சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்
உலகளவில் இராஜதந்திர உறவுகள் பல மட்டங்களில் பல வகைகளில் கையாளப்படுவது வழக்கம். அது விளையாட்டின் மூலம், கலை கலாச்சாரக் குழுக்களின் பயணங்கள் மூலம், மக்களின் நேரடித் தொடர்புகள் மூலம் என்று அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப முன்னெடுக்கப்படும். இது ஆங்கிலத்தில் `பின்வாசல் இராஜதந்திரம்` என்றழைக்கப்படுகிறது.
அப்படி இந்தியா முன்னெடுத்துள்ள ஒரு பன்னாட்டு இராஜதந்திரம் `தடுப்பூசி இராஜதந்திரம்`-Vaccine diplomacy-. உலகளவில் பெரும் பாதிப்பொன்று ஏற்படும் போது அனைவருக்கும் உதவுவது ஜனநாயாகக் கடமை என்று இதன் மூலம் இந்தியா ஒரு செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. இதில் இந்தியாவின் சுயநலன் இருந்தாலும் பொதுநலன் இருப்பதையும் மறுக்க முடியாது.
அவ்வகையில் கனடாவுக்கும் இந்தியா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. முதல் தொகுதியான ஐந்து லட்சம் டோஸ் கனடாவைச் சென்றடைந்ததும், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியப் பிரதமரை தொலைபேசியில் அழைத்து நன்றி கூறினார்.
இவ்வையகத்தை ஆட்டிப் படைக்கும் கொரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து அறிவியல் அறிஞர்களால் உறுதியாகக் கூற முடியாமல் திணறுகிறார்கள்.
இப்போதைக்கு சமூக இடைவெளியைப் பேணுதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்வதோடு தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே அந்த கொடிய ஆபத்திலிருந்து தற்காத்து கொள்ள ஒரே வழியாகவுள்ளது.
தடுப்பூசி விஷயத்தில் உலகளவில் இந்தியாவே முன்னணி தயாரிப்பு மையமாகவுள்ளது. அமெரிக்காவிலுள்ள ஃபைசர் மற்றும் பிரிட்டனிலுள்ள ஆஸ்ட்ரா ஜெனிகா ஆகிய இரு முன்னணி மருந்து தயாரிக்கும் பெரு நிறுவனங்கள் பல மாதங்கள் ஆய்வு நடத்தி தடுப்பூசிகளைத் தயாரித்து உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு அளித்துள்ளது.
அவ்வகையில் கனடாவுக்கும் வந்திறங்கியுள்ள தடுப்பூசிகளின் மேலுறையிலுள்ள தகவல்களை மேம்படுத்தியுள்ளதாக நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து உருவாக்கி, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் தயாரித்து கனடாவுக்கு வந்துள்ள `கோவிஷீல்ட் தடுப்பூசியின் மேலுறையில் “மிகவும் அபூர்வமாக குறைந்த அளவிலான இரத்த தட்டுக்கள் (blood platelets) தொடர்புடைய இரத்த உறைவு ஏற்படக் கூடும்“ எனும் எச்சரிக்கை வாசகத்தையும் தெரிவிக்குமாறு அந்நிறுவனத்திற்கு கூறி அதை மேலுறையில் மேம்படுத்தியுள்ளதாக கனேடியசுகாதாரத்துறை கூறியுள்ளது.
ஐரோப்பாவின் சில நாடுகளில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட சிலருக்கு இரத்தக் கட்டு ஏற்பட்டதையடுத்து கவலைகள் எழுந்தன. உடனடியாக டென்மார்க், நார்வே மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் இந்தத் தடுப்பூசியின் இறக்குமதியை நிறுத்தி வைத்தன. பின்னர் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமது தடுப்பூசிக்கும் இந்த இரத்தக் கட்டுகளுக்கும் தொடர்பில்லை என்று விளக்கமளித்து ஆய்வுச் சான்றுகளையும் முன்வைத்ததை அடுத்து இந்தப் பதற்றம் தணிந்தது.
இதையடுத்தே கனேடிய அரசு கூடுதல் எச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தமது குடிமக்களுக்கு தடுப்பூசியை அளிக்கும்போது, ஒரு அரசு எந்தளவுக்கு கூடுதலான கவனம் எடுத்துக் கொள்கிறது என்பதற்கு கனேடிய அரசு ஒரு உதாரணமாக உள்ளது.
அதேவேளை கனடா சுகாதாரத்துறையான `ஹெல்த் கனடா` தொடர்ந்து இந்த தடுப்பூசியை ஆதரிக்கிறது. இதுவரைஇந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்ட யாருக்கும் ரத்தக்கட்டு ஏற்படவில்லை என்பதையும் கனேடிய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. எதிர்வரும் மே மாதம் மேலும் 1.5 மில்லியன் டோஸ் அளவுக்கு இந்த தடுப்பூசியை கனடா இறக்குமதி செய்யவுள்ளது.
நாட்டிலுள்ளவர்கள் அனைவருக்கும் மிக விரைவாக தடுப்பூசியை வழங்குவது தமது அரசின் முன்னுரிமை என்று பிரதமர் டிரூடோ அறிவித்துள்ளார்.
இரத்தத்திலிருக்கும் கூறுகளான இரத்த தட்டுக்கள் காயங்கள் ஏற்படும் போது உடலிருந்து வெளியேறும் இரத்தத்தின் அளவைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது.
தடுப்பூசியின் மேலுறையில் இந்த கூடுதல் எச்சரிக்கை வாசகத்தைச் சேர்ப்பதன் மூலம், தடுப்பூசி செலுத்தி கொள்ளும் யாருக்கேனும் மூச்சுத் திணறல், நெஞ்சு வலி,காலில் வீக்கம் அல்லது தொடர்ச்சியாக வயிற்றில் வலியிருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று மக்களை எச்சரிக்கவே அந்த கூடுதல் வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது.