தென்னிலங்கையில் லொறிச் சாரதி ஒருவரை மோசமாகத் தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.
தென்னிலங்கையின் பன்னிபிட்டி பகுதியில் லொறி சாரதி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
போக்குவரத்து கடமையில் இருந்த மேற்படி பொலிஸ் கொன்ஸ்டபிள் வீதியில் வைத்து, நபர் ஒருவரை ஆவேசகமாகவும், கொடூரமாகவும் தாக்கும் வீடியோ காட்சியொன்று நேற்றைய தினம் சமூக ஊடகங்களில் மிகவும் வேகமாக பரவியிருந்தது.
ஹைலெவல் வீதியின், மஹரகம – பன்னிபிட்டி பகுதியில் வைத்து இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் லொறியொன்றின் சாரதி ஒருவர் இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியிருந்தார் என்பதோடு, தாக்குதலை மேற்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மஹரகம பொலிஸ் நிலையத்தில் பணிபுரிபவர் எனத், தெரியவந்தது.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், வீதியில் வைத்து சாரதியை தாக்கி தரையில் தள்ளிவிட்டு, பின்னர் சாரதியின் உடலில் ஏறி குதிக்கும் காட்சிகள், குறித்த வீடியோவில் பதிவாகியிருந்தது. மஹரகம பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி மீது குறித்த லொறி மோதி விபத்துக்குள்ளானதன் காரணமாக, இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி, களுபோவில மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தாக்குதலை மேற்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகரவின் உத்தரவுக்கமைய, நேற்றையதினம் (29) பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் இதனைத் தொடர்ந்து தற்போது குறித்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை இன்று செவ்வாய்க்கிழமை நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, எமது செய்தியாளர் அறிவித்துளளார்.