(மன்னார் நிருபர்)
(05-03-2021)
வட மாகாண ஆளுனரின் சிந்தனைக்கு அமைவாக ஒரு வங்கி ஒரு கிராமம் எனும் கருப்பொருளில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் தேசிய செயல் திட்டம் இன்றைய தினம் (5) வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் மக்கள் வங்கியின் பங்களிப்புடன் குறித்த தேசிய செயல் திட்டத்தினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
வறிய மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் தேசிய செயல் திட்டத்திற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு கடன் அடிப்படையில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உற்பட வறிய மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையிலும் அவர்களின் சுய தொழில் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் குறித்த செயல் திட்டம் நடை முறைப் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.