தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் குருதிக்கொடை முகாம் இன்று சனிக்கிழமை (20.03.2021) திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய கலாநிதி ரூபிகா சேயோன் அவர்களின் தலைமையில் இரத்தவங்கிப் பிரிவினர் கலந்துகொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு. மகேசன் கஜேந்திரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், அவசர தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்குக் குருதிக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இரத்தம் வழங்கி உதவுமாறும் இரத்த வங்கி அவசர கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அரசியற் கட்சிகளுக்கு அரசியற் செயற்பாடுகளில் மாத்திரம் ஈடுபடாமல் சமூகத்தின் ஏனைய விடயங்களிலும் பங்கேற்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே குருதிக்கொடை முகாமை ஏற்பாடு செய்திருந்தோம். ஆர்வத்துடன் அனேகர் கலந்து கொண்டு இரத்தம் வழங்கியிருந்தார்கள். ஆனால், இவர்களிற் பலர் ஏற்கனவே குருதிக்கொடையில் ஈடுபட்டவர்கள். குருதிக்கொடை தொடர்பாகத் போதிய விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக புதிதாகக் குருதியை வழங்க வருகின்றனவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஒருவர் ஒருதடவை வழங்கும் 1பைந்து இரத்தம் 3 உயிர்களைக் காப்பாற்றக்கூடியது. உயிர் காக்கும் இந்த உன்னத பணி குருதியைக் கொடையாக வழங்குபவர்களுக்கும் பல்வேறு நன்மையைத் தரக்கூடியது. இது தொடர்பாக விழிப்புணர்வைச் சமூகத்தில் நாம் ஏற்படுத்த வேண்டும். இந்த முகாம்கள் அதற்கு வழிசமைக்கும். தொடர்ந்தும் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற முகாம்களைச் செய்யவுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
குருதிக்கொடை முகாமில் பங்குகொண்ட அனைவருக்கும் செவ்விரத்தம் பூச்செடிகள் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.