தன்னிடம் தடுப்பூசிகள் கேட்ட கனடாவிற்கு உதவுவதாக அறிவித்த அமெரிக்கா
கனடியர்களுக்கு மிகவும் அவசியமும் அவசரமுமான கோவிட்-19 தடுப்பூசிகளை உடனடியாகத் தந்துதவும் படி வேண்டுகோள் விடுத்த கனடிய பிரதமருக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் எப்போது மேற்படி தடுப்பூசிகள் வந்து சேரும் என்ற கால அவகாசமோ அன்றி உறுதிமொழியோ இதுவரை அளிக்கப்படவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி விடயம் தொடர்பாக அமெரிக்காவில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த வெள்ளைமாளிகையின் செய்தித் தொடர்பாளர் பிசாக்கி அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்.
“எமக்கு கனடாவிடமிருந்தும் மெக்சிக்கோவிடமிருந்தும் வேண்டுகோள்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கு அதிபர் அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் எப்போது இந்த தடுப்பூசிகள் கனடாவிற்கு அனுப்பப்படும் என்பது பற்றிய விபரங்கள் எனது அலுவலகத்திற்கு வந்து சேரவில்லை. ஆனால் அதற்கான பணிகளில் வெள்ளை மாளிகையின் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்” என்றார்.
மேற்படி விடயம் தொடர்பாக எமது செய்தியாளர் அனுப்பியுள்ள குறிப்பில், அமெரிக்க அதிபரின் பட்டியலில் கனடாவிற்கும் மெக்சிக்கோவிற்கும் உடனடியாக தடுப்பூசிகளை அனுப்பும் விடயம் முதலாவது தெரிவாக இருக்கின்றன என்றும் ஆனால் அவை சில நாட்களில் அல்லது சில வாரங்களில் என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எனினும், அமெரிக்கர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பெற்ற பின்னர் நிச்சயமாக இந்த இருநாடுகளின் வேண்டுகோள்கள் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை நிச்சயமாக அமெரிக்க அதிபரும் வெள்ளை மாளிகையின் தடுப்பூசிகளுக்கான செயலகமும் எடுக்கவுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக அமெரிக்கர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பெற்ற பின்னர் கனடாவின் வேண்டுகோள் தொடர்பாக கவனம் எடுக்கப்படும் என்ற அறிவிப்பு கனடியப் பிரதமரையும் மற்றும் கனடிய அரசாங்கத்தின் சார்பில் தடுப்பு மருந்துக் கொள்வனவில் முக்கிய தலைமைத்துவம் வகிக்கின்ற, அமைச்சர் அனிற்றா ஆனந்த் அவர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக ரொரன்ரோ பெரும்பாகத்தில் உள்ள ஆளும் லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்
மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் எமது செய்தியாளருக்கு மேலும் தெரிவிக்கையில்,
“ஆரம்பத்திலிருந்தே எமது பிரதமரும் அமைச்சர் ஆனந்த் அவர்களும் இந்த விடயத்தில் மிகவும் திறந்த மனதுடனே தங்கள் கடமைகளைச் செய்தனர்.
ஆனால் பல விநியோகங்களில் நீண்ட தாமதங்கள் ஏற்பட்டன. ஆனாலும் அவர்கள் சோர்வடையாமல் தொடர்ச்சியாக அவர்களது அதிகாரிகளைக் கொண்ட பணிகளை மேற்கொண்டார்கள். எனினும் தாமதங்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாமல் போய்விட்டது. இதற்கிடையில் வெளிநாடுகளிலிருந்து , குறிப்பாக இந்தியாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் ஜேர்மனியிலிருந்தும் நாம் எதிர்பார்க்கும் கோவிட்-19 தடுப்பூசிகள் யூன் மாதத்திற்கு முன்னர் வந்து சேர்ந்து விடும் என்ற நம்பிக்கை எமது அரசாங்கத்திற்கு உண்டு” என்றார்