இலங்கையின் மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தும் நாடகத்தை தோட்டக் கம்பனிகள் முன்னெடுப்பதை அவதானிக்க முடிகிறது. அதன் அடிப்படையில்தான் கடந்தவாரம் தோட்ட துரைமார் ஹட்டனிலும் பண்டாரவளையிலும் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
முதல்முறையாக தொழிலாளர்களுக்கு எதிராக தோட்ட நிர்வாகத்தினர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தோட்ட மக்களை அச்சுறுத்தி அடக்கும் வகையில் செயற்படுகின்றனர்.
வெள்ளைக்காரர்களை போன்று தோட்டங்களை கட்டுப்படுத்தி நிர்வகிக்க அரசாங்கமும் தோட்ட நிர்வாகமும் இணைந்து செயற்படுகின்றனவா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக நிறுத்த உரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தும் நோக்கில் கம்பனிகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாக்கிழமை நடைபெற்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரண சட்டம் தொடர்பான ஒழுங்குவிதியும் வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஓல்டன் தோட்டத்தில் 32நாட்களுக்கு மேலாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்தினருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக கடந்த 32நாட்களாக தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள 08பெண் தொழிலாளர்கள் போகம்பர சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தை பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் கவனத்துக்கும் கொண்டுவந்துள்ளேன்.
தோட்டத்திலுள்ள துரைமார் தொழிலாளர்களை தாக்கியதிலேயே இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட முறுகல்கள் காரணமாக தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக இந்த பிரச்சினையை தீர்த்துவைக்க முற்பட்ட போதிலும் கம்பனிகள் பேச்சுவார்த்தைக்கு வராது தான் தோற்றித்தனமாக நடந்துக்கொள்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பில் ஹட்டன் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்திருந்த ஜனாதிபதி சட்டத்தரணியொருவர் நுவரெலியாவில் பயங்கரவாதம் தலைத்தூக்கியுள்ளதாக கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் இங்குமுள்ளனர் என்ற கோணத்தில் அவரது வாதம் அமைந்திருந்தது.”என்றார்.