மொன்றியால் -வீணை மைந்தன்
மஞ்சத்தில் முகம் புதைத்த- என்,
நெஞ்சத்தில் நிலைத்திருக்கும்
அஞ்சனமையுடை அழகு தமிழ் மீனாளை
கெஞ்சி நான் அழைப்பதெல்லாம்
தஞ்சமென சரண்புகவே!
அஞ்சேல். அஞ்சேல் என
அன்புருவாய் வந்திடுவாள்!
எந்தன் உயிர் நிலைப்பதற்கு
என்றென்றும் துணையிருக்கும்
அகிலாண்டகோடி
பிரம்மாண்ட நாயகி,
மஞ்சள் முகத்தினிடை
மங்கலத் திலகமுடன்
மாலைக் கதிரொளியாய்
ஒளிவீசும் பெருமாட்டி!
மனசெல்லாம் நிறைந்திருப்பாள்,
தங்கமகள் சிலசமயம்
சிங்கத்தில் வலம் வருவாள்,
பொங்குவாள்; பூரிப்பாள்,
அங்கயற்கண்ணியவள்
அடிபணிந்து வணங்கிடுவேன்!
இச்சையுடன் அவள் முகத்தை
லஜ்ஜையின்றி நோக்கிடுவேன்,
குங்குமம் துலங்கிடவே
குமின்சிரிப்பு இதழ் சிந்தும்
நான்மாடக்கூடல்
கோபுரத்து மலையரசி,
பச்சைப் புடவைக்காரி
பவளவாய் முத்துடையாள்,
மூவுலகும் ஒளிசிந்தும்
மூக்குத்தி அம்மன் அவள்
வாய் மலர்ந்து தூங்கென்றாள்!
தாய் எனும் தத்துவம்
தான் எனச் சொல்லிய
மான்விழியாள் மதுரை மீனாட்சி!
மனசினிலே கோயில் கொண்டாள்!
2.
மாராப்புச் சேலைக்குள்
தாராளமாய் எனை அணைத்துத்
தாலாட்டி உறங்க வைக்க
வேறுலகம் அழைப்பது போல
வேறொருத்தி எனைத் தழுவி
விதவிதமாய் முத்தமிட்டாள்!
யாரென்று நான் வினவ,
பாயில் நீ படுத்தாலும்
பஞ்சனையில் விழுந்தாலும்,
மஞ்சத்திலிருந்துன்னை
நெஞ்சத்தில் கட்டிப்போடும்
நித்திரா தேவி என்றாள்!
சொத்தென்ன சுகமென்ன
அத்தனையும் உனக்கே தான்
மெத்தென்று எனை அணைத்து
மேனி தழுவு என்றேன்!
மோனநிலைத் துறவியையும்
மோகத்தில் மூழ்கடித்த
மேனகையாள் ஸ்பரிசமென
ஆண்மையை இழந்தே தான்,
அவள் அணைப்பில் தொலைந்தேன் யான்!
3.
காணாமல் போன கைதிகளில் ஒருவனென(க்)
கண்களை மூட வைத்து
கண்ணாம்பூச்சி ஆட வெனக்
காரிகையாள் இன்னொருத்தி
வாரியெடுத்தென்னை
மாரியென முத்தமிட்டாள்!
யாரடி நீ மோகினி என்றேன்
காய்கின்ற நிலவெனக்குச் சுடுவதனால்
நோய் போக்கும் உன் மேனி தழுவுவதற்கு
வந்திட்ட கனவு மங்கை நான் என்றாள்!
ஆஹா! ஓர் இரவில் இரு மங்கை,
எனைத் தழுவ இன்பந்தான்.. இன்பந்தான்.. !
இதுவன்றோ சொர்க்கம் என்பேன்,
புது வெள்ளம் பாய்ந்தது போல்
புத்துணர்ச்சி காணுகின்றேன்.
மதுக்குடத்தில் போட்டுவைத்த
கம்பனவன் கவிதைகள் போல்
நீள் விழியாள் நித்திரையும்
கலையரசி கனவுமங்கை இருவரையும்
கவிதைப் புத்தகமாய் புரட்டிப் புரட்டி,
புதுப்புது அர்த்தங்கள் நான் கற்றேன்!
நேற்று வரை என்னை நெடுநாளாய் தூங்கவைத்த
நித்திராதேவியிவள் நீட்சியாய் கனவு மங்கை
இருவரதும், உறவுகளை உடைத்தெறிய உரிமையுடன்
இன்னொருத்தி ஓடோடி வந்திட்டாள்!
4.
பருவக் குமரியிவள் பதினாறு வயதுடையாள்,
முறுவல் முகத்தினிலே முழு நிலவை பார்க்கின்றேன்,
முல்லைப் பூ; மல்லிப் பூ; அல்லிப் பூ; செண்பகப்பூ
எங்கெங்கு நோக்கினும் அழகின் பொன் சிரிப்பு!
எல்லையில்லா புன்சிரிப்பு இவள் போகுமிடமெல்லாம் ;
கொஞ்சு மொழி பேசும் வஞ்சிமகள் போன்று
கொடியிடையில் மணிச்சரங்கள் மின்னி விளையாடும்,
கொலுசின் ஒளி கிண்கிணியாய் மணிக்கவிதை பாடும்,
புள்ளினங்கள் கூவும்; பூந்தென்றல் வீசும்,
பச்சை மயில் ஆடும்; பசுங்கிளிகள் பாடும்,
இச்சை கொண்டு இளமான்கள் இன்பமுடன் துள்ளும்,
இளவேனிற் காலமகள் இவள் தந்த சீதனமாம்,
இத்தனையும் உனக்குத்தான்,
எழுந்து நீ வா வென்றாள்!
சித்திரையாள் அழைக்கின்றேன்,
சேதியொன்று சொல்லிடுவேன்,
சீக்கிரமாய் எழுகவென்றாள்!
எத்தனை காலம்தான்
முகக்கவசம் அணிந்து
முகம் மறைத்து முக்காடிட்டு
அகத்தினிலே அச்சம் குவித்து
இகசுகத்தைத் தொலைத்து
இருளிடையே நீ வாழ்வாய்?
முகிலைக் கிழித்து வந்து
முழு நிலவைப் பழித்துவரும்
சேல்விழியாள் செப்புகின்றாள்
ஊழ்வினையோவென்று
ஏமாந்து தூங்கிடாதே!
மரணத்தை மலிவாக்கும்
கொரோனாக்கள் துணையுடனே
அரசோச்சும் ஆர்எஸ்எஸ் கிருமிகளை
இந்தியப் பாசிசத்தை
வெந்தணலில் பொசுக்குதற்கும்,
எந்தையர் நாட்டை எம்மினத்தை
முந்தைய சங்கிலியும் வன்னியனும்
சொந்தங் கொண்டாடிய திருவிடத்தை
சிந்தை சிறிதுமின்றிச் சீரழிக்கும்
அந்தகரை – மந்திகளை – ஆணவப் பிறவிகளை
அம்பாந்தோட்டைக்கு அனுப்பி வைப்பதற்கும்,
சித்திரை நான் வந்துவிட்டேன்!,
சிரிக்கட்டும் உந்தன் ஊர்
வசந்தகாற்றில்….!
நித்திரை விரட்டி இன்பக்கதைகள் பேசி,
முத்திரை பதிய முத்தங்கள் நான் தருவேன்!
வீரனே! என்விழி நிறைந்தவனே !
விடுதலைக்குரல் எழுப்பி
விரைந்து நீ வந்திடுவாய் !
சித்திரை என் சேலைக்குள்
சிறை பிடித்துச் சென்றிடுவேன்!
கைதியாக அல்ல …
காதலால் என்றுரைத்தாள்..
ஆதலால்,
நானும் அவளுடனே செல்கின்றேன்!