கதிரோட்டம் 05-03-2021
கிழக்கு மாகாணத்தில், தற்போதைய அரசியல் கருத்துப் பரிமாற்றங்கள், மற்றும் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் பக்கம் தாவியுள்ள சில இளைய தலைமுறை அரசியல் செயற்பாட்டாளர்களால் கிழக்கில் தமிழர்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைக்கப்பட்டு, அங்கு தமிழ் முஸ்லிம் பிரிவினை வாதம் மேலும் அதிகரிப்பதற்குரிய சிறு பிள்னைத் தனமான கருத்துக்களை பரப்பப்பட்டு வருவதை அவதானிக்கும் போது, சாதாரண மக்களிடத்தே உள்ள ஒற்றுமை மற்றும் சகோதர உறவுகள் ஆகியன பாதிக்கப்படும் என்பதை நாம் ஒரு எச்சரிக்கையாக குறிப்பிட விரும்புகின்றோம்.
கிழக்குத் தமிழர்களை விட முஸ்லிம் மக்களே கிழக்கில் பெருமளிவில் பாதிக்கப்பட்டவர்கள் என்பது உண்மை. கிழக்கும் முஸ்லிம்களை தலைமை தாங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள் கொழும்புத் தலைமைகளாகவே இருந்தார்கள். அவர்களுக்கு வாக்கு வங்கிகளாகவே கிழக்கின் முஸ்லிம் மக்கள் இருந்தார்களே தவிர, அரசியல்வாதிகளால் பயனடையவில்லை. இந்நிலையில், அஸ்ரப் போன்ற கிழக்கு மண்ணிலிருந்த எழுந்த அரசியல்வாதிகள் சிலரும் கொழும்புத் தலைமைகளால் கொல்லப்பட்டார்கள் என்பது இதற்கு சான்றாகும்.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் இழந்த உரிமைகளையும் சலுகைகளையும் குறிப்பாக கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தையும் மகிந்தா தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூலம் பெற்றுத் தருவதாகவும், அதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகைளை தமிழ் மக்கள் ஓதுக்க வேண்டும் எனவும் சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த வாக்குகளால் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி இழந்த அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராக இருக்கின்றது. என்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கூறுகின்ற விடயங்கள் அபாயச் சங்கு போலவே எமது காதுகளில் ஒலிக்கின்றன. அத்துடன் அவை, இரண்டு விடயங்களுக்கு பாதகமாகவும் அமையவுள்ளன என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம்.
தமிழர்களின் அபிலாசைகளை தென்னிலங்கை கட்சிகளுகளின் கால்களுக்குள் கொண்டு செல்வது ஒன்றாகும். மற்றைய பாதிப்பு வடக்கும் கிழக்கும் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்டிருந்தாலும், மொழியும் கலாச்சாரமும் கலந்த ஒரு தமிழ்த் தேசியத்திற்கு எதிராக விதைக்கப்பட்ட ‘குண்டுகள்’ மீண்டும் பலமாக வெடித்தெழும்பும் போது தற்போது வந்துள்ள இந்த இளைய தலைமுறை அரசியல் செயற்பாட்டாளர்களும் சேர்ந்து இல்லாமல் ஆக்கப்படுவார்கள். இதுவே நாம் இன்னும் சில ஆண்டுகளில் காணப்போகின்ற மோசமான மாற்றங்களாகும்