ஒன்றாரியோ மாணவர்களின் சுகவாழ்வும் பாதுகாப்புமே எமக்கு முக்கியம் என்கிறார் மாகாணத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் அன்றியா ஹோவார்த்
“நாம் மாகாண பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக விளங்கினாலும் இங்கு வாழும் மக்கள் அனைவரதும் சுகவாழ்வும் அவர்களத பாதுகாப்பு ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற ஆளும் கட்சியினரைக் கேட்டு வருகின்றோம் . அது போல, ஒன்றாரியோவில் பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று கற்கும் மாணவர்களின் உடல்நலமும் பாதுகாப்புமே எமது முக்கிய கவனமாக உள்ளது. ஆளும் கட்சியினர் சொல்வது போன்று பாடசாலைகளை மூடி வையுங்கள் என்று ஒருபோதும் வற்புறுத்தவில்லை”
இவ்வாறு கூறினார் ஒன்றாரியோ மாகாணத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான அன்றியா ஹோவார்த் அவர்கள்.
நேற்று மாலை கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரோடு அவர் நடத்திய தொலைபேசி மூலமான நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டதற்கு ஏற்ப இந்த நேர்காணல் ஆரம்பமானது. சுமார் பதினைந்து நிமிடங்கள் இடம்பெற்ற இந்த நேர்காணலில் பல விடயங்களை திறந்த மனதோடு எடுத்துச் சொன்னார் அன்றியா ஹோவார்த் அவர்கள்.
“ஒன்றாரியோவின் கல்வி அமைச்சு பாடசாலைகளை இந்த நோய்த் தொற்று காலத்தில் திறந்து வைத்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்புடையது அல்ல என்று பிரதான எதிர்க்கட்சித் தலைவரான நீங்கள் மாகாணப் பாராளுமன்றத்திலும் பொது இடங்களிலும் கூறி வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளாரே? அவ்வாறு உங்கள் கருத்து இருக்குமானால் அதற்குரிய காரணங்களை விளக்குவீர்களா? ” என பிரதம ஆசிரியர் முன்வைத்த கேள்விக்கு அவர் பதிலளித்தார.
“நானோ அல்லது எமது கட்சியின் உறுப்பினர்களோ பாடசாலைகளை மூடிவையுங்கள் என்று ஒருபோதும் கூறவில்லை. பாடசாலைகளுக்குச் சென்று நேரடியாக கற்றல் நடவடிக்கைகளில பங்கெடுத்துள்ள மாணவர்களின் சுகவாழ்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மேலும் அதிகமாக கவனமெடுங்கள் என்று தான் வலியுறுத்தி வருகின்றோம்.
பாடசாலை மாணவர்களுக்குரிய சகல வசதிகளும் அங்கு செய்து கொடுக்கப்பட வில்லை நல்ல காற்றைச் சுவாசிக்கக் கூடிய வாய்ப்புக்கள் அங்கு இல்லை. அவற்றைக் கவனித்து சகல மாணவர்களின் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துங்கள் என்றுதான் வலியுறுத்தி வருகின்றோம்” என்றார் அன்றியா
அடுத்த கேள்வியாக உதயன் பிரதம ஆசிரியர், “தற்போதைய முக்கிய விடயமாக உள்ள கோவிட்-19 தடுப்பூசி விநியோகம் பற்றிய தங்கள் கருத்துக்கள் என்ன?” என்று வினாவினார்.
“நல்லதோர் கேள்வி இது. நீங்கள் அறிந்திருப்பீர்களோ தெரியாது, மாகாணத்தின் சுகாதாரப் பிரிவினர் இந்த விடயத்தில் நேர்த்தியாக பணியாற்றவில்லை என்றே நான் கூறுவேன். காரணம் சில நகரங்களில் போதிய தடுப்பூசிகள் கையிருப்பில் இருந்தாலும், அவை அவசரமாகத் தேவையானவர்களுக்கு வழங்கப்படவில்லை. பல பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை.எனவே புதிதாகப் பணிகளுக்கு அமர்த்தப்பட்டவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை செய்ய முடியாமல் உள்ளது. குறிப்பாக தடுப்பூசி வழங்கப்பட வேண்டி தொலைபேசி மூலமாக அழைப்பவர்களின் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலளிக்கும் வகையில் நேர்த்தியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதனால் காலதாமதமும், வீண் விரயமும் ஏற்படுகின்றது.
எதிர்க்கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் நாம் இந்த குறைபாடுகளை கவனித்து வருகின்றோம்” என்றார் அன்றியா
மேலும் ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பல விடயங்களை பொறுப்புணர்வுடன் அன்றியா உதயன் பிரதம ஆசிரியரோடு பகிர்ந்து கொண்டார்.
மற்றுமொரு கேள்வியாக, “மாகாண அரசு வழங்கும் நிதி உதவிகள் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளுக்கு வழங்கும் நிதி உதவிகள் பற்றிய அறிவிப்புக்கள் தொடர்பாக தாங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்” என்ற பிரதம ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் அன்றியா ஹோர்வாத் அவர்கள் எமது மாகாணத்தில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புக்களுக்கு நிதி உதவிகள் வழங்குவதோ அன்றி, சிறு தொழில்களை நடத்துகின்றவர்களுக்கு நிதி வசதிகள் செய்து கொடுப்பதோ எமக்கு விருப்பம் இல்லா விடங்கள் அல்ல. அவை மிகவும் அவசியமானவை, ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்படி நிதி உதவிகள் தகுந்த காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிக்க வேண்டும். அதையே நாம் விரும்புகின்றோம். இந்த நோய்த் தொற்று காலத்தில் இவ்வாறான உதவிகள் மக்களின் மன அழுத்தங்களைக் குறைத்து அவர்கள் பொழுது போக்கு விடயங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஈடுபடுவது மிகவும் அவசியமாகின்றது” என்றார் அன்றியா ஹார்வாத் அவர்கள்.