(மன்னார் நிருபர்)
18-03-2021
களுத்துறை மாவட்டத்தின் 2021ஆம் ஆண்டில் முதலாம் தரத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை கையளிக்கும் வேலைத்திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (2021.03.18) அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்பட்டது.
தாய் நாட்டின் எதிர்கால மாணவர்களின் ஞான ஒளியை தூண்டிவிடும் நோக்கில் துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன அவர்களின் ஒரு சமூக சேவையாக இவ்வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தின் கீழ் 106 மாணவர்களுக்கும், முழுத் திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்ட பாடசாலை மாணவர்கள் 20,000 பேருக்கும் இப்பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்படவுள்ளன.
இதன் போது நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
சிறு பிள்ளைகளை ஊக்குவிக்கும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்தமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் குழந்தைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு அரசாங்கமாகும். நாம் நாட்டிற்காக நல்ல குழந்தைகளை உருவாக்க வேண்டும். கல்வி போன்றே நல்லொழுக்கங்களை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அவ்வாறு செய்யாவிடின் எமது பிள்ளைகள் சமூகத்தில் எவ்வாறான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை குறிப்பிட முடியாது. பிள்ளைகள் தொடர்பில் நாம் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். 24 மணிநேரமும் புத்தக பூச்சிகளாக அன்றி பிள்ளைகளுக்கு விளையாடுவதற்கும் சுதந்திரம் வழங்க வேண்டும்.அனைத்து துறைகளிலும் பிள்ளைகளை பலப்படுத்துங்கள். விசேடமாக பிள்ளைகளை ஏதேனுமொரு விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும்.
விளையாட்டின் மூலம் பிள்ளைகள் வெற்றி தோல்வியை சமாளிக்க பழகிக்கொள்வர். இல்லையெனில், சமுதாயத்திற்கு வரும்போது வெற்றி தோல்வியை ஏற்க முடியாது பாதிக்கப்படுவர்.
பிள்ளைகளுக்காக அமைச்சர் ரோஹித அவர்கள் ஆரம்பித்த இந்த வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் ஏனைய மாவட்டங்களிலும் செயற்படுத்தப்படுமாயின் அது பயனுள்ளதாக அமையும் என கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.
அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன அவர்கள்,
இவ்வாண்டில் 20,000 பிள்ளைகள் களுத்துறை மாவட்டத்தில் முதலாம் தரத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகள் என்ற அடிப்படையில் எமது நலன்களுக்கு அப்பால் சென்று, இன, மத வேறுபாடின்றி நாம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறோம்.
இந்நாட்டில் உருவாகிய தலைவர்களுள் பிள்ளைகளுக்கு சிறந்தவற்றை வழங்கிய தலைவர் கௌரவ பிரதமராவார். நாமல் ராஜபக்ஷ, யோஷித ராஜபக்ஷ, ரோஹித ராஜபக்ஷ ஆகிய மூவரும் நான் அறிந்த காலத்திலிருந்து பிரதமரை ‘தாத்தே’ என்றே அழைத்தனர். ஆனால், இந்நாட்டு பிள்ளைகள் உங்களை ‘அப்பச்சி’ என்று அழைத்தார்கள்.
2015ஆம் ஆண்டு கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தோல்வியடைந்து செல்லும்போது பிள்ளைகளுக்காக 1000 மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை நிர்மாணித்து வைத்துவிட்டே சென்றார். எனினும், தொடர்ந்து வந்த அரசாங்கம் முதலில் செய்தது மஹிந்தோதய என்ற பெயர் பலகையை கழற்றி எறிந்ததாகும். பின்னர் அந்த ஆய்வுகூடங்களுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக் கொடுக்காது அவற்றை மூடினர்.
யார் வேலைத்திட்டங்களை ஆரம்பித்திருந்தாலும் பரவாயில்லை. பிள்ளைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து நிர்மாணப் பணிகளையும் நிறைவு செய்யுங்கள் என எமது அரசாங்கம் வந்தவுடன் கௌரவ பிரதமரும், அதிமேதகு ஜனாதிபதியும் எமக்கு கூறினர்.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,
எமது அரசாங்கம் கல்வித்துறையில் எண்ணமுடியாத அளவிற்கு வெற்றியை பெற்றுக்கொண்டது. கொவிட் தொற்று முழு உலகையும் ஆட்கொண்ட சந்தர்ப்பத்தில் எம்மைவிட செல்வந்த நாடுகளின் பாடசாலைகள் கூட மூடியே காணப்பட்டன. எனினும், முறையான முகாமைத்துவம் மற்றும் தயார்ப்படுத்தல் காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல எமக்கு முடியுமானதாயிற்று.
ஒரு வாரத்திற்கு முன்னதாக சாதாரணத் தரப் பரீட்சையை நிறைவுசெய்தோம். ஆறு இலட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் 5413 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றினர்.
பரீட்சை ஆரம்பிக்கும் போது கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 38 மாணவர்கள் காணப்பட்டனர். 322 மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். 40 விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. பரீட்சை நிறைவுபெறும் போது 62 கொவிட் தொற்றாளர்கள் மாத்திரமே காணப்பட்டனர்.
ஜுன் மாதத்தில் சாதாரணத் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின்றன. ஜுலை மாதத்தில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. உயர் தரப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என பலர் கூறினர். எனினும் 3 இலட்சத்து 60 ஆயிரம் பரீட்சைக்கு தோற்றினர். ஏப்ரல் மாதத்தில் பெறுபேறுகள் வெளியாகும். 2021 செப்டம்பர் மாதத்தில் அப்பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியும் எனத் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் கௌரவ அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ரோஹித அபேகுணவர்தன, இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சஞ்ஜீவ எதிரிமான்ன, மர்ஜான் ஃபலீல், முன்னாள் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், ஜப்பானின் பிரதி தூதுவர் கிதமுரா தொஷினிரோ, துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சின் செயலாளர் யூ.டீ.சீ.ஜயலால், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ.கே.பெரேரா, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) தயா ரத்நாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.