“கனடாவில் தமிழ்ப் பெண்களின் வளர்ச்சி அபாரமானது. பொதுவாகவே கனடாவிற்கு குடியேறிய தென்னாசிய மக்கள் தங்கள் வாழ்க்கையில் உறுதியான தளத்தை பதித்துள்ளார்கள். அவர்களின் இங்கு நான் சந்திக்கின்ற பல தமிழ்ப் பெண்கள் , தலைமைத்துவத்திலும், வர்த்தகத் துறையிலும் தலை சிறந்து விளங்குகின்றார்கள்.
பலர் கனடிய மத்திய அரசாங்கம் வழங்குகின்ற வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையில் உயர்ந்துள்ளார்கள். எனவே இன்றைய உலகப் பெண்கள் தினவிழாவை கொண்டாடுகின்ற கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்திற்கும், அதில் அங்கம் வகித்து பெண்களின் சிறந்த தலைமைத்துவத்தை நிரூபிக்கும் பெண் இயக்குனர்களையும் நான் பாராட்டுகின்றேன்.
அத்துடன் இன்றைய விழாவில் கலை நிகழ்ச்சிகளையும் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் உரையாற்றிய அனைவரையும் பாராட்டி கனடிய அரசு சார்பான வாழ்த்தையும் கூறுகின்றேன்” இவ்வாறு தெரிவித்தார் கனடிய மத்திய அரசில் சிறு தொழில் அமைச்சராகவும் சர்வதேச ஒத்துழைப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சருமான Hon Mary Ng அவர்கள்.
நேற்று மாலை கனடாவில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘உலகப் பெண்கள் தின’ விழாவில் சிறப்புரையாற்றிய அவர் தொடர்ந்து பேசுகையில்
” தற்போதைய கோவிட்-19 பாதிப்புக் காரணமாக ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றார்கள். பெண்களின் தொழில் மற்றும் வர்த்தகம் தொடர்பான தீர்வினை வழங்கும் வகையிலும் எமது அரசாங்கம் பல திட்டங்களை வகுத்துள்ளது” என்றார்.
மேற்படி விழாவை லைடா உலகநாதன் தொகுத்து வழங்கினார். கனடாவின் மற்றுமொரு லிபரல் பாராளுன்ற உறுப்பினர் Marci Ien அவர்களும் தமிழர் ச மூகத்தின் அரசியல் பிரமுகருமான நீதன் சாண் உட்பட பலர் உரையாற்றினர்கள்.
இளையவயதுப் பாடகி செல்வி றெசெல் ரெமிசியர் தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் கனடிய தேசிய கீதம் ஆகியவற்றை இசைத்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார்.
ரமணா ராஜசேகரன், நட்சா நரேஸ் ஆகியோர் முறையே நடனத்தையும் ஆங்கிலப் பாடலையும் அற்புதமாக வழங்கிச் சென்றார்கள். செல்வி பிரணவி அருளானந்தம் இனிய புல்லாங்குழல் இசையை வழங்கினார். செல்வி கிரிசாலினி பரதன் சமூக ஊடங்கள் மூலமாக பெண்கள் தங்கள் வர்த்தகத்தை பரவலாக்கலாம் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
இறுதியில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்த பல பார்வையாளர்களுக்கு அதிஸ்டக் குலுக்கலின் மூலம், பரிசுப் பொருட்கள் வழங்கப்பெற்றன. இந்த அதிஸ்டக் குலுக்களை வர்த்தக சம்மேளனத்தின் உப-தலைவர்களில் ஒருவரான திருமதி கிறிஸ்டின் சீவரட்ணம் நடத்தினார்.
இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சம்மேளத்தின் தற்போதைய தலைவர் திரு சாந்தா பஞ்சலிங்கம் தலைமையிலான குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.