(மன்னார் நிருபர்)
(18-03-2021)
தலைமன்னார் பொலிஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த புகையிரத கடவையில் ஏற்பட்ட விபத்திற்கு தலைமன்னார் பொலிஸாரே பொறுப்பு கூற வேண்டும் என பாதீக்கப்பட்ட தலைமன்னார் பியர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் பயணித்த தனியார் பேரூந்து செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் தலை மன்னார் பகுதியில் புகையிரதத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகிய 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு சுமார் 23 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
புகையிரதத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகிய சந்தர்ப்பத்தில் புகையிரத கடவையில் பாதுகாப்பு ஊழியர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும், புகையிரத கடவைக்கான தடை குறித்த நேரத்தில் இடப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
குறித்த புகையிரத கடவை தலைமன்னார் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் தலைமன்னார் பொலிஸாரே வயோதிபர்கள் சிலரை நியமித்து புகையிரத கடவையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தி வந்ததோடு, அவர்களுக்கான கொடுப்பணவை தலைமன்னார் பொலிஸ் நிலையமே வழங்கி வைந்துள்ளது.
-எவே தலைமன்னார் பொலஸாரின் அசமந்த போக்கின் காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதோடு,குறித்த புகையிரத கடவையில் உரிய முறையில் கடமையை மேற்கொள்ளுகின்றார்களா? என பொலிஸார் உரிய முறையில் கண்காணிக்காத நிலையிலே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்திற்கு தலைமன்னார் பொலிஸாரே உரிய பதில் கூற வேண்டும்.என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.