தமிழகத்திலிருந்து முதல் முறையாக வாள்சண்டை வீராங்கனை பவானி தேவி மற்றும் டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரன் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். கொரோனோ கால ஊரடங்கை தங்களுக்கானதாக மாற்றி சாதனைபடைத்துள்ளனர்.
ஒலிம்பிக் என்பது ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் கனவு, உயிர் மூச்சு என்று கூட சொல்லலாம். சாதனைகளை அள்ளித்தெளிக்க காத்திருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 23 ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ம் தேதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது களைகட்டி வருகிறது.
தமிழகத்திலிருந்து முதல் வீரராக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை உறுதி செய்தவர் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வாள் சண்டை வீராங்கனை பவானி தேவி. ஹங்கேரியில் நடைபெற்ற உலக கோப்பை வாள் சண்டை போட்டியில் காலிறுதிவரை முன்னேறிய பவானி டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை உறுதி செய்தார். இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் முதல் வாள்சண்டை வீராங்கனை என்ற பெருமையை தன் வசப்படுத்தியுள்ளார் பவானி தேவி.
இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையான பவானி தேவி 8 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். அத்துடன் 2009 ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வரும் பவானி உலகக் கோப்பை வாள் சண்டை போட்டியின் சேபர் பிரிவில் வெள்ளி, வெண்கல பதக்கங்களை கைப்பற்றி சாதனை நிகழ்த்தியுள்ளார்.
கோடிக்கணக்கான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் முதல் ஆளாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியடைவதாக கூறுகிறார் சிங்கப்பெண் பவானி தேவி.
சென்னையை சேர்ந்த மற்றொரு தமிழனும் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கான களத்தை உறுதி செய்துள்ளார். தோஹாவில் நடைபெற்ற ஆசிய கண்டத்திற்கான ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் சரத் கமல் மற்றும் பாகிஸ்தான் வீரரை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளார் டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரன். சிறு வயது கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சியடைகிறார் சத்தியன்.
கொரோனோ ஊரடங்கிலும் ரோபோ மூலம் சத்தியன் மேற்கொண்ட தீவிர பயிற்சியால் இந்த கனவு நிறைவேறியிருப்பதாக பெருமிதம் அடைகிறார் அவரது தாய் மலர்க்கொடி.
கொரோனோ ஊரடங்கில் ரோபோவுடன் டேபிள் டென்னிஸ் பயிற்சி, பொம்மையுடன் வாள்சண்டை என கிடைக்கும் நேரத்தை எல்லாம் பயிற்சி மேற்கொண்டு சோதனைகளை சாதனைகளாக மாற்றியமைத்திருக்கின்றனர் இந்த சாதனை தமிழர்கள்.
இவர்களுடன் சேர்ந்து நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளார் சரத் கமல்.