சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
`வெள்ளை வான்` எனும் வார்த்தை ஒரு காலத்தில் இலங்கையில் அச்சத்தின் மறுபெயராகவே இருந்தது. போர்க் காலத்தில் தமிழர் தாயகப் பகுதிகள் மற்றும் தலைநகர் கொழும்பில் வகைதொகையின்றி ஆட்கள் கடத்தப்படுவதும் பின்னர் அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாத நிலையும் வரலாற்றில் கறைபடிந்த பக்கங்கள்.
இப்படி கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சாமானியர்கள், அரச உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள் எனப் பட்டியல் நீளும்.
போர் முடிந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த மோசமான நடவடிக்கை தொடருவதாகக் கவலைகள் மீண்டும் எழுந்துள்ளன.
அவ்வகையில் இலங்கையின் தென்பகுதியில் ஒரு ஊடகவியலாளர் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ள செய்தி மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
நாட்டில் `கடத்தல் கலாச்சாரம்` மீண்டும் தனது கோர முகத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. கடந்த வாரம் (10 மார்ச்) தென்னிலங்கை ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார், என்று முன்னாள் சபாநாயகரும் அரசியல் யாப்பு பேரவையின் தலைவருமாக இருந்த கரு ஜயசூரிய கவலை வெளியிட்டுள்ளார்.
கறுப்பு நிற வாகனத்தில் இணையதள ஊடகவியலாளரான சுஜீவ கமகே என்பவர் கடத்தப்பட்டு, அவரது செய்தி மூலங்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும்படி, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கரு ஜயசூரிய சபாநாயகராக இருந்த போது அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும்-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, ரணில்-மைத்ரி தலைமையிலான நல்லாட்சியிலும் ஆட்கள் கடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள இணையப் பயன்பாட்டாளர்கள், அதற்கு கரு ஜயசூரியவின் பதிலென்ன? என்று வினவியுள்ளனர்.
இதனிடையே கடத்தல்களை “மீண்டும்” தொடங்க திட்டம் ஏதேனும் உள்ளதா என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
சுஜீவ கமகேவிடம், அவரது செய்தி மூலங்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் பற்றிய தகவல்களை தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவருக்காகக் குரல் எழுப்புவதில் ஊடகவியலாளர்கள் மத்தியில் ஐக்கியம் காணப்படாமை கவலையளிப்பதாக, முன்னாள் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடத்தல் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். அப்படிச் செய்வதன் மூலமே அதிகாரிகள் மீது நம்பிக்கை ஏற்படும் என்றும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் எனும் செய்தி இனிவரும் காலங்களில் இப்படியான நிகழ்வுகள் நடைபெறாது என்பதை உறுதி செய்யும் எனவும் கரு ஜயசூரிய கூறுகிறார்.
சுஜீவ கமகே கடத்தப்பட்ட பின்னர், அவரை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்று, கொடூரமாக சித்திரவதை செய்து அடித்து, அவரது கை மற்றும் மார்பு பிரதேசங்கள் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிகிச்சையின் பின்னர் அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தரவுகளைச் சேமித்து வைக்கும் இரண்டு பென் டிரைவ்கள் உட்பட அவரிடமிருந்து பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.