(மன்னார் நிருபர்)
(31-03-2021)
இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் இன்றைய தினம் புதன் கிழமை காலை 9.30 மணியளவில் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
மன்னார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை(30) காலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்கு சபை பேரூந்தில் பயணித்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதோடு,ஜெயபுரம் பகுதியில் வைத்து பேரூந்தின் சக்கரத்திற்கு காற்று போய் இடை நடுவில் நின்றுள்ளது.
இதனால் குறித்த பேரூந்தில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதோடு,நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் பிரிதொரு பேரூந்தில் யாழ்ப்பாணம் நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தனர்.
குறித்த பேரூந்து நீண்ட தூர பயணத்திற்கு உகந்தது இல்லை எனவும், குறித்த பேரூந்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக பயணம் செய்த பயணிகள் விசனம் தெரிவித்தனர்.
குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகிய நிலையிலும், அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும்,குறித்த பிரச்சினைகள் தொடர்பாக ஆராய அரசாங்க அதிபர் இன்று புதன் கிழமை(31) காலை 9.30 மணயளவில் இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதன் போது பேரூந்து பற்றாக்குறை காரணமாகவே குறித்த பேரூந்து சேவையில் ஈடுபட்டாகவும், எதிர் வரும் காலங்களில் அவ்வாறான பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட மாட்டாது எனவும், மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரிங்களுக்காக மன்னார் சாலை அதிகாரிகள் அரச அதிபரிடம் மன்னிப்பு கோரினர்.
மேலும் இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் சாலை அதிகாரிகள் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
குறிப்பாக பழுதடைந்த போரூந்துளை திருத்துதல், பேரூந்தின் இருக்கைகளை சீர் செய்தல் போன்ற வேளைத்திட்டங்கள் தாமதமாகுவதாகவும், மன்னாரில் சில வேளைத்திட்டங்களை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதோடு, அதற்கான செலவீனங்களை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் 2014 ஆம் ஆண்டிற்கு பின்னர் மன்னார் சாலைக்கு புதிய பேரூந்துகள் வழங்கப்படாத நிலை காணப்படுவதாகவும், தற்போது உள்ள பேரூந்துகளை வைத்தே போக்குவரத்து சேவைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
எனவே மன்னார் சாலையில் உள்ள பிரச்சினைகளை பூர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். இவ்விடையம் தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.