபிவிருத்தி அதிகார சபை குறித்த செயற்திட்டத்தினை மன்னார் தீவுப்பகுதிக்கு என தாயரிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
-எனினும் உள்ளுராட்சி சபைகளிடம் இருந்து காணி உரிமம் தொடர்பான ஒப்புதல் பெற்றுக் கொள்ளுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் குறித்த செயற்திட்டத்திற்கான நிதி இது வரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
-மன்னார் தீவுப் பகுதிக்கு என தயாரிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட செயற்திட்டங்களை அரசாங்கத்தின் கீழ் செயல் படுத்த முடியும்.
-எனினும் இது வரை குறித்த செயல் திட்டங்களுக்கு என எவ்வித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-நேற்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வட மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது குறித்த அபிவிருத்தி திட்டத்திற்கான நிதி திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் வட மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதன் போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த விடையம் தொடர்பாக ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.