சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
இலங்கையில் ஆயுதக் குழுவொன்றால் கடத்தப்பட்ட செய்தியாளர் ஒருவர் அது குறித்து வாக்குமூலம் ஒன்றை அளிக்கச் சென்ற போது பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சுஜீவ கமகே தனக்கு உதவி செய்ய சட்டத்தரணி ஒருவரை அமர்த்திக் கொண்டதன் மூலம் `சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாத` குற்றமொன்றைச் செய்துள்ளார் என்று கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைப் பிரிவு (சிசிடி) அதிகாரிகள் நேற்று (மார்ச்17) தெரிவித்தனர்.
தீக்காயங்கள் மற்றும் இதர காயங்களுக்காக சிகிச்சைப் பெற்று வந்த சுஜீவ கமகே மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் தனது பாரியார் திருமதி நயனி கமகே உடன் சிசிடி அலுவலகத்திற்குச் சென்றார்.
முன்னதாக இம்மாதம் 10ஆம் திகதியன்று அவர் கடத்தி சித்திரவதைச் செய்யப்பட்ட பின் சாலையோரமாக வீசப்பட்டார்.
விசாரணைக்கு சென்ற சுஜீவ மற்றும் நயனி இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவின் உதவியை நாடினர். இதையடுத்து அவரை பொலிசார் அச்சுறுத்தியதாக அறியப்படுகிறது. மேலும் ‘’ஊடகவியலாளர் ஒருவர் சார்பாக சட்டத்தரணி ஒருவர் வந்துள்ளார்“ எனவே சுஜீவ கமகே விடுவிக்கப்பட மாட்டார் என்று அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
“அவர் பல மணி நேரங்கள் அச்சுறுத்தலின் கீழ் விசாரிக்கப்பட்டார் என்று உறவினர்கள் எனக்குத் தெரிவித்தனர்“ என்று சட்டத்தரணி ராஜபக்ஷ ஜே டி எஸ் இணையதளத்துக்கு தெரிவித்துள்ளார்.
“என்னால் அவருக்கு சட்ட உதவி செய்ய முடியாதது மட்டுமல்ல, அவர் சார்பாக சட்டத்தரணி ஒருவர் பொலிஸ் நிலையம் வந்ததும் ஒரு குற்றம், எனவே அவரை விடுவிக்க முடியாது என்று என்னையும் அச்சுறுத்தினர். சித்திரவதை செய்யப்பட்டு மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு நபரின் சட்டத்தரணி நான் என்று சொல்லியும் என்னை வெளி வாயிலைத் தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அனுரங்க எனும் பொலிஸ் துணை அத்யட்சகர் சுஜீவ கமகே அரசை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளதால் அவரை விடுவிக்க முடியாது என்று என்னிடம் கூறினார்“
இதேவேளை ஐந்து மணித் தியாலங்களுக்கு மேலான விசாரணைக்குப் பின்னர் நயனி கமகே நள்ளிரவைக் கடந்த நேரத்தில் விடுவிக்கப்பட்டார்.
தனது செய்திகளுக்கான மூலத்தை அறிந்து கொள்வதற்காகத் தான் சித்திரவதை செய்யப்பட்டதாக மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் கமகே தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடனான தொடர்பு குறித்துக் கேட்டு தன்னை கடத்தியவர்கள் சித்திரவதை செய்தனர் என்று கமகே கூறுகிறார்.
சட்டத்தரணியின் உதவியின்றி சுஜேவ கமகேயிடம் பெறப்பட்ட வாக்குமூலம் குறித்து குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். மிகவும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு பெறப்பட்ட அந்த வாக்குமூலம் அவருக்கு எதிராக வழக்கு பதியப் பயன்படுத்தப்படும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
ஊடகச் சுதந்திரப் பட்டியலில், உலகளவில் மிகவும் தாழ்வான நிலையிலுள்ள போதிலும் இலங்கையில் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பது ஏட்டளவில் கூட இல்லை, அங்கு ஒரு செய்தியாளராகப் பணியாற்றுவது மிகவும் சவாலான விஷயம் என்று பன்னாட்டு அமைப்புகள் தொடர்ந்து கூறி வந்துள்ளன.