“அண்மையில் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அது இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டது என்று கூறப்பட்டாலும் அவ்வாறு இடம்பெறவில்லை. மாறாக ‘குற்றவாளியே விசாரணைகளை நடத்தலாம் என்ற தமிழர்களின் விருப்புக்கு மாறாகவே அதன் உள்ளடக்கத்தில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், இந்தத் தடவை கொண்டு வரப்பட்ட தீர்மானம் என்பது 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை விடவும் மிகவும் பலவீனமானது.
2015 ஆண்டு நிறைவேறிய ஐ.நா தீர்மானத்தில் கலப்பு பொறிமுறைகளுடன் கூடிய பல நாடுகள் இணைந்த நீதி விசாரணையை கோரியிருந்தது. ஆனால் இப்போதைய தீர்மானம் என்பது முழுக்கவும் இலங்கையே இந்த போர்க்குற்றத்தை விசாரிக்கலாம் என சொல்கிறது. இதை இந்தியா வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது தமிழ் மக்களுக்கே பாதகமான அதுவும், ஈழத்தமிழர்கள், தமிழக தமிழர்கள் மற்றும் உலகத்தமிழர்களின் மன எண்ணங்களுக்கு பாதகம் செய்த ஒன்றாகவே நான் பார்க்கின்றேன். இது பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான தீர்மானம் என்பதை விடவும், மேற்குலக நாடுகள் புவிசார் அரசியலில் தங்களின் இருப்பை நிலைநிறுத்த எங்களை பயன்படுத்துவதாகவே இத்தீர்மானத்தை கொண்டுவந்ததாக பார்க்கிறேன். ஏனைய நாடுகளோடு சேர்ந்து இந்தியாவும் எமது மக்களை ஏமாற்றிவிட்டது”.
இவ்வாறு கூறினார் கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய அங்கத்தவருமான திரு நிமால் விநாயகமூர்த்தி.
மேற்படி விடயம் தொடர்பாக அவர் தமிழ்நாட்டின் ‘புதிய தலைமுறை இணையத்திற்கு வழங்கிய பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில், 2009 ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு விசாரணை நடத்தவேண்டும் என்ற தீர்மானத்தை இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட 6 நாடுகள் கொண்டுவந்தன. உலகமே உற்று நோக்கிய வண்ணம், உலகத் தமிழர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்த இந்த தீர்மானம் 21 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. ஆனால் இத்தீர்மானத்தை சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கியூபா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் எதிர்த்தன. இந்தியா, நேபாளம், ஜப்பான், இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. முக்கியமாக, இந்தியா இந்த வாக்கெடுப்பில் வாக்களிக்காமல் இருந்தது உலகத் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மேற்படி ‘புதிய தலைமுறை’ இணையத்தளம் கனடாவில் வாழ்ந்து வரும் நிமால் விநாயகமூர்த்தி அவர்களின் வாக்களிப்பு தொடர்பாக ஈழத் தமிழர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்று கேட்டபோது. அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட போது பின்வருமாறு தெரிவித்தார்.
“இந்தியா இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதே ஈழத்தமிழர்கள், தமிழக தமிழர்கள் மற்றும் உலகத்தமிழர்களின் விருப்பமாக இருந்தது. ஆனால் இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது அவர்களின் ஏமாற்றமாக உள்ளது. “இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் என்பது ஈழத்தமிழர்களுக்கு ஏமாற்றமான தீர்மானமே. இனப்படுகொலை உள்ளிட்ட கொடிய அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு நொந்துபோயுள்ள ஈழத்தமிழர் சமூகம், ஐ.நா சபை மற்றும் உலக நாடுகள் மூலமாக இம்முறையாவது உரிய நீதி கிடைக்கும் என்றுதான் நம்பிக்கையோடு இருந்தோம்.
இந்த தீர்மானத்தில் ஆதரவு, எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை எடுக்காமல், இந்தியா வாக்கெடுப்பை தவிர்த்தது எங்களுக்கு பெரிய ஏமாற்றம். சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துவிடும் என்பதால், இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கும் என நான் நினைக்கிறேன். ஆனால் தொன்று தொட்டு இந்தியாவுடன் ஒட்டி உறவாடக்கூடிய சமூகம் ஈழத்தமிழர் சமூகமே. எனவே இந்திரா காந்தி காலத்தில் எப்படி எங்களை இந்தியா அணுகியதோ, அதேபோல இப்போதைய அரசும் அணுக வேண்டும் என்பதே எமது விருப்பம்.
ஈழத்தமிழர்கள் முழுக்க முழுக்க ஐ.நாவையே நம்பிக் கொண்டிருப்பது சரிதானா என தெரியவில்லை. இனிவரும் காலங்களில் உலக அளவில் ஈழத்தமிழர்கள் அறிவுசார் தளங்களில் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என நினைக்கிறேன். இப்போதைய தீர்மானத்தால் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை, இந்தியா எங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால் மட்டுமே, எங்களுக்கான நிரந்தரமான அரசியல் பாதுகாப்பு பொறிமுறை உருவாகும் என நினைக்கிறேன். சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள தற்போதைய இலங்கையில், ஈழத்தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை உருவாக்குவதே இந்தியாவுக்கும் சாதகமான விஷயமாகும். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் போது, இந்தியா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களின்படியும், அதனை காலம் கடத்தும் வாய்ப்பாகவே இலங்கை அரசு பயன்படுத்தியதே தவிர, எந்த காத்திரமான நடவடிக்கையும் இல்லை, உலக நாடுகளும் இதற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. முன்பை விடவும் இலங்கை அரசு இப்போது வலுவாக உள்ளது அதனால்; இப்போதைய தீர்மானத்தை அவர்கள் பொருட்படுத்தவே மாட்டார்கள், இந்த தீர்மானம் எங்களின் வெற்றிதான் என்று இலங்கை அரசே சொல்கிறது. ஈழத்தமிழர் மற்றும் புலம் பெயர் தமிழர்களின் தொடர் போராட்டமாக இருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்வாக விவகாரங்களில் கூட ஐ.நா எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்பது பெரும் வருத்தமாக உள்ளது.
தற்போது உலகம் முழுவதும் ஈழத்தமிழர்கள் தனித்தனியாக போராடுகிறார்கள், ஆனால் இது அறிவுசார்ந்த தளங்களின் ஒற்றுமையுடன் வடிவமைக்கப்படவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். மேற்குலக நாடுகளை மட்டுமே முழுமையாக நம்பியிருந்தால் எங்கள் போராட்டம் பின்னடைவை சந்திக்கும் என்றே நினைக்கிறேன். தமிழகமும், ஈழத்தமிழர் விவகாரத்தில் எத்தகைய அழுத்தம் கொடுக்க முடியுமோ, உதவ முடியுமோ அதை தொடர்ச்சியாகச் செய்கிறார்கள். எனவே, இந்தியா இனியேனும் எங்களை ஆதரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, அதன் மூலமே எங்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம்” என்றும் கூறினார். திரு நிமால் விநாயகமூர்த்தி.