என்னை சந்திப்பதும் விடுவதும் அவர்களது விருப்பம்
– அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
“எமது பிள்ளைகளையும் அன்பக்குரியவர்களையும் காணாமல் ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்தவரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபாய இராஜபக்சாவின் அறிவிப்புக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஆனால் இலங்கையில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அரசாங்கத்த்தினாலும் அரச படையினராலும காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் அந்த அமைச்சரை ஒரு போதும் சந்திக்கப் போவதில்லை. அவரை சந்திக்கும் விருப்பமும் இல்லை”
இவ்வாறு வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,…
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அனைவரும் தங்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அரசாங்கத்தின் முக்கிய பள்ளிகள் தொடக்கம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரை பலரும் தொடர்புடையவர்கள் என்றும் இதனால் அவர்களே இந்த விடயம் தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். மேலும், தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போதே எங்கள் உறவுக்ள அதிகம் காணாமல் ஆக்கப்பட்டனர். அந்த பின்னர் மகிந்த ராஜபக்ஸ அரசின் காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு அரசோ அவ்வரசில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவோ எவ்விதமான ஆதரவையும் வழங்கிவில்லை. அத்துடன் அவர்கள் பாதிக்கப்பட்ட அந்த உறவுகளுக்கு எந்த தீர்வையும் பெற்றுத்தரவில்லை.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இலங்கை அரசினால் நீதி கிடைக்கும் என்ற நம்பிகை அற்றுப் போய்விட்டது.இந்த நிலையில் அந்த அரசின் பிரதிநிதியாக உள்ள அமைச்சரை சந்திப்பதில் பயனில்லை என்றும் இதனால் சர்வதேசமே எமக்கான நீதியை பெற்றுத் தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி பகிரங்கமாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக கொழும்பில் பத்திரிகையாளர்களக்கு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பின்வருமாறு தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்த கருத்துக்களில் அவர்களுடைய பாதிப்பு எனக்கு விளங்குகின்றது. ஆனால் நான் அவர்களுக்கு உதவி செய்யவே விரும்புகின்றேன் ஆனால், . . என்னை சந்திப்பதும் விடுவதும் அவர்களது விருப்பம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு அமைப்புக்களும் ஒவ்வொரு உள்நோக்கங்களுடன் செயல்படுகின்றன.
எனவே அவர்கள் அதற்கேற்ற மாதிரியே செயற்படுவார்கள். நான் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று யோசிக்கின்றேன் அவர்கள் பிரச்சினையை தீராப் பிரச்சினையாக வைத்திருக்க யோசிக்கின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திப்பதற்கு கடந்த முறை நான் அழைப்பு விடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் வந்து சந்தித்தார்கள். பின்னர் அச் சந்திப்புக்களை அரசியல் சூழ் நிலையால் தொடர முடியவில்லை. தற்போது நான் அதனை திருப்பி தொடர்கின்றேன் எனக் குறிப்பிட்ட அமைச்சர்,.. நான் சங்கங்களுக்கு அழைப்பு விடவில்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கே அழைப்பு விடுத்துள்ளேன். அவர்களை நான் வலிந்து அழைக்கவுமில்லை, எனவே அவர்கள் விரும்பினால் வந்து சந்திக்கலாம்.மேலும் எனக்கும் அந்த பாதிப்புக்கள் உண்டு. எனது தம்பி மற்றும் நெருக்கமானவர்கள் என பலர் கொல்லப்பட்டுள்ளனர், காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்” இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்