கனடா தேசத்தின் ஸ்காபுறோ நகரில் நாஸ்ரின் வீதியில், கடந்த பல வருடங்களாக இயங்கிய வண்ணம் ஆன்மீகப் பணியாற்றிவரும் மேல்மருவத்தூர் ஶ்ரீ ஆதிபராசக்தி குரு மன்றத்தின் இயக்குனர் சபையின் ஏற்பாட்டில் அருட் திரு பங்காரு அடிகளாரின் 81வது அவதாரத்தின விழா இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது.
மன்றத்தின் ஸ்தாபகர் சக்தி ஞானம்மா திருநாவுக்கரவு அவர்களின் தலைமையில் மன்றத்தில் அங்கத்தவர்களாக விளங்கும் சக்திகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
காலை தொடக்கம், சக்திகள் பலர் மன்றத்தின் வழிபாட்டு மண்டபத்திற்கு ஆர்வத்துடனும் பக்தியுடனும் வருகை தந்து அரசாங்கத்தின் நோய்த் தொற்று தொடர்பான கட்டுப்பாடுகளைப் பேணிய வண்ணம் வழிபாடுகளிலும் பூசை மற்றும் அபிசேகங்கள் ஆகியவற்றிலும் பங்கெடுத்து வெளியேற மேலும் சக்திகள் வருகை தந்தனர்.
தொடர்ச்சியான இடம்பெற்ற அபிசேகங்கள் மற்றும் பூசைகள் ஆகியவற்றிக்கு இடையில் சக்தி ஞானம்மா திருநாவுக்கரசு மற்றும் சக்தி யோகநாதன் ஆகியோர் அடிகளாரின் தவத்தின் வலிமை மற்றும் அவர் தன்னை நேசிக்கும் சக்திகளுக்காக செய்யும் ஆன்மீகச் சேவைகள் சமூக சேவைகள் ஆகியவற்றை எடுத்துரைத்தனர். பல சக்திகள் தமிழ்நாட்டில் மேல்மருவத்தூர் பதியில் எழுந்தருளியிருக்கும் அன்னை ஆதிபராசக்தியின் ஸ்தலத்திற்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்ததன் பேரில் விமானப் பயணங்கள் மீண்டும் ஆரம்பித்ததும் இந்த ஏற்பாடுகளை கவனிக்கலாம் என்றும் அங்கு தெரிவிக்கப்பெற்றது.
அடிகளாரின் அவதாரத்திருவிழா பற்றிய தகவல்களை கேள்வியுற்ற பல அடியார்கள் ஆலயத்திற்கு வந்து வெளியில் நின்று வழிபாடு செய்து விடைபெற்றனர்.
இறுதியில் பங்காரு அடிகளாரின் 81வது அவதார தினத்தை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு அங்கு வந்திருந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பெற்றது.
(தகவல்:- சத்தியன்)