இந்தியாவில் எதிர்க்கட்சிகளை உடைத்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, ஜனநாயகத்துக்குப்புறம்பாக ஆட்சிகளை கவிழ்ப்பது, கருத்துரிமையை நசுக்குவது, சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல், ஒற்றை மதம், ஒற்றை கலாசாரம், ஒற்றை மொழி என மோசமான சூழல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சர்வதேச நாடுகளில் பத்திரிகை சுந்தந்திரம் எப்படி கடைபிடிக்கப்படுகிறது என்பது தொடர்பாக, எல்லைகள் கடந்த செய்தியாளர்கள் அமைப்பு ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் இந்தியாவுக்கு 142-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. அப்படியானால் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் மிகவும் கேள்விக்குறியாகி, கவலைக்கிடமான நிலையில் இருப்பது அம்பலமாகியுள்ளது.
சர்வதேச அளவில் பத்திரிகை சுதந்திரம் எப்படி கடைபிடிக்கப்படுகிறது என்பது குறித்த தரவரிசைப்பட்டியலில் இந்தியா பின்தங்கி இருபதற்கான காரணங்கள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் கண்கானிப்பு பிரிவு சார்பில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னாள் ஐஐஎஸ் அதிகாரி குல்தீப் சிங் தத்வாலி தலைமை வகித்தார். நாட்டின் முக்கிய பத்திரிகையாளர் சாய்நாத் உட்பட அரசு அலுவலர்கள் இதில் கலந்துகொண்டனர்.
தேசத்துரோக வழக்கு
கூட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சாய்நாத் 12 பக்கங்கள் கொண்ட விரிவான கட்டுரையை விளக்கிப் பேசினார் அதில், “பத்திரிகை சுதந்திரத்தின் முக்கிய புள்ளியே கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை வழங்குவதுதான். சமகாலத்தில் நடைபெற்று வரும் சம்பவங்களை பதிவு செய்த பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் போராட்டங்கள் நடைபெறும் குறிப்பிட்ட பகுதிகளில் மாதக் கணக்கில் இணையவசதி துண்டிக்கப்படுகிறது. இதுபோன்ற பத்திரிகைகள் மீதான தடைகள் நீக்கப்படவேண்டும். கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை அரசு முடக்கக்கூடாது” என்றார்
கூட்டத்தில் பத்திரிகை நிறுவனத்தின் மீது வழக்கு தொடருவதற்கு முன்பு முன் இந்திய பிரஸ் கவுன்சிலின் ஒப்புதல் பெறவேண்டும் என்பது போன்ற பல முக்கிய முடிவுகள் எடுத்துரைக்கப்பட்டன.
–ரா. மணி,
திருநெல்வேலி