ஏப்ரல் 01. 2021
நோர்வே
தமிழ்மக்களின் பெருமதிப்பைப் பெற்ற மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் இழப்பு தமிழ்மக்களுக்கு பேரிழப்பாகும் -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-
இனவழிப்பு நடைபெற்ற போது 70000 மக்கள் மட்டுமே வன்னியில் உள்ளனர் என்று சிங்கள அரசும் இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ப்ரணாப் முகர்ஜியும் கூறிபோது அந்தக்கூற்றை மறுத்து 146679 தமிழ்மக்கள் காணாமல் போயுள்ளார்கள் என்று உலகுக்குத் தெரியப்படுத்தியவர் மதிப்பிற்குரிய பேராயரே ஆவார்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் நீதிக்காகவும் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காவும் உரக்கக்குரல் கொடுத்தவர்களில் ஆயர் முக்கியபங்கு வகித்தார். தமிழினத்தின் விடுதலைக்காக பல முனைகளிலும் முனைப்புடன் செயற்பட்ட சிறந்த தமிழின உணர்வாளர். 2009ல் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ்மக்களின் இருப்பைக்காக்க தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் உருப்பெற வேண்டும் என்று பாடுபட்டு தோற்றுனராகவும் செயற்பட்டார். பேராயரின் முனைப்பால் தான் தமிழ் சிவில் சமூக அமையம் உருப்பெற்றது.
பேராயரின் முனைப்பான செயற்பாடுகளை சிங்கள அரசு திட்டமிட்டே முடக்கியது. ஆயரின் இழப்பானது தமிழ்மக்களைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மன்னார்ப் பிரதேசத்தில் நில ஆக்கிரமிப்பு நடைபெற்போது தமது திருச்சபையால் நிலங்களை வாங்கி போரால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு இலவசமாகப் பகிர்ந்தளித்தார். போரின் பின்பான காலப்பகுதியில் தமிழர்களின் காவலனாக இருந்து தமிழ்மக்களுக்காகப் பாடுபட்டு உழைத்த அன்பிற்குரியவர்.
நீண்ட காலம் உடல் சுகவீனம் காரணமாக ஓய்வு நிலையில் இருந்த மறைமாவட்ட ஆயர் யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 01.04.2021 அன்று வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் இறைபதம் அடைந்ததாக மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சூசை அடிகளார் தெரியப்படுத்தியுள்ளார்.
பேராயர் மதத்திற்கு அப்பாற்பட்டு கடந்த போராட்ட காலத்தில் பல்வேறு தரப்புக்களுடனும் மக்களின் விடுதலை தொடர்பிலான தொடர் பேச்சுவார்தைகளிலும் மக்களின் விடுதலைக்கான செயற்பாடுகளிலும் முனைப்பாகச் செயற்பட்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. யுத்த காலங்களில் எந்தப் பயமோ தயக்கமோ இன்றி சிங்கள இராணுவ முகாம்களுக்குள் சென்று மக்களின் நாளாந்த இயல்பு வாழ்விற்கு இடையூறு செய்யக்கூடாது என்று வாதாடியுள்ளார்.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை ஆயர் அவர்களின் அர்ப்பணிப்பான மாபெரும் பணிக்காக எமது இறுதி வணக்கங்களையும் நன்றிகளையும் கூறிக்கொள்கின்றோம். இராயப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்களின் பரிசுத்த ஆத்மா சாந்தியடையட்டும்.
– தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் –
– அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –