(யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன்)
இலங்கை அரசையும் அதன்; ஆட்சியாளர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உடனடியாக நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
சகல மதங்களையும் சார்ந்த தலைவர்கள் குருமார்கள், மனிதநேய அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் மிகுந்த ஆர்வத்துடனும் வேகத்துடனும் கலந்து கொண்ட மேற்படி போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து புறப்பட்டு, பேரணியாக, தற்போது சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாக சென்று அங்கு நின்றவர்களோடு சங்கமித்தது.
மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில், வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் , பொதுமக்கள் , சிவில் சமூகத்தினர் , காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் யாழ்ப்பாணம் ஓட்டோ வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினரும் இந்த பேரணியில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு இலவச பிரயாண ஏற்பாடுகளைக் கவனித்தனர் என்பது குறிபபிடத்தக்கது.
இவ்வாறான ஒரு எழுச்சியான ஒரு பேரணியை நீண்ட நாளின் பின்னர் யாழ்ப்பாணத்தில் தான் கண்டதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்