கோவிட்-19 தடுப்பு மருந்துகள் அனுப்பியதற்காக இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் கனடா: கனடிய பெருந்தெருக்களில் நன்றி தெரிவித்து ஒளியூட்டும் டிஜிட்டல் பதாகைகள்
கனடியப் பிரதமரும் கனடிய அரசாங்கமும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கனடாவிற்கு அரை மில்லியன் கோவிட்-19 தடுப்பு மருந்துக் குப்பிகளை அனுப்பியதற்காக இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் செய்திகளை கனடியப் பிரதமர் மற்றும் கனடிய அமைச்சர்கள் ஆகியோர் அனுப்பியுள்ளதாக எமக்குக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளையில் சில கனடிய பெருந்தெருக்களில் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒளியூட்டும் டிஜிட்டல் பதாகைகள் அழகிய முறையில் மக்கள் பார்ப்பதற்காக நிறுத்திவைக்கப்பட்டுதாகவும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
கனடிய அரசு கேட்டுக்கொண்டதற்கு அமைய இந்திய அரசு 2 மில்லியன் கோவிட்-19 மருந்துக் குப்பிகளை வழங்க சம்மதம் தெரிவித்திருந்ததாகவும், இந்தியப் பிரதமர் இது தொடர்பாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களுக்கும் தொலைபேசி மூலமான உரையாடலின் போது மகிழ்ச்சியுடன் தெரிவித்ததாகவும் அறியப்படுகின்றது.
இந்தியாவின் AstraZeneca நிறுவனத்தின் தயாரிப்பான இந்த கோவிட்-19 தடுப்பு மருந்தை கனடிய சுகாதாரப் பணியகத்தின் மருத்துவ விஞ்ஞானிகள் அங்கீகரித்த பின்னரே முதற்கட்ட தடுப்பு மருந்துகள் கடந்த 4ம் திகதி கனடாவிற்கு விமானம் மூலமாக அனுப்பப்பட்டன. அவற்றை ஓக்வில் தொகுதி பாராளுமன்ற உறுப்பிரும் கனடாவின், பொதுச் சேவைகள் மற்றும் அரச கொள்வனவு அமைச்சரான அனிற்றா ஆனந்த் அவர்கள் நேரடியாக பொறுப்பேற்றார். இவர் இந்தியாவின் தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.