யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
சில வாரங்களுக்கு முன் சூம் செயலியின் மூலம் நிகழ்ந்த ஒரு மெய்நிகர் கருத்தரங்கில் புலம்பெயர்ந்து வாழும் சிங்கள புலமைச்செயற்பாட்டாளரான யூட் லால் பெர்ணான்டோ ஒரு விடயத்தை அழுத்தமாகச் சொன்னார் “கடந்த பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வெற்றி எதையும் பெறவில்லை” என்று.
அவர் கூறியது உண்மையே என்பதைத்தான் கடந்த வாரம் பிரித்தானியாவில் சொதப்பலாக முடித்து வைக்கப்பட்ட உண்ணாவிரதம் நிரூபித்திருக்கிறதா?
பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பெண்மணி தனது உண்ணாவிரதத்தை இடையில் நிறுத்திக் கொண்டார். அவருடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறிக்கொண்டாலும் அவருடைய பிரதான கோரிக்கைகள் எவையும் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை என்பதே உண்மை. ஒரு கோரிக்கை மட்டும் ஓரளவுக்கு நிறைவேற்றப்படக்கூடும் என்ற தோற்றம் உத்தேச ஜெனிவா தீர்மான வரைபில் காணப்படுகிறது. சாட்சிகளையும் ஆதாரங்களையும் திரட்டுவதற்கான ஒரு பொறிமுறை பற்றியதில் கூறப்படுகிறது.ஆனால் அங்கேயும் கூட பிரச்சினை உண்டு. சிரியாவில் உருவாக்கப்பட்ட அத்தகைய ஒரு பொறிமுறை ஐநா.பொதுச்சபையில் கீழ்தான் உருவாக்கப்பட்டது.ஆனால் இங்கேயோ இலங்கை தீவில் அப்படி ஒரு பொறிமுறை எப்படி அமையும் என்பதைப் பற்றிய தெளிவான சித்திரம் கிடைக்கவில்லை. அது பெருமளவுக்கு மனித உரிமைகள் சபையின் கீழ்தான் அமையலாம் என்று விளங்கிக்கொள்ளப்படுகிறது.
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட சாகும் வரையிலான உண்ணா விரதங்கள் அனேகமானவை இப்படித்தான் முடிவடைந்தன. அந்த உண்ணாவிரதங்களை முன்னெடுத்த அனேகர் இறுதிவரை போராடி சாகத் தயாராக இருக்கவில்லை. அதற்காக இக்கட்டுரை உண்ணாவிரதிகள் சாகவேண்டும் என்று கேட்கவில்லை. ஆனாலும் சாகும் வரை உண்ணாவிரதம் எனப்படுவது ஒரு கடைசி ஆயுதம். அதை கையில் எடுப்பவர்கள் அந்தப் போராட்டத்தை இறுதிவரை கொண்டு போகக்கூடிய துணிச்சலும் திடசங்கற்பமும் மிக்கவர்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ் மக்களின் போராட்டங்களை உலகம் பகிடியாகவே பார்க்கும்.
அதேசமயம் அப்போராட்டத்தின் முடிவு தமிழ் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை உணர்த்தியிருக்கிறது. எனது கடந்த வாரக் கட்டுரையில் கூறியதுபோல தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வியை அது புதுப்பித்திருக்கிறது.தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தை முழு உலகத்தின் கவனத்தையும் இலங்கை அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்க்கத்தக்க விதத்தில் முன்னெடுப்பதற்கு ஒரு பொருத்தமான பொதுக்கட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. அவ்வாறான ஒரு கட்டமைப்பு இல்லாத வெற்றிடத்தில்தான் யார்யாரோ தமிழ் மக்களை
தத்தெடுக்கிறார்கள். யார்யாரோ தன்னார்வமாக போராடுகிறார்கள்.யார்யாரோ மக்கள் போராட்டங்களுக்கு உரிமை கோருகிறார்கள். அரசற்ற தமிழ் மக்களுக்கு உலகம் முழுவதும் எத்தனை அம்பாசிடர்கள்?
இதுதான் பிரச்சினை இந்த வெற்றிடத்தைத்தான் இடையில் நிறுத்தப்பட்ட மேற்படி உண்ணாவிரதமும் நிரூபித்திருக்கிறதா? எனவே கடந்த பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய போராட்டங்கள் குறித்து தொகுத்துப் பார்க்க வேண்டிய ஒரு கட்டாயம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. இந்த உண்ணாவிரதம் மட்டுமல்ல காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதம்; சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் முன்னெடுத்த உண்ணாவிரதம் உள்ளடங்களாக கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டங்களில் பெரும்பாலானவை ஜெனிவா கூட்டத்தொடரை மையமாகக் கொண்டவை. ஆனால் இப்போராட்டங்களின் விளைவாக ஜெனிவா தீர்மானங்களில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் திருப்திகரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை மட்டுமல்ல இப்போராட்டங்களின் விளைவாக அரசியல் கைதிகளையும் விடுவிக்க முடியவில்லை; காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை; நிவாரணமும் கிடைக்கவில்லை.
காணிகளுக்கான போராட்டம் தொடக்கத்தில் சில வெற்றிகளைப் பெற்றது. கேப்பாபிலவில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கான போராட்டத்தில் சில தொடக்க வெற்றிகள் கிடைத்தன. ஆனால் அதற்குப்பின் போராட்டங்களும் சோர்ந்து விட்டன. அதுமட்டுமல்ல இப்பொழுது நில ஆக்கிரமிப்பு புதிய வடிவத்தில் புதிய வேகத்தில் முன்னெடுக்கப்படுகிறது. அதைப்போலவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டமும் தெருவோரங்களில் கவனிக்கப்படாத ஒன்றாக மாறியிருக்கிறது. அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். ஆனால் அரசாங்கம் வழமையான நீதிமன்ற நடைமுறைகளின்படிதான் சில கைதிகளை விடுதலை செய்திருக்கிறது.
எனவே தொகுத்துப் பார்த்தால் கடந்த பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் மத்தியில் நடந்த எந்த ஒரு போராட்டமும் ஏன் இறுதி வெற்றியை பெறவில்லை என்ற கேள்விக்கு தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் கருத்துருவாக்கிகளும் விடைகாண வேண்டும்.
மேலும் கெடுபிடி போருக்குப் பின்னரான தகவல் புரட்சியின் விளைவாக ஏற்பட்டிருக்கும் சமூகவலைத்தளங்களின் காலத்தில் மக்கள் போராட்டங்கள் உலகம் முழுவதும் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன? அவற்றில் வெற்றி பெற்றவை எத்தனை? வெற்றி பெறாதவை எத்தனை? என்பது குறித்தும் ஒரு தொகுக்கப்பட்ட பார்வை அவசியம். சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட்ற்றை முற்றுகையிட்டு ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாதக்கணக்காக நடந்த அந்த போராட்டம் வெற்றி பெறவில்லை. போராடியவர்கள் ஒருகட்டத்தில் சோர்ந்துபோய் தாமாக போராட்டத்தை கைவிட்டார்கள்.
அப்படித்தான் இப்போது டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளும் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத ஒருநிலையில் போராட்டக்களத்துக்கு அருகே நீண்ட காலம் தங்கியிருந்து போராடத்தக்க ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். தமக்குரிய தற்காலிக வீடுகளை அவர்கள் கட்டி வருவதாக கடந்த வாரம் செய்திகள் கிடைத்தன. ஒரு படை நடவடிக்கையில் யுத்தகளத்தில் கைப்பற்றிய இடங்களில்
படைத்தரப்பு தற்காலிகமான வசிப்பிடங்களை ஏற்படுத்தி தரித்து நிற்பதைபோல சாத்வீக போராட்டங்களிலும் அவ்வாறு தற்காலிக வசிப்பிடங்களை ஏற்படுத்தி தங்கியிருந்து போராட வேண்டிய ஒரு காலகட்டம் உருவாகி விட்டதா?
வோல் ஸ்ட்ரீட் போராட்டம் டெல்லி விவசாயிகளின் போராட்டம் இரண்டிலும் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.போராட்டக்காரர்களை அரசாங்கங்கள் தடுத்து நிறுத்தவோ நசுக்கவோ பெருமளவுக்கு முயற்சிக்கவில்லை. போராட்டங்களை அவற்றின் பாட்டிலேயே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றன. அவை தாமாக சோர்ந்து விடும் என்று அரசுகள் நம்புகின்றன. ஒரு போராட்டத்தை நசுக்க நசுக்க அது மேலும் வேகம்கொள்ளும் வீரியம் பெறும். அதற்கு உலகக் கவனிப்பும் ஊடக கவனிப்பும் கிடைக்கும்.அதுதான் covid-19 சூழலுக்கு சற்றுமுன் நடந்த கொங்க்ஹோங் போராட்டத்திற்கு நடந்தது. ஆனால் அரசியல் போராட்டங்களை நசுக்க முற்படாமல் கண்டும் காணாமல் விட்டால் போராட்டங்களுக்கு என்ன நடக்கும்? ஒருகட்டத்தில் தாமாக சோர்ந்துவிடும் என்று அரசுகள் நம்புகின்றனவா?
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்கள் அப்படி ஒரு கட்டத்தைத்தான் அடைந்துவிட்டன.இடைக்கிடை கவனயீர்ப்பு போராட்டங்களை அன்னையர் முன்னெடுக்கிறார்கள். ஆனாலும் தெருவோரங்களில் ஆண்டுக்கணக்கில் குந்திக் கொண்டிருக்கும் அன்னையரை அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை. உலகமும் கண்டுகொள்ளவில்லை. இவை எல்லாவற்றையும் விட கொடுமையானது.அவர்களுடைய சொந்தமக்களும் கண்டு கொள்ளவில்லை என்பதுதான்.இப்போராட்டங்கள் அவற்றின்பாட்டில்
போய்க்கொண்டேயிருக்கின்றன. தமிழ் மக்கள் தங்கள் பாட்டில் போய்க் கொண்டேயிருக்கிறார்கள். இப்போராட்டங்களை அரசாங்கம் பெருமளவுக்கு தடுக்கவில்லை. அதன் மூலம் அவை ஒரு கட்டத்தில் தாமாகவே சோர்ந்து விடும் அல்லது வயதான பெற்றோர் படிப்படியாக இறந்துபோக போராட்டம் கைவிடப்பட்டுவிடும் என்று அரசாங்கம் நம்புகின்றதா?
எனவே இதுபோன்ற போராட்டங்களில் இருந்து தமிழ் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம் covid-19 சூழலுக்கு முன்னதாக ஹொங்கொங்கில் மக்கள் தெருக்களில் திரண்டு நின்று போராடினார்கள். ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் அந்த போராட்டத்தை நோக்கி பெருமளவுக்கு கவனத்தை குவித்தன. ஆனால் covid-19 பெருந் தோற்றோடு அப்போராட்டம் பின் தள்ளப்பட்டுவிட்டது.அதிலிருந்தும் தமிழ் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும்,தமிழ் மக்கள் கடந்த சில மாதங்களுக்குள் நடந்த அரசியல் நிகழ்வுகளில் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த பெப்ரவரி மாதம் நடந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஊர்வலம் ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. ஆனால் அதற்குப்பின் நடக்கும் சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டங்கள்; ஊர்வலங்கள் போன்றன வழமைபோல கவனயீர்ப்புப் போராட்டங்களாக குறுகக் காரணம் என்ன? அதேசமயம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணிக்குக் கிடைத்த வெற்றிக்கு காரணம் என்ன ? ஏற்கனவே இல்லாத ஒரு சிவில் அமைப்பு அதைத் தொடங்கிய சில நாட்களிலேயே முன்னெடுத்த ஒரு போராட்டம் அவ்வாறு எதிர்பாராத வெற்றியைப் பெறக் காரணம் என்ன? இது தொடர்பில் ஏற்கனவே எனது கட்டுரைகளில் நான் எழுதியிருக்கிறேன். தமிழ் மக்கள் போராடத் தயாராக இருக்கிறார்கள். பொருத்தமான அரசியல் தரிசனத்தோடு சரியான போராட்ட வடிவத்தை
முன்வைத்து பொருத்தமான தலைமைகள் துணிந்து முன்வந்தால் தமிழ் மக்கள் பின்னே வருவார்கள்.
ஆனால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை பேரணிக்கு பின்னரும் அப்படிப்பட்ட கட்டமைப்புக்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. பேரணியை முன்னெடுத்த சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் அந்தப் பேரணியின் பெயரால் ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்க போவதாக பிரகடனம் செய்தார்கள். ஆனால் அந்தப் பிரகடனம் இன்று வரையிலும் ஒரு காகிதப் பிரகடனமாகவே காணப்படுகிறது.அப்படி ஒரு அமைப்பு இன்று வரையிலும் கட்டி எழுப்பப்படவில்லை. ஆனால் அறிக்கைகள் வருகின்றன. அந்த அமைப்பை கட்டியெழுப்புவதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் எவையும் ஏன் இதுவரையிலும் முன்னெடுக்கப்படவில்லை? அதிலிருந்தும் தமிழ் மக்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.
எனவே கடந்த 12 ஆண்டுகால தாயகம் மற்றும் டயஸ்போரா தமிழகம் ஆகிய மூன்று பரப்புக்களின் அனுபவங்களை தொகுத்து ஆராய வேண்டும். இது தொடர்பில் ஒரு சுய விசாரணை அவசியம். இல்லையென்றால் போராட்டங்களை தத்தெடுக்க முயலும் புலம்பெயர் தரப்புகளின் காசும் வீணாகி தாயகத்தில் போராட முன்வரும் கொஞ்ச நஞ்ச செயற்பாட்டாளர்களும் சோர்ந்துபோய் முடிவில் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்க்காத சிறு கவனயீர்ப்புப் போராட்டங்கள் ஆக சுருங்கிப் போகும் ஆபத்து உண்டு.
எனவே இக்கட்டுரை கடந்த பன்னிரண்டு ஆண்டு காலத்தை முன் வைத்து அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை நோக்கி பின்வரும் கேள்விகளை கேட்கிறது.
முதலாவது கேள்வி கடந்த 12ஆண்டுகளாக தமிழ்மக்களின் அகிம்சைப் போராட்டங்கள் ஏன் இறுதி வெற்றி பெறவில்லை?
இரண்டாவது கேள்வி ஆயுதப் போராட்டம் ஏன் தோற்கடிக்கப்பட்டது என்பது குறித்து சரியான விடைகளை கண்டுபிடிக்காத ஒரு வெற்றிடத்தில் அகிம்சைப் போராட்டங்களை முன்னெடுப்பதுதான் அதற்கு காரணமா? அதாவது இறந்த காலத்தில் இருந்து பாடங்கற்கத் தவறியதன் விளைவா?