இலங்கைக்கு மேலும் ஒரு காலநீடிப்பினை வழங்கி, பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவினை முற்றாக நிராகரிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தெரிவித்துள்ளது.
மேற்படி விடயம் தொடர்பாக அதன் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில் , “நீதிக்காக போராடும் தமிழர் தேசத்துக்கு இது பெருத்த ஏமாற்றத்தை தருவதாக அமைகின்றது” எனவு தெரிவித்துள்ளது.
.இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில்,
“தீர்மானம் என அமைந்த முதல் வரைவு தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருவாக அமைந்திருந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் என கோரியிருந்தனர்.
ஆனால் நேற்று வியாழக்கிழமை ( 11-03-2021) , வாக்கெடுப்பு நோக்கிய தமது தீர்மான வரைவினை பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகள் சமர்ப்பித்திருந்தன. எதிர்வரும் 22,23ம் தேதிகளில் வாக்கெடுப்புக்கு வரலாம் என கூறப்படுகின்றது.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கைக்கு மேலும் ஓர் காலநீடிப்பினை வழங்குவதாகவே தீர்மான வரைவு அமைந்துள்ளதோடு, பொறுப்புக்கூறலை நீர்த்துப்போகச் செய்வதாகவும் அமைகின்றது. இதனை முற்றாக நிராகரிக்கின்றோம். நீதிக்காக ஏங்கும் தமிழர் தேசத்துக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தையும் இது தருகின்றது.
அரசுகள் தாம் ஓர் தரப்பாக எடுகின்ற முடிவுகள் தொடர்பில், அரசற்ற இனங்கள் சந்திக்ககூடிய, எதிர்கொள்ளக்கூடிய சவால்களை இது வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. புவிசார் அரசியல் வெளியில் நம்மை ஒரு தரப்பாக மாற்ற வேண்டிய மூலோபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தினையும் இது உணர்த்துகின்றது.
எமக்கான நீதியினை வென்றெடுப்பதற்கு ஜெனீவாவுக்கு அப்பாலும், புதிய புதிய களங்களை நோக்கி நாம் செயற்பட வேண்டியவர்களாக இருப்பதோடு, ஐ.நாவில் வாக்கெடுப்புக்கு முன்னராக தீர்மான வரைவில் திருத்தங்களை கொண்டுவரக்கூடிய தீவிரமான செயல்முனைப்பிலும் ஈடுபடவுள்ளோம் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.