சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டு செய்தியாளர்
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்“
–குறள் 664 (பொருட்பால் – அமைச்சியல் – வினைத்திட்பம்)
இந்தக் குறளில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் காலஞ்சென்ற ‘மக்களின் ஆயர்‘ இராயப்பு ஜோசப் அவர்களுக்கு முற்றாகப் பொருந்தும்.
அவர் ஆயர், ஆண்டகை என்பதைவிட தமிழ் மக்களால் ஆண்டவராகவே பார்க்கப்பட்டார். ஆம் தமிழ் மக்களுக்காக அவர் சொன்னதையும் செய்தார், மக்களின் துன்பம் அறிந்து சொல்லாததையும் செய்தார்.
மிகவும் மோசமான உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் மக்களை காப்பாற்ற வேண்டிய கடமைமதத்திற்கு உண்டு என்று உணர்த்தியவர் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்கள்.
லண்டன் பிபிசி தமிழோசையின் மூத்த தயாரிப்பாளராக நான் இருந்த காலத்தில் அவருடன் பல விஷயங்கள் குறித்து உரையாடும் வாய்ப்பும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது.
போர் வலையத்தில் நடைபெற்ற கொடூர சம்பவங்களைக் காழ்ப்புணர்ச்சியின்றி வெளியுலகத்திற்கு எடுத்துச் சென்றதில் அவர் முக்கியப் பங்காற்றினார். யுத்த காலத்தில் களத்திலிருந்து தகவல்களைப் பெறுவது மிகவும் சவாலான ஒன்று. முதலில் தொடர்புகள் இருக்க வேண்டும், அப்படி தொடர்புகள் இருந்தாலும் செய்திக்காக அழைக்கும் போது தொடர்பு கிடைக்க வேண்டும். தொடர்பு கிடைத்தாலும் அது தெளிவாக இருக்க வேண்டும். தெளிவாக இருந்தாலும் இடையே துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். இப்படிப் பல நெருக்கடிகளுக்கு இடையே பல முறை அவருடன் உரையாடியுள்ளேன்.
அவரை நேரடியாகவே மொபைல் தொலைபேசியில் அழைக்க முடியும். ஆயராக இருந்தாலும் அழைப்பை ஏற்பார். விஷயத்தைச் சொல்லி பேட்டி வேண்டும் என்றதும், சரியென்றால் உடனடியாகவோ அல்லது சிறிது தாமதமாகவோ நேரம் ஒதுக்கிக்கொடுப்பார். அவசரப்பட்டு `எடுத்தோம் கவிழ்த்தோம்` என்று பேசும் குணம் அவரிடம் இருந்ததில்லை.
போர்க்காலத்தில் கூறப்படும் எந்தத் தகவலும் திரிபுபடுத்தப்பட்டு ஆபத்துக்கு இட்டுச் செல்லும் என்பதை நன்கு அறிந்தவர் இறைவனடி சேர்ந்துள்ள ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள்.
அதேவேளை, தகவல்களை சேகரித்த பிறகே பேசும் தன்மை கொண்டவர். “தம்பி கொஞ்சம் பொறுங்கோ, விசாரித்துப் போட்டுச் சொல்கிறேன்“ என்று அவர் பல முறை கூற நான் கேட்டுள்ளேன்.
அவருடன் நான் பேசிய பல முக்கியமான நாட்களில் ஒன்று `மடுமாதாவும் வலிந்த தாக்குதல் காரணமாக இடப்பெயர்வுக்குள்ளான` நாள். அதற்கு சில நாட்கள் முன்னரே மன்னார் தேவாலாயத்தைச் சுற்றியுள்ள பகுதிளில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன.
மன்னார் மறைமாவட்டத்தின் பல பகுதிகள் போர்க்காலத்தில் மோசமான பாதிப்புக்களை சந்தித்தன. அங்கு தமிழ் மக்களுக்கு அடைக்கலமாகத் திகழ்ந்த பல தேவாலயங்கள் தாக்கப்பட்டன, மக்கள் கொல்லப்பட்டனர், அங்கவீனர்கள் ஆக்கப்பட்டனர் அல்லது காணாமல் போயினர். கத்தோலிக்க திருச்சபையின் பல குருமார் தொடர்ச்சியாக மோசமான யுத்தமொன்றை முன்னெடுத்த கொடுங்கோல் ஆட்சியில் கொல்லப்பட்டனர் அல்லது அதனால் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் ஷெல்லடித் தாக்குதலிருந்து தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.
மன்னார் பகுதி மக்களுக்கு மட்டுமின்றி இலங்கை முழுவதும் மடு மாதா மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தனர். தன்னிடம் அடைக்கலம் புகுந்தவர்களை காத்து இரட்சித்து வந்த மடு மாதாவே இடம்பெயர்ந்து செல்லும் நிலையை உருவாக்கியது 2008 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த போர். அந்த ஆண்டின் முற்பகுதியிலிருந்தே மன்னார் பகுதியில் இலங்கை படைகளின் தாக்குதல் மிகவும் தீவிரமாக இருந்தது. ஏராளமானோர் அங்கிருந்த தேவாலயங்களில் தஞ்சமடைந்தனர்.
அரசின் பார்வையில் தமிழர்கள் அனைவருமே விடுதலைப் புலிகளாகத் தெரிந்தனர். தேவாலயங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களுடன் பதுங்கியுள்ளனர் என்று அரசு பிரச்சாரம் செய்து வந்தது. தேவாலயங்கள் இருக்கும் பகுதியைச் சுற்றியும் தாக்குதல்கள் ஆரம்பமாயின.
அவ்வகையில் மடு மாதா தேவாலயத்தைச் சுற்றியும் தாக்குதல்கள் இடம்பெற ஆரம்பித்தன. அந்த தேவாலயத்தை விடுதலைப் புலிகள் ஒரு தளமாகப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்துகின்றனர். ஆலய வளாகத்திலிருந்து புலிகள் எறிகணைகளை ஏவுகின்றனர் என்றெல்லாம் அரசு தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்து, அந்தப் பகுதியின் மீதான தனது தாக்குதலை நியாயப்படுத்தியது.
இந்நிலையில் மக்களை மட்டுமின்றி மடு மாதாவையும் காப்பாற்ற வேண்டிய நெருக்கடியான நிலைமன்னார் மறை மாவட்டத்திற்கு ஏற்பட்டது. 400 ஆண்டுகளுக்கும் பழமையான தேவாலயத்தையும் அங்கிருந்து அன்பர்களுக்கு அருள்பாலிக்கும் மடுமாதாவையும் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தததை எதிர்கொண்ட ஆயர் மிகவும் துணிச்சலான முடிவொன்றை எடுத்தார். அது மடு மாதாவின் `திருச்சொரூபத்தை` மடு தேவாலயத்திலிருந்து பாதுகாப்பாக விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த தேவன்பிட்டி புனித சேவியர் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்வது என்கிற முடிவு.
அந்த முடிவுக்காக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் ஆயர் இராயப்பு ஜோசப். மடுமாதா 400 ஆண்டுகளில் முதல் முறையாக இடம்பெயர்ந்து தேவன்பிட்டிக்கு சென்ற போது அவருடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.
“எனது மக்கள், அவர்களது நிலம் ஆகியவற்றைக் காப்பாற்றுவதுடன் அனைத்திற்கும் மேலாக பல்லாயிரக்கணாக நம்பிக்கையாளர்கள் வணங்கும் எமது மாதாவைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் எனக்கு உள்ளது. மாதாவின் திருச்சொரூபத்தின் பாதுகாப்பு குறிந்து நான் அஞ்சுகிறேன். எனவேதான் நான் எமது மாதாவை தேவன்பிட்டிக்கு எடுத்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டேன். அங்கு மாதா தனது மக்களின் மத்தியில் பாதுகாப்பாக இருப்பார்“ என்று மிகவும் கனத்த இதயத்துடன் அதே நேரம் உறுதி தளராமல் கூறினார் காலஞ்சென்ற ஆயர் இராயப்பு ஜோசப்.
மடுமாதா இடம்பெயர்ந்த அன்று நடைபெற்ற தாக்குதலில் அந்த தேவாலயத்தைச் சுற்றியிருந்த சூழலில் அரசின் ஷெல் வீச்சுத் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்கு மிக முக்கியமானதொரு சாட்சியாக இருந்தார் ஆயர் இராயப்பு ஜோசப். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது அஞ்சலியில் தெரிவித்திருந்ததைப் போல், இலங்கையில் போர்க் காலத்தில் நடைபெற்ற பாரிய மனித உரிமை மீறல்களை பன்னாட்டரங்குக்கு எடுத்துச் சென்றவர் அவர். அதையடுத்தே இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்தன.
மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் பல வகையில் தனித்துவமானவர். அவர் இலங்கையிலிருந்த இதர கத்தோலிக்க குருமார்களைவிட தமது மக்களையும் மண்ணையும் மிகவும் நேசித்தார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக அவரது குரல் ஒலித்தது. அதன் காரணமாக அவர் தொடர்ந்து இராணுவத்தினர் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் தென்னிலங்கை ஊடகங்களின் ஏச்சுப்பேச்சுகளுக்கு ஆளானார், அச்சுறுத்தப்பட்டார், மன ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார். விசாரணை என்று கூறி அலைக்கழிக்கப்பட்டார்.
அதிலும் குறிப்பாக போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இராணுவத்தினர் செய்தனர் எனும் குற்றச்சாட்டை அவர் முன்வைத்த போது இந்த துன்புறுத்தல்கள் அதிகரித்தன. இறுதிக்கட்ட போரின் போது 150,000 பொதுமக்கள் ஒரே ஆண்டில் காணாமல் போயினர் என்று தரவுகளுடன் ஆயர் கூற பிரச்சனை பூதாகாரமாக வெடித்தது. சிங்களம் அவர் மீது வன்மத்தை முன்னெடுத்து நஞ்சைக் கக்கியது.
கடந்த 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று அரசு அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியிருந்த பகுதியின் மீது நடைபெற்ற ஒரு தாக்குதலில் 100க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டதை வடக்கு இலங்கையில் நிலவரம் “இரத்தக்களரியாகவுள்ளது“ என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியது.
எனினும், எவ்விதமான சர்வதேசப் பிரசன்னமும் ஊடகங்களும், அரசால் `மோதலற்ற பகுதி` என்று அறிவிக்கப்பட்டிருந்த பிரதேசத்தில் இருக்கவில்லை. எனவே அங்கு நடைபெற்ற கொடூரங்கள் உலகத்தின் பார்வைக்கு உடனடியாக வராமலிருந்தது.
அப்போது பாதிக்கப்பட்டோரின் குரலாக இருந்தார் ஆயர் இராயப்பு ஜோசப். அவருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் தகவல்கள் வந்துகொண்டிருந்தன. அவருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் உண்மைகளைப் பேசினார். எனவே அவர் `சர்ச்சைக்குரியவர்` மற்றும்`புலி ஆயர்`என்று ஏசப்பட்டார்.
அவர் மீதான விமர்சனங்கள் குறித்து நான் அவரிடமே அப்போது கேட்டேன்.
“ நான் சர்ச்சைக்குரிய ஆயர் என்று அழைக்கப்படுகிறேன் ஏனென்றால் சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடைபெறுகின்றன. அதற்கு எதிராக நான் குரல் கொடுத்தால். என் மீது `புலி முத்திரை` குத்தப்படுகிறது அதோடு சர்ச்சைக்குரியவர் என்ற பெயரும் ஏற்படுகிறது. எனது மக்களுக்காக நான் பேசினால் நான் `வெளிப்படையாக` பேசுகிறேன் என்று கூறப்பட்டேன். தமிழ் மக்களுக்காக கரிசனப்பட்டு அவர்களுடன் நின்றதால், என்னை `தேசத் துரோகி` என்று அழைத்தனர். புலிகளின் ஆதரவாளர், பிரிவினைவாதி என்று ஓயாமல் என்னைப் பற்றி பிரச்சாரம் செய்தார்கள். அப்படியான குற்றச்சாட்டுகள் குறித்து நான் கவலைப்படுவதில்லை. எமது மக்களுக்காகவும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், இங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் நான் குரல் கொடுக்கத் தயங்கமாட்டேன்“ என்று எவ்வித அச்சமும் காழ்ப்புணர்ச்சியுமின்றி எனக்கு பதிலளித்தார் `மக்களின் ஆயர்` இராயப்பு ஜோசப்.
போர் முடிந்த பிறகு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்து அவர் ஆவணப்படுத்தி வெளியிட்ட தரவுகள் மற்றும் தகவல்கள் ஜனநாயக மரபுகளை மதிக்கும் நாடுகளின் மனசாட்சியை உலுக்கின. போர் வலையத்தில் இருந்த 150,000 பேரை போர் முடிந்த பிறகு காணவில்லை என்று உலகிற்குத் தெரிவித்தார் ஆயர்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு காண்பதற்கென்று அரசால் ஏற்படுத்தப்பட்ட எல் எல் ஆர் சி அமைப்பிடம் 2011 ஆயர் இராயப்பு ஜோசப் சில தரவுகளை அளித்தார்.
“கடந்த அக்டோபர் 2008 முதல் மே 2009 வரையிலான காலப்பகுதியில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த மக்கள் தொகைக்கும், 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு முன்னர் வன்னியில் வசித்த மக்கள் தொகைக்கும் 146,679 பேர் இடைவெளி உள்ளது. அவர்களுக்கு என்னவாயிற்று?“ என்று அவர் வைத்த கேள்வியைக் கண்டு நாடே அதிர்ந்து போனது.
அவர் எழுந்தமானமாக எந்த தரவுகளை முன்வைக்கவில்லை. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி கச்சேரிகளிடமிருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே அவர் அந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார். அவர் கேட்ட கேள்வி மிகவு எளிமையானது.
“கச்சேரியின் கணக்குகளின் படி அதாவது 2008 அக்டோபருக்கு முந்திய பகுதியில் வன்னியில் 429,059 பேர் வசித்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானப் பணிகளுக்கான அலுவலகம் 10 ஜூலை 2009 நிலவரப்படி வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 282,380 என்று கணக்கிட்டிருந்தது. மீதமானவர்களுக்கு என்னவாயிற்று என்பதே ஆயரின் கேள்வியாக இருந்தது.
இந்தத் தரவுகளை எல் எல் ஆர் சியிடம் வைப்பதற்கு முன்னரே அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இடம்பெற்ற `இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயத்தில்` அவர் சாட்சியமளித்திருந்தார். இதை நினைவு கூர்ந்தார் அங்கிருக்கும் டிரினிட்டி கல்லூரியில் உதவிப் பேராசிர்யராக இருக்கும் கலாநிதி ஜூட் லால் ஃபெர்ணாண்டோ.
“மிகவும் வெளிப்படையாகப் பேசிய ஆயர் அவர்களை சிங்களப் பேரினவாதிகளும் அரசும் மிகவும் மோசமாக விமர்சித்து அவர் `புலி ஆயர்` என்று ஏளனம் செய்தன. ஆனால் அவர் தமிழர்களால் `மக்கள் ஆயர்` என்று அன்புடன் அழைக்கப்பட்டார். சிங்கள கத்தோலிக்கத் திருச்சபையால் அவர் புலிகளுக்கு ஆதரவானவர் என்று கூறப்பட்ட போது கூட அதை அவர் பொருட்படுத்தவில்லை“.
அவர் அச்சமின்றி கருணையை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக சிங்கள கத்தோலிக்க நிர்வாகத்தால் புறந்தள்ளப்பட்டார். ஆனால் இதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. அவரது ஒரே கவலை `தமிழர் நல்வாழ்வு` மட்டுமே.
அவர் காலமான பிறகு நாட்டின் ஜனாதிபதியும் போர்க் காலத்தில் பாதுகாப்புச் செயலராகவும் இருந்த கோத்தாபய ராஜபக்ச மரியாதை நிமித்தம் கூட இரங்கல் தெரிவிக்கவில்லை. பிரதமர் மஹிந்த ராஜபக்ச இரு நாட்களுக்குப் பிறகே சம்பிரதாய ரீதியில் ஒரு இரங்கலை வெளியிட்டார்.
இலங்கையில் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான கர்தினால் மால்கம் ரஞ்சித் கூட கடமையே என்றுதான் அவரது நல்லடக்கத்தில் பங்குபெற்றார் என்பதைக் காணக் கூடியதாக இருந்தது.
ஆயர் இராயப்பு ஜோசப்பின் மரணத்தின் மூலம் போர்க் குற்றங்கள் தொடர்பிலான மிக முக்கியான சாட்சி ஒன்று மௌனமாகியுள்ளது. ஆனால் `மக்கள் ஆயர்` விட்டுச் சென்றுள்ள சாட்சியங்களும் பணிகளும் எக்காலத்திற்கும் நிற்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழ் மக்களுக்காக அயராது உழைத்தீர்கள், உங்கள் பணி வீணாகாது. சென்று வாருங்கள் ஆயர் அவர்களே.