இலங்கையில் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்க முடிவு செய்துள்ளது அந்நாட்டு அரசு. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பள்ளிகளை(மதரஸா) மூடவும் முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு இலங்கையில் கொழும்பு நகரில் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது. அந்தச் சம்பவத்திற்குப் பின் தற்காலிகமாக இலங்கையில் பெண்கள் முகத்தை மூடும் விதத்தில் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டது. அதன்பின் அந்தத் தடை நடைமுறையில் இருந்து விலக்கப்பட்டது. ஆனால் தற்போது நிரந்தரமாகத் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ”தீவிரவாத தடுப்புச் சட்டத்தை அதிகாரிகள் பயன்படுத்த உள்ளார்கள். ஆனால் மனித உரிமை ஆர்வலர்கள் இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மதரீதியான தீவிரவாதத்தை கட்டுப்படுத்த இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் தீவிரவாதக் குற்றங்களில் ஈடுபடுவோர், ஆதரவு தெரிவிப்போரை இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும்.
புர்கா உள்ளிட்ட முகத்தை மூடும் விதத்தில் இருக்கும் முகமூடிகள், நேரடியாக நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த புர்கா உடையை சமீபத்தில்தான் இலங்கையில் பெண்கள் அணிகிறார்கள். ஆனால் இதற்கு முன்பு இலங்கையில் இருந்த முஸ்லிம்கள் யாரும் புர்கா அணிந்ததில்லை. இது ஒருவகையான மதரீதியான தீவிரவாதத்துக்கு துணை போவதாகவே நினைக்கிறோம். எனவே விரைவில் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்க முடிவு எடுப்போம்.
இதற்கான முடிவில் நான் கையொப்பமிட்டுவிட்டேன். விரைவில் கேபினெட் ஒப்புதல் கிடைத்துவிட்டால் முழுமையாகத் தடை விதிக்கப்படும். அதேபோல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதரஸாக்கள் செயல்பட தடை விதிக்கப்படும். யார் வேண்டுமானாலும் பள்ளிகள் தொடங்கலாம், என்ன வேண்டுமானாலும் கற்பிக்கலாம் என்று இருப்பதையும் அனுமதிக்க முடியாது. எங்கள் நாட்டுக்கென தனியாக தேசிய கல்விக் கொள்கை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டில் கோத்தபய ராஜபக்சே அதிபராக இருந்தபோது நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும், தீவிரவாதம் தடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்ட நிலையில் இப்போது நிரந்தரமாக தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.