“இலங்கையில் 2009ம் ஆண்டும் அதற்கு முன்னரும் பின்னரும், இலங்கை வாழ் தமிழினத்தின் மீது இலங்கை அரசு நிகழ்த்திய போர்க்குற்றங்களுக்கு உரிய குற்றவாளியான இலங்கை அரசை தண்டிப்பதற்கு கனடாவிலும் குறிப்பாக ஒன்றாரியோவிலும் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் எனது அரசு ஆதரவு வழங்கும். எமது அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக உள்ள விஜேய் தணிகாசலம் அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கும் தமிழ் மக்கள் எடுக்கும் முயற்சிகளுக்கும் எமது அரசு தனது ஆதரவை வழங்கும்”
இவ்வாறு தெரிவித்தார் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்கள்.
நேற்று வியாழக்கிழமை மாலை இணையவழி மூலமாக நடத்தப்பெற்ற ‘ஒன்றாரியோ முதல்வருடன் நெருக்கமான உரையாடல்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட முதல்வர் அவர்கள் அங்கு கலந்து கொண்ட பல தமிழர் சமூகத்தின் பிரதிநிதிகளோடு மனந்திறந்து உரையாடினார். அதேவேளை அவர்கள் முன்வைத்து கேள்விகளுக்கும் தகுந்த பதில்களை நேர்மையுடன் வழங்கினார்.
‘ஒன்றாரியோ முதல்வருடன் நெருக்கமான உரையாடல்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற மேற்படிக் கலந்துரையாடலை ஸ்காபுறோ ரூஜ்பார்க் தொகுதியின் மாகாண அரசின் உறுப்பினர் விஜேய் தணிகாசலம் ஏற்பாடு செய்து வழி நடத்தினார்.
முதலில் அவர் உரையாற்றும் போது “எமது ஒன்றாரியோ அரசானது இந்த நெருக்கடியான கோவிட்-19 தொற்று காலத்திலும் மக்களுக்கு நல்ல பணியை ஆற்றுகின்றது. குறிப்பாக ஸ்காபுறோவில் உள்ள பல தொகுதி வாழ் மக்கள் வாழ்த்தும் வண்ணம் பல அரிய பணிகளைச் செய்துள்ளது. நிலக்கீழ் புகையிரத சேவைகளை ஸ்காபுறோ நகரின் எல்லை வரை நீடித்து அதனை இன்னும் இரண்டு வருடங்களில் பூர்த்தி செய்வது போன்ற பல திட்டங்களை எமது அரசாங்கம் நிறைவேற்றி வைப்பதில் மிகவும் நேர்மையுடன் செயற்பட்டு வருகின்றது.
இதற்கெல்லாம் காரணகர்த்தாவாக விளங்குகின்றன எமது முதல்வரை எமது தமிழர் சமூகத்தின் பிரதிநிதிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களோடு நேரடியாக உரையாடுவதற்கு சம்மதம் தெரிவித்த அவருக்கு எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன்” என்றார்
தொடர்ந்து அங்கு கலந்து கொண்ட அனைவருக்கும் தனது நன்றியைக் கூறி தனது உரையை ஆரம்பித்த ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்கள் பின்வருமாறு கருத்துக்களை வழங்கினார்.
” அன்பான தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளே, நண்பர்களே, உங்களைச் சந்திக்கும் வகையில் இந்த இணையவழி கலந்துரையாடலை ஏற்பாடு செய்த எமது மாகாண அரசின் உறுப்பினர் விஜேய் தணிகாசலம் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன்.
அவர் எங்கள் குழுவின் முக்கியமான ஒரு பங்காளியாக மாறிவிட்டார். பல பணிகளை விருப்பத்துடன் பொறுப்பேற்று திறம்பட தனது பணிகளைச் செய்து வருகின்றார்.ஓய்வின்றி இந்த மாகாணத்திற்காகவும் வாக்காளர்களாகிய உங்களுக்கும சேவையாற்றுவதில் மகிழ்ச்சியடைகின்றார்.
ஸ்காபுறோ நகரத்தை பல ஆண்டுகளாக மத்திய, மாகாண மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்கள் புறக்கணித்து வந்தன. ஆனால் தற்போது எமது அரசாங்கம் ஸ்காபுறோவின் அனைத்துப் பகுதிகளுக்கும் பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
முக்கியமாக நிலக் கீழ் புகையிரப் பாதைகள் ஸ்காபுறோவின் பல பகுதிகளை இணைக்கின்றது. அத்துடன் இங்குள்ள வைத்தியசாலைகள் சில இயங்க முடியாத சூழ்நிலையில் இருந்தபோது எமது அரசு நிதியை வழங்கி, அந்த வைத்தியசாலைகளை தொடர்ந்து இயங்கவைத்தது.
இதே போன்று பாடசாலைகளில் பயிலும் மாணவ மாணவிகள் தங்கள் கற்கும் நேரத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்கவும் தகுந்து பாதுகாப்புக் கருவிகளை அணிந்து தற்போதைய கோவிட்-19 நோயின் தாக்கத்திற்கு உள்ளாகாமல் பாதுகாக்கின்றது. எமது தற்போதைய கல்வி அமைச்சர் இந்த பணியைச் சிறப்பாகச் செய்கின்றார். அவருக்கும் எமது அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும் துணண்யாக உங்கள் உறுப்பினர் விஜேய் தணிகாசலம் அவர்கள் மிகுந்த சிரத்தையுடன் பணியாற்றி வருகின்றார்” என்று குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் ஒன்றாரியோவில் உள்ள தமிழர் அமைப்புக்களின் தேவைக்காக நிதியை வழங்குவதிலும் எமது அரசு எப்போதும் தயங்காது என்ற வாக்குறுதியை வழங்கினார். தமிழ்ச் சமூகத்தில் வர்த்தகம், பொதுப்பணி போன்ற துறைகளில் ஈடுபாடு கொண்ட பல வெற்றியாளர்கள் அங்கு கலந்து கொண்டு முதல்வர் அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.