கனடா வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு விண்ணப்பம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 22ஆம் திகதி முதல் இந்த மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் இலங்கை தொடர்பாக கடுமையான தீர்மானம் ஒன்று வரையப்படுவதற்கு முத்தாய்ப்பு வைக்கும் தொனியில் கடந்த ஜனவரி 27ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் 17 பக்கங்கள் அடங்கிய நீண்ட அறிக்கையொன்றில் தனது பரிந்துரைகளை வெளியிட்டிருந்தார்.
அப்பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழர் தரப்பு சார்பாக கனடா எவ்வாறு முடிவுகளை எடுக்க வேண்டும் கனடாவின் கடமைப்பாடு என்ன என்பதனையும் தமிழர் தரப்பின் கோரிக்கைகளையும் உள்ளடக்கி கனடிய வெளிவிவகார அமைச்சருக்கு மனு ஒன்று அனுப்பப்பட்டு அம் மனுவானது கனடிய அரசாங்க இணையத்தளத்தில் பொதுமக்கள் கையொப்பத்திற்காகத் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இம் மனுவானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி பாராளுமன்ற லிகிதரால் கோப்பினுள் பதியப்பட்ட பின் அந்த மனுவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஒப்புக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினரான என்.டீ.பி கட்சியைச் சார்ந்த ஹெதர் மக்பெர்சன் (Heather McPherson ) இடம் கையளிக்கப்படும்.
அதன்பின் பாராளுமன்ற உறுப்பினர் அந்த மனுவினை சபையில் வாசித்து இது தமிழ் தரப்பின் கோரிக்கை என்பதை தெரிவித்ததன் பிற்பாடு மனு வாசிக்கப்பட்ட 45 நாட்களுக்குள் அந்த மனுவில் கேட்கப்பட்டிருக்கும் கோரிக்கைகளுக்கான பதிலை மனுதாரருக்கு வழங்குவதற்கு அரசாங்கம் சட்டப்படி கடமைப்பட்டுள்ளது.
மனுவில் முக்கியமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீலங்காவின் நிலைமைகளைப் பாரப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கின்ற விடயம் உள்ளடக்கப்பட்டு இருப்பதுடன் அதே குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீலங்காவின் நிலைமைகளைப் பாரப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று மனித உரிமைகள் ஆணையாளர் தன்னுடைய அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறையில் கனடாவின் முக்கியத்துவம்
- இந்த நீதிமன்றம் உருவாக்கப்படும் போது அதன் உருவாக்கத்தில் கனடா முக்கிய பங்கினை வகித்திருக்கிறது
- கனடாவில் தான் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள்.
- ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவிற்கான இணைத் தலைமை நாடுகளில் ஒன்றாகக் கனடா இருக்கின்றது.
பதப்பிரயோகங்களும் வரைவிலக்கணமும்
தற்கால மனித உரிமைகளுக்கான சர்வதேச சட்டத்தில் மனித உரிமைகள் பாதிக்கப்படும் வகையில் இழைக்கப்படும் குற்றங்கள், இனவழிப்பு, மனுக்குலத்திற்கெதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், சர்வதேசக்குற்றங்கள், சர்வதேச அட்டூழியக் குற்றங்கள், பாரிய அட்டூழியக் குற்றங்கள் என்ற பதங்களும் அவ்வப்போது பயன்படுத்தப்படுகின்றன.
இனவழிப்பு, மனுக்குலத்திற்கெதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் ஆகிய மூன்று குற்றங்களும் ஒருங்கே இடம்பெறும் போது – அவை மூன்றையும் உள்ளடக்கிய குற்றத்தினை சர்வதேசக்குற்றங்கள், சர்வதேச அட்டூழியக் குற்றங்கள், பாரிய அட்டூழியக் குற்றங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் வரைவிலக்கணம் தெரிவிக்கின்றது.
இந்த வரைவிலக்கணத்தின் அடிப்படையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் சர்வதேசக் குற்றங்கள் என்ற பதத்தினைப் பயன்படுத்தியுள்ளார். எமது வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பட்ட மனுவும் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளை மேற்கோள் காட்டியும் அவர் பயன்படுத்தியுள்ள பதங்களையும் பயன்படுத்தியே தயாரிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த மாதம் குற்றவியல் நீதிமன்ற விவகாரத்தை முன்னிலைப்படுத்தி தரவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த மனுவிற்கு உரிய பதிலை தருவது மட்டுமல்லாமல் அந்த மனு சார்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் கடமைப்பாடும் கனடாவுக்கு இருக்கின்றது ஆகவே இந்த மனு இப்பொழுது இணையவெளியில் மக்களின் கையொப்பதிற்காகத் தரவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது
இதுவரை 664 கையொப்பங்கள் இடப்பட்டிருந்தாலும் 5 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றோம் என்று மார்தட்டி சொல்லப்படுகின்ற ஒரு நாட்டில், குறைந்தபட்சம் மூன்று லட்சம் மக்களாவது கையொப்பமிட்டுள்ளார்கள் என்று பதிவாகும் போது தான் எமது தேசத்தின் விடுதலைக்கு ஆதரவாகவும் நமது இனத்தின் மீட்புக்கு ஆதரவாகவும் மூன்று லட்சம் மக்கள் கையொப்பமிட்டு இருக்கிறார்கள் என்பதை கனடிய அரசு புரிந்து கொள்ளும்.
எதிர்வரும் 11ஆம் தேதி வரை பொதுமக்கள் கையொப்பம் இடுவதற்காக மனுக்களுக்கான அரசாங்க இணையத்தளத்தில் இந்த மனு தரவேற்றம் செய்யபட்டுள்ளது.
ஆகவே இந்த செய்தியை படிக்கும் நீங்கள் இந்தக் கணத்திலிருந்து நீங்களும் கையொப்பமிட்டு அதை மற்றவர்களுக்கும் தெரிவித்து அவர்களும் கையொப்பம் இடுவதற்கு அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
கையொப்பம் இடுவதற்கான இணையத்தள முகவரியுடன், அனுப்பப்பட்டிருக்கும் மனுவின் தமிழாக்கமும் மனுவில் எவ்வாறு கையொப்பமிடுவது என்ற விபரமும் கீழே தரப்பட்டுள்ளது.
கனடிய வெளி விவகார அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவின் தமிழாக்கம்
- கனடா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான இணைக் குழுவில் உறுப்பினராக உள்ளது
- இலங்கைக்கான அறிக்கையை ஜனவரி 27, 2021 அன்று சபையின் ஆணையாளர் வெளியிட்டார்.
- அறிக்கையின் 59 வது பந்தியில், இலங்கையின் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆணையாளர் உறுப்பு நாடுகளை கேட்டுக்கொள்கிறார்.
- இதற்கு முன்னர் இரண்டு முறை, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் (UNHRC) உள்நாட்டு பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு தனது ஆதரவைக் கொடுத்துள்ளது, இதன் உச்ச பலனாக 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தும், அதிலிருந்து மார்ச் 2020 இல் இலங்கை ஒருதலைப்பட்சமாக விலகியது.
- சர்வதேச குற்றங்கள் மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு ஒரு அர்த்தமுள்ள வழிமுறையைப் பின்பற்ற இலங்கை இப்போது அதன் இயலாமை மற்றும் விருப்பமின்மையை நிரூபித்துள்ளது என்பதை ஆணையாளர் சுட்டிக்காட்டுகிறார்.
- மார்ச் 2011 இல், ஐ.நா. பொதுச்செயலாளரின் நிபுணர் குழு மற்றும் இலங்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பான உள்ளக மீளாய்வுக் குழு ஆகியன, 2009 ல் முடிவடைந்த போரின் இறுதி ஆறு மாதங்களில் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் 70,000 பேர் வரை கணக்கிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளன மற்றும்
- இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தத் தவறுதல், தமிழர்களுக்கு எதிரான சர்வதேச அட்டூழியக் குற்றங்களைத் தடையின்றி தொடர்வதற்கான துணிவை மேலும் வலுவூட்டம்.
கீழே , கையொப்பமிட்டுள்ள, கனடிய குடிமக்கள் மற்றும் கனடாவில் வசிப்பவர்கள், ஆகிய நாம் வெளியுறவு அமைச்சரைக் கேட்டுக் கொள்வதாவது
- எதிர்வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் 2021 அமர்வுகளில் சர்வதேச அட்டூழியக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க உத்தரவாதம் அளிக்கக்கூடிய, ஒரு புதிய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில், ஏனைய உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறும் வகையில் இணைக் குழுவின் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்.
- புதிய தீர்மானம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான வழிமுறைகளை உள்ளடக்கியிருப்பதை உறுதிசெய்க மற்றும்
- புதிய தீர்மானம் பாரிய அட்டூழியங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்வதுடன் பரிகார நீதியாகத் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்குச் சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பங்களிப்புடன் ஒரு பொதுசன வாக்கெடுப்பை முன்மொழிய வேண்டும்,
மனுவில் கையொப்பமிடும் முறை:
முக்கிய குறிப்பு
மனுவில் ஒப்பமிடும் போது நீங்கள் வழங்கும் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படமாட்டா என்று கனடிய அரசு உறுதி செய்துள்ளது.
மனுவிற்கான இணையத்தள முகவரி
https://petitions.ourcommons.ca/en/Petition/Details?Petition=e-3168
மேலே தரப்பட்டுள்ள முகவரயில் வெ.வி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனுவும் அதன் முடிவில் Sign the petition எனும் அழுத்தியும் காணப்படும். அவ் அழுத்தியை அழுத்திய பின் வரும் பக்கத்தில்
உங்கள் முதற்பெயர, கடைப் பெயர், மின்னஞ்சல், தொலைபேசி இலக்கம் மற்றும் நீங்கள் வாழ்கின்ற நாடு, மாநிலம், உங்கள் தபால் குறியீடு (Postal Code) ஆகியவற்றை பொருத்தமான பெட்டிகளுக்குள் நிரப்புங்கள்
அடுத்து அதன் கீழே இருக்கும் மூன்று கேள்விகளில் முதல் இரண்டு கேள்விகளுக்கும் சரி அடையாளத்தை இடுங்கள்.
அதன் பின் கீழ் உள்ள (Captcha) எழுத்துக்களை அவை எப்படி இருக்கின்றனவோ அவற்றைப் போலவே அவற்றுக்கான பெட்டிக்குள் நிரப்புங்கள்
அதன் பின்பு (Sign) என்கின்ற பெட்டியை அழுத்தினால் நீங்கள் தான் கையொப்பம் இட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நோ ரிப்ளை (No reply) எனும் முகவரியிலிருந்து உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு மின்னஞ்சல் வரும்.
அதி கூடிய பட்சம் ஐந்து நிமிடங்களுக்குள் இந்த மின்னஞ்சல் உங்களுக்கு கிடைக்கும்.
அந்த மின்னஞ்சலில் “Please confirm your support to complete the process” என்ற இணைப்பினை நீங்கள் அழுத்தினால் உங்களுக்கான வாழ்த்துச் செய்தியுடன் நீங்கள் இட்ட கையொப்பம் கணக்கில் சேர்க்கப்படும்.
ஆகவே, இதனை கருத்தில் கொண்டு நீங்கள் மனுவில் கையெழுத்திட்ட பின் நின்றுவிடாமல் உங்கள் மின்னஞ்சலையும் திறந்து அந்த இணைப்பினை அழுத்தி உங்கள் கையொப்பத்தை உறுதிப்படுத்துங்கள்.
இங்ஙனம்
ஏற்பாட்டாளர்கள்
Meeting Registration Approved
Topic
An Intimate Conversation with PC Leader Doug Ford, hosted by Vijay Thanigasalam
Time : Mar 11, 2021 07:00 PM in Eastern Time (US and Canada)
Add to calendar
Meeting ID: 986 3319 9426
To Join the Meeting
Join from a PC, Mac, iPad, iPhone or Android device:
Please click this URL to join. www.shorturl.at/enwA6
To Cancel This Registration
You can cancel your registration at any time.