Ontario’s Finance Minister Peter Bethlenfalvy
எமது முதல்வர் பற்றி நாம் பெருமிதம் கொள்கின்றோம்: அவர் எப்போது திட்டங்களை நிறைவேற்றுவதையே விரும்புகின்றவர்.
மாகாண நிதி அமைச்சர் புகழாரம்
எமது மரியாதைக்குரிய முதல்வர் டக் போர்ட் அவர்கள் எப்போதும் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவதிலேயே கவனம் செலுத்துகின்றார். அதுவும் எவ்வளவு விரைவாக திட்டங்கள் மக்களுக்கு பலனைத் தருகின்றன என்பதை எப்போதும் உறுதி செய்கின்றார். எனவே அவரது வழிகாட்டலில் நாம் பணியாற்றுவதை பெருமையாகக் கொள்கின்றோம்”
இவ்வாறு கூறினார் ஒன்றாரியோ மாகாணத்தின் நிதி அமைச்சர் பீற்றர் பெத்லென்பல்வி.
நேற்று முன்தினம் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் 2021ம் ஆண்டிற்காக வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய அவர், நேற்றைய தினம் வியாழக்கிழமை, ஒன்றாரியோ மாகாணத்திலுள்ள பல்மொழிப் பத்திரிகையாளர்களை இணையவழி ஊடாக சந்தித்து உரையாடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்படி ஊடகச் சந்திப்பில் ஒன்றாரியோ மாகாண நிதி அமைச்சின் பாராளுமன்ற உதவீயாளர் ஸ்டான் சோ மற்றும் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதியின் உறுப்பினர் அரிஸ் பாபிகியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதலில் கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து ஒன்றாரியோ அரசின் சார்பாக மாகாண நிதி அமைச்சின் பாராளுமன்ற உதவீயாளர் ஸ்டான் சோ மற்றும் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதியின் உறுப்பினர் அரிஸ் பாபிகியன் ஆகியோர் தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள்.
அவர்கள் தங்கள் உரையில் மாகாண முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் எமது ஒன்றாரியோ மாகாண மக்கள் தொடர்பாக காட்டும் கரிசனை மற்றும் பிரச்சனன்த் தீர்க்க எடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவை பற்றி எடுத்துரைத்தார்கள்.
அவர்களைத் தொடர்ந்து உரையாற்றிய மாகாண நிதி அமைச்சர் பீற்றர் பெத்லென்பல்வி அவர்கள் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தொடர்பான முக்கிய விடயங்களை எடுத்துரைத்தார்.
அவர் அங்கு உரையாற்றுகையில்
“கொரோனாவின் தாக்கத்தை அரசாங்கமும் ஒன்றாரியோ வாழ் மக்களும் எதிர்கொண்டு பின்னர் தடுப்பூசி பயன்படுத்து முறை உலகின் பல நாடுகளிலும் ஆரம்பிதத போது எமது முதல்வரும் சுகாதார அமைச்சரும் ஏனைய முக்கிய அமைச்சர்களும் அதிகாரிகளும் எமது மாகாண மக்களுக்கு தடுப்பூசியை உடனடியாக வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கினார்கள். ஆனால் ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட நிதியே ஒதுக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்திருந்தாலும் நடவடிக்கைகளில் இறங்கிய பின்னரே எமக்குத் தெரிந்தது, இன்னும் அதிகளவு நிதி தடுப்பூசிகளை கொள்வனவு செய்வது மற்றும் கொள்வனவு செய்யப்பட்டவற்றை மக்களின் இடங்களுக்கு கொண்டு சென்று அவர்களுக்கு செலுத்துவதற்கு தேவைப்பட்டது என்ற வியடம்.
ஆனால் எமது முதல்வர் அவர்கள் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி வைத்தியசாலைகள், மற்றும் முதியோர் நிலையங்கள், குழந்தைகள் காப்பங்கள், பாடசாலைகள் அத்துடன் தடுப்பபூசிகள் ஆகியவற்றுக்கு அதிகளவு நிதியை ஒதுக்கும் படி எம்மிடம் கேட்டுக்கொண்டார். எனவே நாம் அவருக்கும் அவரது அலவலகத்தின் அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.
தொடர்ந்து அமைச்சர் அவர்கள் பல்மொழிப் பத்திரிகையாளர்களினால் முன்வைக்கப்பெற்ற கேள்விகளுக்கு பதிலளித்தார்.
“இந்த 2021ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சிறு தொழில் செய்யும் நிறுவனங்கள் அல்லது தனி மனிதர்களுக்கு எவ்வாறான சாதகமான நிதி ஓதுக்கீடுகளை செய்துள்ளீர்கள்” என்று ஒரு சீன மொழிப் பத்திரிகை ஆசிரியர் முன்வைதத கேள்விக்கு பதிலளிக்கையில்,
“”இது நல்லதோர் கேள்வியாகும். இந்த கோவிட்-19 பாதிப்பு ஒன்றாரியோவின் சிறு தொழில் செய்கின்ற நிறுவனங்களையும் தனி மனிதர்களையும் மிகவும் பாதித்துள்ளது. எனவே அவர்களை தூக்கிவிட வேண்டிய மாகாண அரசின் முக்கிய கடமையாகும்.
எமது 2021 வரவு செலவுத் திட்டத்தில் சிறு தொழில் நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வழங்குகின்றோம். உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்கு தொழில் சார்ந்த பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் போது ,அவர்களுக்கு பயிற்சிகளை வழங்க நிதி உதவிகளை அறிவித்துள்ளோம்.
அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் மேலும் தொழிற்பயிற்சி தேவையாக இருந்தால் தொழில் நுட்பக் கல்லூரிகள் அல் சமூக கல்லூரிகள் ஆகியவற்றிற்குச் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு தகுதிவாய்ந்த தொழில் வல்லுனர்களாக பட்டம் பெற்ற அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுகின்றவர்களாக விளங்குவார்கள். அத்துடன் சேதமடைந்த அல்லது இயந்திரங்கள் அல்லது கருவிகளை அகற்றி விட்டு புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்ய நிதி உதவிகள் வழங்கப்படும். அப்போது அந்த நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்” என்றார்