தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே 28 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் உள்ளது. பாக் நீரிணை அல்லது பாக்ஜலசந்தி எனப்படும் இந்த கடல் பகுதியில் இதுவரை பல நீச்சல் வீரர்கள் நீந்தி சாதனை செய்துள்ளனர்.
ஈரோட்டில் பிறந்து உலக அளவில் சாதித்த நீச்சல் வீரர் குற்றாலீசுவரன் 12 வயது சிறுவனாக இருந்தபோது தலைமன்னார்-தனுஷ்கோடி இடையிலான கடல்பகுதியை 16 மணிநேரத்தில் நீந்திக்கடந்து சாதனை படைத்தார். அதில் கிடைத்த உற்சாகத்தால் இங்கிலீஷ் கால்வாயையும் நீந்திக்கடந்து உலக அளவில் சாதனை படைத்தார்.
அதன்பிறகு பல நீச்சல் வீரர்கள் பாக் நீரிணை கடல் பகுதியை நீந்திக்கடந்து சாதனை புரிந்துள்ளனர். அவர்களில் தமிழக உயர்போலீஸ் அதிகாரியான சைலேந்திரபாபுவும் ஒருவர்.
இப்போது முதல்முறையாக ஒரு பெண், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி வந்து சாதனை படைத்துள்ளார். அவர் பெயர் ஷியாமளா ஹோலி. 48 வயதாகும் இவர், தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஆசிரியையாகப்பணியாற்றி வருகிறார். நீச்சல் வீராங்கனையும் கூட.
இந்தியாவில் பல ஆறுகளில் நீந்தியுள்ள இவர், கடலில் நீந்தி சாதனை படைக்கத் திட்டமிட்டு, தலைமன்னார்- தனுஷ்கோடி இடையிலான கடலைத்தேர்வுசெய்தார். கடந்த ஆண்டே அதற்குத்தயாராகி வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலால் அவரது முயற்சி தடைபட்டது. இந்த ஆண்டு அவரது சாதனை முயற்சிக்கு அனுமதி கிடைத்ததும், சில நாட்களுக்கு முன் ராமேசுவரம் வந்தார்.
ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் இருந்து தன்னுடைய பயிற்சியாளர் தலைமையிலான குழுவுடன் படகில் தலைமன்னார் சென்றார். அங்கிருந்து நேற்று (19-ந்தேதி) அதிகாலை 4.15 மணிக்கு நீந்தத்தொடங்கினார். தலைமன்னார் கடல் பகுதியிலிருந்து சர்வதேச கடல் எல்லை வரை இலங்கை கடற்படை அவருக்கு பாதுகாப்பு வழங்கியது.
இந்திய கடல் பகுதிக்குள் நீந்தி வரும்போது அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததால் அவருக்கு நீந்துவதில் சற்று சிரமம் ஏற்பட்டது. என்றாலும், தொடர்ந்து 13 மணிநேரம் 35 நிமிடங்கள் சளைக்காமல் நீந்திய அவர், மாலை 5.50 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை வந்தடைந்தார்.
அரிச்சல்முனையில் ஷியாமளா ஹோலியை சமூக ஆர்வலர்களும் சுற்றுலா பயணிகளும், மாலை-பொன்னாடைகள் அணிவித்து உற்சாகமாக வரவேற்றார்கள்.
அப்போது அவர் கூறுகையில், “இலங்கை கடல் பகுதியில் நீந்துவதற்கு ஏற்ப கடல் நீரோட்டம் இருந்தது. ஆனால் இந்திய கடல் பகுதியில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் சற்று சிரமமாக இருந்தது. எனினும் சமாளித்து நீந்தி வந்து சேர்ந்து விட்டேன். அடுத்து இங்கிலீஷ் கால்வாயை நீந்திக்கடப்பது எனது லட்சியம்” என்று தெரிவித்தார்.
தலைமன்னார்- தனுஷ்கோடி இடையிலான கடற்பகுதியை ஒரு பெண் நீந்திக்கடந்தது இதுவே முதல் முறையாகும்.
ஷியாமளா ஹோலியின் இந்த சாதனையைப்பார்க்கும்போது, கவியரசர் கண்ணதாசன் எழுதிய
“காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி… கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது… மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது…”
என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.
–மணிராஜ்,
திருநெல்வேலி.