ஒன்ராறியோவின் தடுப்பூசி வழங்கலின் முதற் கட்டம் சிறப்பாக நடைபெற்று வருவதுடன், 820,000 தடுப்பூசி மருந்துகள் பல பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டு வரும் துரிய நடவடிக்கைகளை நேரடியாகச் சென்று கவனித்து வருகின்றார் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக்போர்ட் அவர்கள். அவரோடு சம்பந்தப்பட்ட தொகுதிகளின் மாகாண சபை உறுப்பினர்களும் சென்றுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதுவரை 269,000 இற்கும் மேற்பட்ட ஒன்ராறியோ வாழ் மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. பெரும்பாலும் நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கான தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் கணிசமான அளவு பூர்த்தியடைந்துள்ளது. நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்களில் ஏறத்தாழ 80 சதவிகிதமான மக்கள் மேற்படி தடுப்பூசியின் மூலம் நோயெதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளனர். மொத்தமாக விநியோகிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையில் ஒன்ராறியோ முன்னணியில் உள்ளதுடன், அனைத்து மானிலங்களுடனும் ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி வழங்கிய மானிலமாகவும் ஒன்ராறியோ விளங்குகிறது.- இவ்வாறு தெரிவித்துள்ளது முதல்வரின் அலுவலகம்.
பொதுமக்களுக்கான நோய்த் தடுப்பூசி வழங்கலை இலகுபடுத்தும் விதத்தில் மார்ச் 15 முதல், ஒன்ராறியோ மானிலம் இணையவழி மூலமான முன்பதிவு, வாடிக்கையாளர் சேவை மற்றும் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தல் போன்ற சேவைகளை வழங்கவுள்ளது. ஏற்கனவே சில பொது சுகாதார அலகுகள் தற்போது 80 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகளை வழங்குவதற்கு தமது சொந்த முன்பதிவு முறையினைப் பயன்படுத்தி வருகின்றன. மானில அளவிலான மேற்படி முன்பதிவு முறை நடைமுறைக்கு வந்ததும் பெரும்பாலான பொது சுகாதார கட்டமைப்புகள் இந்நடைமுறைக்கு மாறும்.
மார்ச் மாத இறுதிக்குள் தடுப்பூசி மருந்து வழங்கல் சீரான நிலையினை அடைவதோடு மத்திய அரசிடமிருந்து கோவிட்-19 தடுப்பூசி மருந்துகள் இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக வந்தடைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இச்செயற்பாடு நிறைவடையும்போது ஒன்ராறியோ மானிலம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தினை அடையும். ஏப்ரல் 2021 முதல் ஜூலை 2021 வரையான காலத்தில் ஒன்பது மில்லியன் ஒன்ராறியோ வாழ் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும்.
இரண்டாம் கட்டத்தின்போது, தடுப்பூசி பெற முன்னுரிமையுள்ளவர்கள் பின்வருமாறு:
– 60-79 வயதுக்குட்பட்ட முதியவர்கள்,
– குறிப்பிட்ட சில உடல்நல பாதிப்புகளையுடையவர்கள் அல்லது வேறொருவரை பராமரித்துவரக்கூடியவர்
– சமூக அமைப்புகளில் பணிபுரிபவர் அல்லது அது தொடர்பான கட்டமைப்புகளில் வாழும் நபர் அல்லது வேறொருவரைப் பராமரித்து வரக்கூடிய நபர்,
– அதிக நோய்த்தொற்றுக்குள்ளான பகுதிகளில் வாழும் மக்கள்,
– வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாது பணியிடங்களுக்கு கட்டாயம் செல்லவேண்டிய நிலையிலுள்ள பணியாளர்கள்.
விஜய் தணிகாசலம், ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர்
ஸ்காபரோ – றூஜ் பார்க் தொகுதி