தீபச்செல்வன்
கனடா உதயன் பத்திரிகையில் வெளியாகும் கதிரோட்டம் எனும் ஆசிரியர் தலையங்கப் பகுதி, என் பள்ளிக் காலத்தில் அறிமுகமானது. தமிழ் இணையத்தளங்களிலும் தமிழீழத்தின் ஊடகங்களிலும் கனடா நாட்டில் இருந்து ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான ஆதரவுக் குரலாக எழுதப்பட்ட, அரசியல் விடங்களை நெருப்புப் பார்வையுடன் அணுகிய இப் பத்திகளை ஒரு சேர “இதுவரை…” என்ற பெரும் புத்தகமாக பார்க்கின்ற போது ஈழ விடுதலைப் போராட்டத்தின் குறிப்பிட்ட காலம் பற்றிய குறுக்கு வெட்டு முகத்தை நமக்கு வரலாறாக காண்பிக்கிறது.
கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.ஆர். லோகேந்திரலிங்கம், அவர்கள் மூத்த இலக்கியவாதி என்பதையும் தேர்ந்த இலக்கியவாதி என்பதையும் கதிரோட்டங்களின் தலையங்கத்தில் இருக்கும் நேர்த்தியும் அதன் ஆழமான வீச்சும் எடுத்துரைக்கிறது. அத்துடன் இலக்கியங்களின் ஆழமான பரீட்சியத்திற்கும் அப்பால், அரசியல் ரீதியாக கொண்டிருக்கும் அனுபவமும் ஈழ விடுதலைப் போராட்டம் மீதான நேர்மையான பற்றுதியும் இப் பத்திகளின் செறிவுக்கு ஆதாரமாக அமைந்துவிட்டன என்பதும் குறிப்பிட்டுக் கூற வேண்டிய விசயங்கள்.
ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தில் நகர்ந்த காலத்தில் அதாவது 2004இன் ஆரம்பத்தில் இருந்து எழுதப்பட்ட இப் பத்திகள் முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போர் காலம், அதன் பின்னர் போருக்குப் பிந்தைய காலம் 2013 வரையான மிக முக்கிய கால காட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தப்ட்ட பத்தாண்தாண்டுகளின் அல்லது முக்கியமான ஒரு தசாப்த காலத்தின் வரலாற்று ஆவணமாகவும் இப் புத்தகத்தின் தனிச்சிறப்பு பெறுகிறது. ஒவ்வொரு தலையங்கமும் மிகத் தனித்துவமாகவும் செறிவாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. நிகழ்கால நிலமைகளை வரலாற்று பூர்வமாகவும் நிலைத்து நிற்கும் மொழியிலும் திரு லோகேந்திரலிங்கம் அவர்கள் எழுதியிருப்பதும் இப் பத்தியின் சிறப்புக்கள் என்பேன்.
தாயகம், புலம்பெயர் தேசம், மற்றும் தமிழகத்தின் நிலவரங்கள் குறித்து மாத்திரமின்றி சர்வதேச அரசியல் தளங்களின் ஊடாகவும் தமிழர்களின் அரசியலை உணர்வுபூர்வமாகவும் அதேநேரம் அறிவுபூர்வமாகவும் அணுகியுள்ள இப் பத்திகளில் மாவீரர்களின் மகத்துவங்களும் கரும்புலிகளின் நிகரற்ற தியாகங்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் தேசத்தின் புதிய தலைமுறையினருக்கும் தாயகத்தின் நிலவரங்களை மாத்திரமின்றி தாய் நிலத்திற்காக போராட்டத்தின் தேவையையும் உணர்வையும் ஊட்டும் விதமாக அமைந்திருப்பதும் இந் நூலின் தனித்துவ இயல்புகள் எனலாம்.
முக்கியமாக சிங்களப் பேரினவாத்தின் கோரத்தையும் இன அழிப்பு அரசுக்கு முண்டுகொடுக்கும் தமிழ் ஒத்தோடி கைக்கூலி நபர்களையும் மிகச் சீற்றத்துடன் ‘அமைச்சன்’ என சுட்டெரிக்கும் வார்தைகளில் சாடியுள்ளார் லோகேந்திரலிங்கம். இன ஒடுக்குமுறை கண்டும் அதற்கு ஒத்துழைக்கும் துரோகங்கள் கண்டும் கொள்ளும் அளவற்ற ரௌத்திரமே இச் சொற்களின் நியாயங்களாகவும் வாசகர்களை ஆற்றுப்படுத்துகின்றன. தமிழகத்தின் அரசியல் நிலைகளை அதன் யதார்த்த நிலையில் இருந்தும் அதேநேரம் நிகழ்த்தப்பட்ட துரோகங்களை சமரசமின்றியும் விமர்சிப்பதில் திரு லோகேந்திரலிங்கத்தின் எழுத்துக்கள் நீதியின் தராசாக நிற்கிறது.
அத்துடன் புலம்பெயர் தேசத்தின் கடமைகள் தொடர்பிலான இடித்துரைப்புக்கள் மிகச் சிறந்த பொறுப்புணர்வுடன் தேசத்திற்கான பெரும் கடமையை நிறைவேற்ற வேண்டிய வலியுறுத்தலுடன் எழுதப்பட்டுள்ளன. அதேவேளை புலம்பெயர் தேச மக்களின் தாயக பற்றுதியையும் அவர்கள் செய்யும் நிகரற்ற பணிகளையும் பாராட்டி எழுதி அவர்களை மதிப்பளிக்கவும் செய்கிறார் ஆசிரியர். அத்துடன் கனேடிய அரசியலும் அந்நாட்டுக்கும் ஈழ விடுதலைக்குமான தொடர்புகளும் எடுத்துரைக்கப்படுவதுடன் வலியுறுத்தவும்படுகிறது. இதன்வழி ஈழ விடுதலைக்கு கனேடிய தேசத்தின் ஆதரவை கோரும் குரலாகவும் ஒலிக்கிறது.
இலக்கியம், பத்திரிகை, பதிப்பு, இணைய ஊடகம், மனிதநேயப் பணி என இன்றைய இளைஞர்களை விஞ்சும் வகையில் இயங்கும் ஈழத்தின் மூத்த பத்திரிகையாளராக மதிக்கப்படும் லோகேந்திரலிங்கம் அவர்கள், ஊடகப் பணிக்கு வரும் இளைஞர்களுக்கு மிக முன்னூதாரணமானவர். இவர் எழுதிய “இதுவரை..” என்ற இந்த நூல் தமிழர் தேசத்திலும் புலம்பெயர் தேசத்திலும் ஒவ்வொரு வீடுகளிலும் நூலகங்களிலும் இருக்க வேண்டியது. ஏனெனில் இப் பத்தி எழுத்துக்கள் நிகழ்கால போராட்டக் குரலாக மாத்திரமின்றி வரலாற்று ஆவணமாகவும் வடிவம் கொள்ளுகின்றன.
அச்சுப் பத்திரிகை இலத்திரனியல் பத்திரிகை என கால மாற்றங்களும் தொடர்பாடல் யுகத்திற்கும் ஏற்ப தம்மை தகவமைத்துக் கொண்ட உதயன் பத்திரிகை, புலம்பெயர் தேசத்தில் இருந்து தாயகம் நோக்கிய மண் பற்றுக் குரலாகவும் கனதி பெறுகிறது. நிலத்தில் எழுத மறுக்கப்பட்ட சொற்கள் என்ற வகையிலும் இவை வீச்சுக் கொள்ளுகின்றன. நாடு கடந்து தாய் மண்ணின் விடுதலை மற்றும் உரிமை குறித்து நெருப்புக் கனலும் மனங்களோடு வாழ்கின்ற புலம்பெயர் தேச உறவுகளின் ஒட்டுமொத்தக் குரலும் திரு லேர்கேந்திரலிங்கம் அவர்களின் இப் பத்திகளில் வெளிப்படுவதுவே இந் நூலுக்கு வரலாற்றுச் சிறப்பை சேர்க்கிறது.
புத்தகத்தின் தலைப்பு: ‘இதுவரை…’
நூல் ஆசிரியர்: என்.ஆர். லோகேந்திரலிங்கம்
வெளியீடு: கனடா உதயன் பத்திரிகை
Email:-uthayannews@yahoo.com