இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் எதற்காக ஆயுதம் ஏந்திப் போராடத் துவங்கினார்கள்? இனத்திற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்குமுறைகள் பரிசளிக்கப்பட்டபோதே ஈழத் தமிழ் மக்கள் தமது தேச இறைமையை கோரிய போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அந்த வகையில் முதலில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியிலும் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். தமிழர் தம் இறைமையை கோரிய போராட்டம் என்பது இப்போது அறுபந்தைந்து வருடங்கள் கடந்த நிலையில் தொடர்கின்றது. ஆனாலும் இன்றும் ஸ்ரீலங்கா அரசு பாரபட்சங்களின் உச்ச வடிவிலான ஒர அரசாகவே காணப்படுகின்றது என்பதை மீண்டும் உணரத் தலைப்பட்டுள்ளோம்.
கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி இறக்கின்ற இலங்கை முஸ்லீம் மக்களின் சடலங்களை அந்த மக்களின் மத நம்பிக்கைக்கு மாறாக எரியூட்டி தகனம் செய்கின்ற முறையை ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னெடுத்தது. இதற்கு உலகம் முழுவதும் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தமிழ் மக்களும் இந்த விடயத்தில் முஸ்லீம் மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பினார்கள். அண்மையில் ஈழத்தின் கிழக்கே பொத்துவிலில் தொடங்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கூட இந்த விடயத்தை ஒரு முன்னிலை கோரிக்கையாக போராட்டத் தரப்பினர் முன்வைத்தனர்.
அது மாத்திரமின்றி சர்வதேச நாடுகளும் முஸ்லீம் மக்களின் ஜனாஜா எதிர்ப்பு விடயத்தில் கவனம் செலுத்தின. கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் நோயினை பயன்படுத்தி அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதாக ஐகக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் குற்றம் சுமத்தியிருந்தார். அடக்குமுறைகளால் கொரோனா தொற்று நோய்களை ஒழித்துவிட முடியாது என்று அவர் கூறினார். இந்த விடயம் ஏனைய நாடுகளைவிடவும் ஸ்ரீலங்கா அரசுக்கே மிகவும் பொருத்தமானது எனலாம். இதில் ஒன்றாகவே முஸ்லீம்கள் மீதான அணுகுமுறை அமைந்தது.
அத்துடன் வந்த பாகிஸ்தான் நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் கூட முஸ்லீம்களின் ஜனாஸா விடயத்தில் இலங்கை அரசு சாதகமான முடிவு எடுக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவு சேர்ப்பதற்காக முஸ்லீம் நாடுகளை தன் பக்கம் இழுப்பதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கம் முஸ்லீம்களின் சடலங்களை அவர்களின் மத நம்பிக்கைப்படி புதைக்க அனுமதிக்கப் போவதாக அறிவித்தது. இதனையடுத்து அண்மையில் இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் அதற்கு நம்பிக்கை தெரிவித்து உரையாற்றியிருந்தார்.
என்றாலும் இதனை வைத்தும் தமிழர்களின் பிரதேசத்தை ஒடுக்கவும் தமிழ் பேசும் மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தவும் ஸ்ரீலங்கா அரசு திட்டமிட்டு இருப்பதே தற்போது அதிர்ச்சியான விடயம். அந்த வகையில் வடக்கில் இரணைதீவில் முகொரோனாவால் இறக்கும் முஸ்லீம்களின் சடலங்களை அடக்கம் செய்யப் போவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கு ஸ்ரீலங்காவின் பிரதான எதிர்கட்சியே கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இது தமிழ் மக்களிடையே பெரும் எதிர்ப்பையும் தேவையற்ற சலசலப்பையும் ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இனங்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்தவே ஸ்ரீலங்கா அரசாங்கம் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளுவதாக எதிர்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர். அத்துடன் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இங்கே ஒன்று மாத்திரம் நன்றாகப் புலப்படுகின்றது. ஸ்ரீலங்காவில் நல்ல திட்டங்களும் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படுகின்ற போது அதில் தமிழ் மக்களுக்கு எந்த முன்னிடங்களும் வழங்கப்படுவதில்லை. அதைப்போல உயர் பதவிகள், அமைச்சுக்கள், உரிமைகள் என்று எதற்குமே முன்னுரிமையில்லை.
ஆனால் அழிவுகள் என்று வருகின்ற போது மாத்திரம் ஸ்ரீலங்கா அரசாங்கம் வடக்கு கிழக்கிற்கு முன்னுரிமை அளிக்கின்றது. கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் அதிகமான கொரோனா தடுப்பு நிலையங்களையும் தனிமைப்படுத்தல் மையங்களையும் வடக்கு கிழக்கில் தான் ஸ்ரீலங்கா அரசாங்கம் அமைத்தது. கொரோனா வைத்திய சாலைகளையும் தனிமைப்படுத்தல் மையங்களையும் வடக்கு கிழக்கில் அமைப்பதில் தவறில்லை. ஆனால் வடக்கு கிழக்கில் மாத்திரம் அவற்றை அதிகமாக ஏன் நிரப்ப வேண்டும் என்பதே சந்தேகத்திற்கு உரியது.
யுத்தத்தையும் பேரழிவுகளைளும் வடக்கு கிழக்கிற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் முப்பதாண்டுகளாக பரிசளித்தது. ஸ்ரீலங்கா அரசின் பொருளாதாரத்தில் பெருமளவு நிதியை வடக்கு கிழக்கு மக்கள் மீது கொட்டுகின்ற குண்டுகளுக்கும் ஆயுதங்களுக்கும் செலவு செய்தது அரசாங்கம். அதே தொகையை உணவுக்கும் மருந்துக்கும் ஸ்ரீலங்கா அரசு ஒதுக்கியிருக்கவில்லை. மாறாக உணவையும் மருந்தையும் தடுத்துக் கொண்டு குண்டுகளை மாத்திரமே தமிழ் மக்களுக்கு பரிசளிப்பதில் ஸ்ரீலங்கா அரசு மிகுந்த அக்கறை கொண்டிருந்தது. இதுவே ஸ்ரீலங்காவின் துயர நிலைக்கான பாரபட்ச அணுகுமுறையாகும்.
அதிலும் இரணைதீவை தேர்வு செய்வது என்பது தமிழ் மக்களை பொருத்த வரையில் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகும். இரணை தீவில் இருந்து 28 வருடங்களாக அகதிகளாக அலைந்த அக் கிராம மக்கள் கடந்த 2019 ஆம் ஆண்டில்தான் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டனர். இந்த மக்கள் ஈழத்தில் நடந்த தொடர்ச்சியான போரால் பாதிக்கப்பட்டவர்கள். 1997இல் நடந்த போர் பின்னர், 2009இல் நடந்த போர் என மாறி மாறி வந்த யுத்தங்களால் இப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக அலைந்தனர்.
அத்துடன் கடந்த காலத்தில் இக் கிராமத்தில் மக்களை மீள்குடியேற அனுமதிக்காமல் ஸ்ரீலங்கா அரசாங்கம் தடுத்தது. இரணைதீவு பெருந்தீவு மற்றும் சிறுதீவு என இரண்டு பகுதிகளைக் கொண்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச சபைக்கு உட்பட்ட இந்தக் கிராமத்தில் மீன் பிடித் தொழிலை அடிப்படை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பச்சைப் பசேல் என்ற இக் கிராமத்தின் வனப்பும் பேரழகை தரும். பெரும் போராட்டத்தின் பின்னர், தவத்தின் பின்னர் இக் கிராம மக்கள் கடந்த 2019ஆம் ஆண்டு இங்கே தாமாகவே மீள்குடியேறிக் கொண்டனர்.
பாடசாலை, வைத்தியசாலை, நூலகங்கள், தபால் நிலையங்கள் என சகல வசதிகளையும் கொண்ட இந்தக் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. பெருளாதாரத்தை பெருக்கும் கடல் வளம் இத் தீவை சூழ்ந்து இருப்பதால், இங்கே தொழிலில் ஈடுபட மக்கள் விரும்புகின்றனர். அது இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மாத்திரமின்றி இத் தேசத்தின் பொருளாதாரத்தையும் பெருக்கவே செய்யும். ஆனால் தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தில் உயர்வது ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஒருபோதும் உவப்பானதில்லை. இதனால் இக் கிராமத்தை தற்போது குறி வைத்திருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.
கொரோனாவில் இறக்கும் எந்த மனிதர்களையும் இவர்களின் பிரதேசங்களில் உள்ள அவர்களின் பூர்வீகமான மயானங்களில் தகனம் செய்வதே சரியானதாக இருக்கும். வடக்கு கிழக்கில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை தென்னிலங்கையில் புதைக்க முடியுமா? அதற்கான அவசியமும் பாரபட்சமும் தேவையில்லை. அத்துடன் முஸ்லீம் மக்கள் கோரியது, வடக்கில் தமிழ் மக்களின் பிரதேசத்தில் சடலங்களை புதைக்கின்ற விடயத்தையல்ல. தமது மத முறைப்படி புதைக்கவே. அதனை அவர்களின் பிரதேசங்களிலேயே செய்ய வேண்டும். அதுவே அவர்களின் கோரிக்கையும் நியாயமும் ஆகும்.
எனவே எந்த விடயத்திலும் வடக்கு கிழக்கை அழிக்கின்ற, வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பாதிக்கின்ற வகையில் காய்களை நகர்த்துவதை ஸ்ரீலங்கா அரசாங்கம் கைவிட வேண்டும். எல்லாவற்றிலும் எப்போதுமே இனவழிப்பு என்கின்ற திட்டத்தை ஸ்ரீலங்கா அமுல்படுத்த நினைப்பதே இங்கு வெளிப்படுகின்றது.
கனடா உதயனுக்காக கிளிநொச்சியிலிருந்து தீபச்செல்வன்