கதிரோட்டம் 19-03-2021
சகாயம் போன்ற நேர்மைக் குணம் கொண்ட அரச அதிகாரிகள் இலங்கைத் தமிழர் அரசியலிலும் அமைதியாய் இறங்க வேண்டும் என்பதே இந்த வாரக் கதிரோட்டத்தின் தலைப்பாகும். ஒரு தலைப்பிலேயே தமிழ்நாட்டு அரசியலையையும் இலங்கைத் தமிழர் அரசியலையும் முடிச்சொன்றினால் பிணைத்து விட்டோம். அந்த ‘முடிச்சு” தான் சகாயம் என்னும் கறைபடியாத கைகளுக்கு உரிய யோக்கியர்.
இந்திய நிர்வாக சேவையில் இணைந்து உயர் பதவிகள் பலவற்றில் அமர்ந்து, நேர்மையின் சின்னமாகவும் ஊழல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள சகாயம் அவர்களின் தமிழ்நாட்டில் ஆயிரத்தில் ஒருவரல்ல. பத்திற்குள் ஒரு முத்து என்பதே, நாம் அவர் பற்றி கற்று அறிந்தவை.
ஈழத் தமிழ் மக்களின் தாய் தமிழகமாக விளங்கிய தமிழ்நாட்டில் களங்கமில்லாத அரசியல் வாழ்க்கையை மேற்கொண்ட கக்கன், காமராஜர் போன்றவர்களின் வரிசையில் சகாயம்; என்னும் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதிய அரசியவாதி எதிர்காலத்தில் பட்டியலிடப்படுவார் என்ற நம்பிக்கையோடு இந்த வார கதிரோட்டத்தை வடிக்க ஆரம்பிக்கின்றோம்.
கக்கன் மற்றும் காமராஜர் இருவருமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மிகவும் எளிமையான குடும்ப வாழ்வை மேற்கொண்டது போல, பொதுவாழக்கையிலும் எளிமையாகவே வாழ்ந்தார்கள்.
இவர்கள் இருவரைப் பற்றிய சிறு சிறு சம்பவங்கள் பற்றிய எழுத்துக்களை எம்மில் பலர் படித்திருப்போம். கக்கன் அவர்கள் அமைச்சராக இருந்து போதும் ஆர்ப்பாட்டமாக வாழவில்லை. அந்த பதவிகள் பறிக்கப்பட்ட போதும் கலங்காத மனத்துடன் தன் கடமைகளைத் தொடர்ந்த ஒரு கனவான் என அறிந்துள்ளோம்.
‘மை வீரர்’ காமராஜர் பற்றிச் சொல்லவே தேவையில். தன்னைத் தேடி வந்த பாரதப் பிரதமர் என்ற உயர் பதவியைத்க் கூட அடுத்துவருக்கு கரங்களிலே ஒப்படைத்தவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது தன் வீட்டுக்கு வழங்கப்பெற்ற சலுகைகளைக் கூட புறக்கணித்து மகிழ்ந்த மகத்தான மனிதர்.
தற்போது இந்திய நிர்வாக சேவையில் நல்லவர்களால் உச்சத்தில் வைத்து போற்றப்பெற்றவரே சகாயம் – ஐஏஎஸ். அவர் தற்போது தமிழ் நாட்டு அரசியலில் கால்களைப் பதித்துள்ளார். அவரைப் போன்றே அவரது அரசியல் சகாக்களும், நேர்மைக்குணம் கொண்ட கற்றவர்கள் சூழந்து வர வாக்குக் கேட்கும் வரிசையில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார். இந்த சகாயம் அணியினருக்கு நாம் எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். அவர்களுக்கு வெற்றிகள் நெருங்கினாலும் ஆபத்துக்கள் எவையும் நெருங்கக் கூடாது என்பதில் கவனத்துடன் இருக்க அவரைச் சுற்றியிருப்பவர்களின் கண்கள் துயிலாது இருக்க வேண்டும். உலகெங்கும் உள்ள தமிழ் உறவுகளோடு இணைந்து அவர்தம் அணியை வாழ்த்துவோம்.
இறுதியாக, சகாயம் ஐஎஎஸ் போன்ற நேர்மைக் குணம் கொண்ட அற்புத மனிதர்கள் இலங்கையிலும் தமிழர் அரசியல் களத்தில் அமைதியாய் இறங்க வேண்டும். எதிர்காலத்தில் அவர்களை நாம் சென்று தேடாமல், அவர்களே தம்மை அடக்கமாய் அடையாளம் காட்ட வேண்டும் என அழைப்பும் விடுப்போம்.