இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் என்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முனைப்பு, ஜெனீவா விடயத்தில் இலங்கைக்கு பெரும் சவாலாக உள்ளதென கொழும்பைத் தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகம் ஓன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு சவாலான வாரம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள செய்திக்கட்டுரையிலேயே இதனைத் தெரிவித்துள்ள அவ்வூடகம், ஐ.நாவில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் உரைக்கு, பதிலுரையாக அமைந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் அறிக்கையினை சுட்டிக்காட்டி, ஐ.நா மனித உரிமைச்சபை விடயத்தில் சிறிலங்காவுக்கு எதிரான தீவிரமான பிரச்சாரத்தினை மேற்கொள்பவராக பிரதமர் வி.உருத்திரகுமாரன் உள்ளரெனவும தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பில் வாக்கெடுப்பினை நோக்கி சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென கூட்டுநாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளதாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் தடைக்கு எதிராகவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அச்செய்திக்கட்டுரையில், தமிழீழ விடுதலைப்புலிகள் எவ்வித பயங்காரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிடுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.
http://www.dailynews.lk/2021/03/18/features/244274/challenging-week-sri-lanka