சிவா பரமேஸ்வரன் —மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு“.
(குறள் பால்: அறத்துப்பால், குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான் சிறப்பு)
பொருள்: எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.- பேராசிரியர் சாலமன் பாப்பையா
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவப் பெருந்தகை இயற்கை வளம், நீர் மேலாண்மை, பல்லுயிர் போற்றுதல் என எக்காலத்திற்கும் பொருந்தும் விஷயங்களை மிகவும் தீர்க்கத்தரிசனத்துடன் கணித்து நாம் பின்பற்றுவதற்கு விட்டுச் சென்றுள்ளார். அவர் அன்று கூறியதை இன்றைய சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அறிவியல் வல்லுநர்களும், அரசியல் அவதானிகளும் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மூன்றாவது உலகப் போர் ஒன்று மூண்டால் அது தண்ணீருக்காக இருக்குமே தவிர எண்ணெய்க்காக இருக்காது என்று பல ஆண்டுகளாகப் பலர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஆனால் இலங்கை அரசோ தாங்கள்- தனித்துவமான வேற்று கிரகவாசிகள் போல நடந்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ச்சியக நாட்டின் பல பகுதிகளில் இயற்கை வளங்களை அழிக்கும் நடவடிக்கையில் ராஜபக்ச அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. வடக்கே வன்னி பெருநிலப் பரப்பு தொடக்கம் தெற்கில் பல பகுதிகள் வரை இயற்கை வளங்களை அழிக்கும் நடவடிக்கை தொடருகின்றன.
சீரழியும் சிங்கராஜா வனம்
இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியமானதொரு இடம் சிங்கராஜா வனப்பகுதிக்கு உண்டு. ஐ நாவால் உலக மரபுச் சின்னம் என்று இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு இடங்களில் இந்த வனப்பகுதியும் ஒன்று. அதேபோன்று அது இலங்கையில் கடைசியாக எஞ்சியிருக்கும் மழைக்காடு மட்டுமின்றி ஐ நாவால் பல்லுயிர் பாதுகாப்பு வலையமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இவ்வளவுச் சிறப்பு வாய்ந்த அந்த வனப்பகுதிக்குள் இரண்டு நீர் நிலைகளை அமைக்க சீன நிறுவனம் ஒன்றுடன் இலங்கை அரசு ஒப்பந்தம் செய்துள்ளது பெரும் கவலைகளையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த நீர்நிலைகள் மூலம் தென் பகுதிக்கு குறிப்பாக ராஜபக்சக்களின் வாக்கு வங்கிப் பிரதேசங்களுக்கு நீரி விநியோகம் திட்டமிடப்பட்டுள்ளது என்பது திட்டத்தின் வரைவு அறிக்கையைக் காணும் போது புலனாகிறது.
நாட்டின் நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் மூத்த சகோதரருமான சாமல் ராஜபக்ச முதற்கட்டமாக அங்கு ஐந்து ஏக்கர் பரப்பளவில் இரண்டு நீர்நிலைகள் கட்டப்படும் என்றும் அதற்கு ஈடாக அந்தப் பரப்பளவை விட மிகப் பெரியதாக 100 ஏக்கர் அளவுக்கு வேறு இடத்தில் காடு உருவாக்கப்படும் என்கிறார்.
நாட்டின் ஒரே மழைநீர் காட்டின் ஒரு பகுதியை அழித்துவிட்டு வேறொரு பகுதியில் வனத்தை உருவாக்கும் எண்ணம் எந்த வகையிலும் அழிக்கப்பட்ட காட்டுக்கு ஈடாகாது என்பது அனைவரும் அறிந்ததே. மழைநீர் காடுகள் என்பது இயற்கை கொடுத்த கொடை. அதை செயற்கையாக உருவாக்குவது என்பது எந்தளவுக்கு யதார்த்தமானது என்பதற்கு பதிலில்லை.
தொலைக்காட்சி விவாதத்தில் போட்டுடைத்த சிங்கப் பெண்
உலகளவில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான- ஹூ வாண்ட்ஸ் டு பி எ மில்லினெயரின்- இலங்கை வடிவமான‘`சிரச லட்சாதிபதி“ (தமிழ்நாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி`) நிகழ்ச்சியில் பங்கேற்ற 19 வயது பெண்ணொருவர் தெரிவித்த கருத்து தற்போது நாட்டில் தீயாகப் பரவி அந்தப் பெண்ணுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஐநா மரபுச் சின்னமான சிங்கராஜா வனப் பகுதி- அபிவிருத்தி எனும் போர்வையில் அழிக்கப்படுகிறது என்று அந்தப் பெண் தெரிவித்த விஷயம் உள்நாட்டில் மட்டுமல்ல பன்னாட்டு அளவிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து பாக்யா அபேரட்ண என்ற அந்தப் பெண்ணின் வீட்டிற்கு பொலிசாரும் வனத்துறை அதிகாரிகளும் சென்று அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த நிகழ்ச்சியில் சிங்கராஜா வனப்பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பகுதிகளை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோளை அவர் விடுத்திருந்தார்.
கடந்த 1988 ஆம் ஆண்டு சிங்கராஜா வனப்பகுதி ஐ நா மரபுச்சின்னமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், கட்டுக்கடங்காத வகையில் அப்பகுதியில் கட்டுமானங்கள் இடம்பெறுகின்றன என்று அந்தப்பகுதி வாசியான பாக்யா அபேரட்ண கூறியிருந்தார்.
சுற்றுச்சூழல் அழிப்பு
“எனது கண்களால் ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அப்பகுதியில் சுற்றுச்சூழல் அழிக்கப்படுவதைக் காண்கிறேன்“ என்று பாக்யா அபேரட்ண அந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
“அங்கிருக்கும் பசுமையைப் பற்றி மட்டுமே நான் பேசவில்லை. அந்தச் சுற்றுச்சூழல் கட்டமைப்பில் மிகப் பெரிய விலங்குக் கூட்டம் வாழ்கிறது. அவர்களின் வாழ்விடங்களை அழிப்பது எனது வீட்டை இடிப்பதற்குச் சமம்“ என்று அவர் அந்த நிகழ்ச்சியில் கூறிய போது நாடே அதிர்ந்தது.
தங்குதடையின்றி அங்கு நடைபெறும் காடழிப்பை பிரபலமான அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்துவதில் தனது மகள் உறுதியாக இருந்தார் என்று அரங்கத்தில் பார்வையாளராக இருந்த அவரது தந்தை கூறியுள்ளார்.
“இதற்குப் பிறகு நான் வீட்டில் பாதுகாப்பாக இருக்க முடியுமா என்பது உறுதியில்லை“ என்றும் அப்பெண்ணின் தந்த அபேரட்ண அச்சம் வெளியிட்டுள்ளார்.
நேரடி மிரட்டல்
அபேரட்ண அஞ்சியதற்கு காரணம் உள்ளது. அரசுக்கு எதிராகவோ அல்லது மக்களை பாதிக்கும் விஷயங்களையோ எடுத்துச் சொன்னால் இலங்கையில் என்ன நடக்கும் என்பதை நாட்டிலுள்ளவர்கள் நன்கு அறிவர்.
சிரச தொலைக்காட்சியின் இந்த நிகழ்ச்சியில் பாக்யா அபேரட்ண சிங்கராஜா வனப்பகுதியில் நடைபெறும் காடழிப்பைச் சுட்டிக் காட்டியதை அடுத்து
மகாராஜா தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளரை நேரடியாகவே அச்சுறுத்தும் வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பேசியுள்ளார்.
“எமது நாட்டில் ராஜாக்களோ அல்லது மகாராஜாக்களோ இல்லை. இந்தக் குற்றக் குழுக்கள் அரசு மற்றும் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்த நினைக்கிறது. அது என்னிடம் நடக்காது. தேவைப்பட்டால் அவர்களுக்கு எப்படி பாடம் கற்பிப்பது என்று எனக்குத் தெரியும்“ என்று பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் எச்சரித்துள்ளார்.
மகாராஜா தொலைக்காட்சிக்கு மட்டுமல்ல, அவரது எச்சரிக்கை அனைத்து ஊடகங்களுக்குமானது போலவே உள்ளது. “எனது கடந்த 14 மாத ஆட்சியில், நான் ஊடகங்களின் மீது எவ்விதமான அழுத்தங்களையும் அளிக்கவில்லை. ஆனால் அவர்கள் ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்ய முயன்றால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டங்கள் உள்ளன. அப்படிப் பல வழிகள் உள்ளன, அந்த வழிகளில் நான் நடவடிக்கை எடுப்பேன்“ என்று அதிகாரத்துடன் கூடிய அச்சுறுத்தலை விடுத்துள்ளார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச.
ஐநாவுக்கு அவசரக் கடிதம்
இதனிடையே இலங்கையிலுள்ள சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் கற்கை மையம்- செண்டர் ஃபார் என்விரோண்மெண்டல் அண்ட் நேச்சர் ஸ்டடீஸ்- ஐநாவின் ஒரு அங்கமான யுனெஸ்கோவுக்கு இலங்கையில் நடைபெறும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை விளக்கி கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
“ஐ நா மரபுச்சின்னம் மற்றும் மழைக்காடுகளில் இரண்டு நீர் நிலைகளைக் கட்டுவது ஏற்புடையது மட்டுமல்ல, அது இயற்கைக்கு எதிரான குற்றமும் ஆகும். மேலும் அங்கு நிலவும் மிகவும் செழிப்பான பல்லுயிர் தன்மைக்குப் பாரதூரமாக தீங்கை ஏற்படுத்தும்“ என்று அந்தக் கடிதத்தில் அவ்வமைப்பின் தலைவர் ரவீந்திர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வனப் பகுதி இலங்கைக்கே உரிய 60% பறவைகள் மற்றும் தாவரங்களின் மூலாதார இடமாகும். சிங்கராஜா வனப்பகுதி 1978 ஆம் ஆண்டு உலகின் பல்லுயிர் பாதுகாப்பு வலையங்களில் ஒன்றாகவும், பத்தாண்டுகளுக்குப் பிறகு உலக மரபுச்சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு இயற்கை பாதுகாப்பான பன்னாட்டுக் கூட்டமைப்பு-ஐயூசிஎன்- சிங்கராஜா வனப்பகுதியின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து “கணிசமான கவலையை வெளியிட்டிருந்தது“ என்று காரியவசம் தனது கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.
எனவே சிங்கராஜா வனப்பகுதியைச் சீரழிப்பது, இலங்கையில் மிகவும் பெருமதியான இயற்கை வளத்தையும், பல்லுயிர் சூழலையும் மிகவும் பாதித்து சீர் செய்ய முடியாத தீங்கை ஏற்படுத்தும் என்று கூறி “அதை உடனடியாகத் தடுத்து நிறுத்த உதவுங்கள்“ என்று அந்தக் கடிதம் கோரியுள்ளது.
முன்மொழிவு மட்டுமே என்று அரசு `பல்டி`
உள்நாட்டில் எழுந்த கடும் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்கள் காரணமாக அரசு இப்போது `அந்தர் பல்டி` அடித்துள்ளது.
சிங்கராஜா வனப்பகுதியில் இரண்டு நிலைகளை சீன நிறுவனம் ஒன்று கட்டுகிறது என்று அறிவித்த அரசு, இரண்டே நாட்களில் அது பிரேரணை மட்டுமே என்று செவ்வாய்க்கிழமை (23 மார்ச்) அறிவித்தது.
இரண்டு நாட்களில் அறிவிப்பிலிருந்து பின்வாங்கிய ராஜபக்சக்களுக்கு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் கைவைப்பது தேன்கூட்டில் கை வைப்பது போன்றது என்பது தெரியாதா அல்லது நாட்டில் எந்தத் தேனீயும் நம்மைக் கொட்டாது என்கிற நம்பிக்கையா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
ஏற்கனவே இறுதிகட்டப் போரின் போது இலங்கை அரசும் இராணுவமும் தேன் கூட்டில் கையை வைத்தது. அப்போது தேனை நக்கி சுவை கண்ட அரசு பின்னர் தேனீக்கள் கொட்ட ஆரம்பித்தவுடன் அதன் வலியை உணர்ந்தது. தமிழ்த் தேனீக்கள் கொட்டியதைச் சுலபமாகப் புறந்தள்ளிவிடலாம் என்று கருதிய அரசு அதன் பாதிப்புகளை இன்னும் அறிந்ததாகத் தெரியவில்லை.
இப்போது நாட்டின் மிக முக்கியமான இயற்கை வளத்தில் கைவைக்க எண்ணும் அவர்கள் அதை மாற்றிக் கொள்வது அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.
தமிழர்களின் நிலங்கள் அபகிர்க்கப்படும் போது வாய் மூடி மௌனிகளாக இருந்த தென்னிலங்கை மக்கள் இப்போது சிங்கராஜா வனப்பகுதிக்காக குரல் கொடுப்பது வரவேற்கத்தக்கது.