தற்காலிகமாக இரத்தம் சேகரிக்கும் பணி நிறுத்தம்
மன்னார் நிருபர்
16-03-2021
தலைமன்னார் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (16) மதியம் இடம் பெற்ற புகையிரத விபத்து காரணமாக காயம் அடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்திய சிகிச்சை பெற்று வருகின்றவர்களுக்கு தேவையான குருதி தட்டுப்பாடு வைத்தியசாலையில் நிலவி வந்தது.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் குருதி வழங்க மக்களிடம் கோரிக்கை விடுத்தது.
அதற்கு அமைவாக மன்னாரின் பல பகுதிகளில் இருந்து இளைஞர் யுவதிகள் உற்பட நூற்றுக்கணக்கானவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு வருகை தந்து குருதி வழங்கியுள்ளனர்.
குறித்த விபத்தில் 25ற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் இரத்தம் வழங்குவதற்கு தன்னார்வத்துடம் வருகை தந்து குருதி வழங்கியுள்ளனர்.
-எனினும் வைத்திய சாலையின் இன்றைய அவசர கால நிலை காரணமாக குறிப்பிட்ட அளவு குருதியே பெற்றுக்கொள்ளப்பட்டு இரத்தம் சேகரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இன்னும் இரத்த தேவை காணப்படுவதனால் நாளைய தினமும் மன்னார் பொது வைத்திய சாலையின் இரத்த வங்கியில் குருதி வழங்க முடியும் என தெரிவிக்கப்படுள்ளது.