கனடா உதயன் பத்திரிகையின் வெள்ளி விழா ஆண்டாகத் திகழும் 2021 ம் ஆண்டின் இறுதி வரையிலும் மாதாந்தம் ஒரு நிகழ்வையென்றாலும் இணையவழி ஊடாக நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தின்படி ஏற்பாடு செய்யப்பெற்ற உலகளாவிய மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 27-02-2021 சனிக்கிழமையும் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமையும் கனடிய நேரம் : காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது –
போட்டிக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும், உதயன் பத்திரிகையின் நிறுவனரும் பிரதம ஆசிரியருமான லோகன் லோகேந்திரலிங்கம் அவர்கள் தனது குழுவினரோடு இணைந்து செய்திருந்தார்..
இதுவரை ‘நான் விரும்பும் அரசியல் தலைவர்’ என்னும் தலைப்பில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில்? குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இவ்வாறான பேச்சுப் போட்டியொன்றை எவரும் நடத்தவில்லை என்ற பாராட்டுக்கள் குவிந்து வரும் இந்த வேளையில் இந்த போட்டிக்கு முதன்மை அனுசரணை வழங்கி வர்த்தகப் பிரமுகர் நல்லதம்பி அவர்களுக்கும் இணை அனுசரணைகள் வழங்கிய – கனடா தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு சாந்தா பஞ்சலிங்கம், கெம்சோனிக்ஸ் பாதுகாப்பு கெமரா நிறுவனத்தின் அதிபர் திரு ரஜீவ் செபராசா, மொன்றியால் மாநகர் புருட்ஸ் ஹெபி நிறுவன அதிபர் திரு சண் ஸ்ரீ, வீடு விற்பனை முகவர் திரு கைலன் தில்லைநாதன் மற்றும் அவரது சகோதரர் ரகு தில்லைநாதன், வீடு விற்பனை முகவர் திரு பாஸ்கரன் சின்னத்துரை ஆகியோருக்கு கனடா உதயன் நிறுவனம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது.
மேற்படி பேச்சுப் போட்டிக்கான நடுவர்களாக பின்வரும் பெரியோர்கள் பணியாற்றினார்கள்.
பேராசிரியர் சங்கரநாராயணன்( தமிழ்நாடு), வழக்கறிஞர் ராமகிருஸ்ணன் (தமிழ்நாடு), குயின்றஸ் துரைசிங்கம் (கனடா), நிமால் விநாயகமூர்த்தி (கனடா), திரு வீணைமைந்தன் சண்முகராஜா (கனடா) ஆகியோர்.
போட்டியில் பங்கு பற்றுவதற்காக விண்ணப்பித்த 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இலங்கை, இந்தியா, மலேசியா, சுவிற்சலாந்து, கனடா ஆகிய நாடுகளிலிருந்து இணையவழி ஊடாக தங்கள் உரைகளை வழங்கினார்கள். பேச்சுப் போட்டிக்கு கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு ‘நான் விரும்பும் அரசியல் தலைவர்’ என்பதாகும்.
‘கனடா உதயன்’ நடத்தும் வெள்ளிவிழா பேச்சுப் போட்டிக்கு விண்ணப்பித்து கடந்த 27ம் 28ம் திகதிகளில் இணையவழி ஊடாக பங்குபற்றிய அனைத்து மாணவ மாணவியர்கள் மற்றும் போட்டியில் வெற்றி பெற்று பணப்பரிசுகளைத் தட்டிக்கொண்ட அனைத்து தம்பி தங்கையர்க்கும் நன்றி…
மேற்படி போட்டிக்காக கனடா உதயன் பத்திரிகை அறிவித்த பரிசுத் தொகையிலும் மேலாக, பேச்சுப் போட்டியின் நடுவர்களில் ஒருவரும், கணக்காளருமான திரு நிமால் விநாயகமூர்த்தி அன்பளிப்பாக வழங்கிய தலா 50 கனடிய டாலர்கள் போட்டியில் பங்கு பற்றிய அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வங்கிக் கணக்குகள் மூலமாக அனுப்பபட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் 28ம் திகதி போட்டி நிறைவுற்ற பின்னர் நடுவர்களின் ஆலோசனையின் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பெற்றன. மூதல் மூன்று பணப் பரிசுகளோடு ஏழு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பெற்றன. இங்கே காணப்படும் படங்களில் உலகளாவிய பேச்சுப் போட்டியில் முதற்பரிசு பெற்ற தமிழ்நாட்டின் கோயமுத்தூர் நகரைச் சேர்ந்த செல்வி சினேகா பாலமுருகன், இரண்டாம் பரிசைப் பெற்ற கனடா- ரொரன்ரோ நகரைச் சேர்ந்த செல்வி நிவேதிகா கோகுலன் மற்றும் மூன்றாம் பரிசைப் பெற்ற வட-இலங்கை கிளிநொச்சி நகரைச் சேர்ந்த கண்ணதாசன் லம்போதரன் ஆகியோர் காணப்படுகின்றனர். அத்துடன் 7 ஆறுதல் பரிசுகளைத் தட்டிக் கொண்டவர்களின்
பெயர்கள் பின்வருமாறு:-
சுபநிதி சுப்பிரமணி (தமிழ்நாடு), தர்ஷன் அகிலன் (மலேசியா), பூபதி. எம் (தமிழ்நாடு), பாலு ஆனந்த் (தமிழ்நாடு), நாராயணகோவிந்தன் முத்துப் பழனியப்பன் (தமிழ்நாடு), அய்ஸ்னவி துர்க்காதரன்( கனடா) அப்ரின் பானு (தமிழ்நாடு) பரிசு பெற்ற அனைவருக்கும் கனடா உதயன் நிறுவனம் மற்றும் போட்டி நடுவர்கள் ஆகியோரின் வாழ்த்துக்கள் உரித்தாகுக.