-மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு.
(மன்னார் நிருபர்)
(06-03-2021)
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் சௌபாக்கிய கொள்கையின் கீழ் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘நீர்ப்பாசன செழிப்பு’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக் கட்டுகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் இன்றைய தினம் சனிக்கிழமை (6) காலை மன்னார் மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 138 குளங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கோரைக்குளம் மறுசீரமைப்பு பணிகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் குறித்த அபிவிருத்தி பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல், மன்னார் பிரதேசச் செயலாளர், நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர், மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவித் திட்ட பணிப்பாளர்,நீர்ப்பாசன பொறியியலாளர்கள், கமநல அபிவிருத்தி ஆணையாளர், பிரதம பொறியியலாளர், கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தாராபுரம் கோரைக்குளம் மறுசீரமைப்பு பணிகளுக்காக சுமார் 44 இலட்சத்து 50 அயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை மாந்தை மேற்கு முசலி ஆகிய பிரதேச்ச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட குளங்கள் மறுசீரமைப்பு செய்வதற்காக ஆரம்ப நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.