நாம் தமிழர் சீமானின் வேட்பாளர்கள் நால்வராவது வெற்றிபெற வேண்டும் என்பது பலரது விருப்பம்….
திருமாவளவன், வை.கோ விரும்புவது போன்று காங்கிரஸ்-திமுக கூட்டு நாட்டுக்குத் தேவையில்லையாம்…
கதிரோட்டம் 09-04-2021
தமிழ்நாட்டு மக்கள் மற்றும் வாக்களிக்காதவர்கள் கூட எதிர்பார்த்துக் காத்திருந்த 2021 சட்ட சபைத் தேர்தல் வாக்களிப்பு எவ்வித குழப்பமும் இன்றி நிறைவுக்கு வந்துள்ளது. வாக்களிப்பு இயந்திரங்களின் உள்ளே காணப்படும் நிஜமான வெற்றிகள் சில வாரங்களுக்கு எவருமே அறியாத வண்ணம் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் இந்த 2021 சட்ட சபைத் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்வதில் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் இருபத்தைந்து வீதத்திற்கு குறைவானவர்களே ஆர்வத்துடன் காத்திருப்பதான சென்னை ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்..
இது இவ்வாறிருக்கும் நிலையில், ஆங்காங்கே இரண்டு பிரதான கட்சிகளின் உறுப்பினர்களுக்கிடையே மோதல்கள் இடம்பெற்று சில உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளதான கவலை தரும் தகவல்களும் பெறப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டை காமராஜர் போன்ற கண்ணியமான அரசியல்வாதிகள் முதல்வராக அமர்ந்திருந்து ஆட்சி செய்த அந்த பொற்காலத்திற்குப் பிறகு, அவ்வாறான ஆட்சி அங்கு இடம்பெறவே இல்லை என்பதை தமிழ்நாட்டு மக்களில் கற்றவர்களாக விளங்கும் பலர் பேசிக் கொண்டே உள்ளார்கள்.
இவர்களில் முதன்மையானவர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் அவரது கட்சியில் வேட்பாளர்களாக விருப்பத்துடன் இணைந்து கொண்டுள்ள உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அன்பர்கள்.
மேலும், திமுக, அதிமுக போன்ற கட்சிகளை ஆதரிக்கின்றவர்களில் கற்றவர்கள் என்ற பிரிவிற்குள் அடங்கும் எவருமே இந்தக் கருத்தை இதுவரை வெளிப்படையாகக் கூறவேயில்லை. ஏனென்றால் அவர்களில் பலர் ‘ருசி’ கண்டவர்கள். தங்களுக்கு ‘இலாபத்தை’ தந்தவர்களுக்கு எதிராகப் பேச அவர்ளுக்கு துணிச்சலில்லை. ஆனால் நியாயவாதிகள் போல அறிக்கைகளை அவர்கள் வெளியிடுகின்றார்கள். அவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்ளும் ஊடகங்கள் அந்த ஏமாற்றுக்கார ‘கற்றவர்களின்’ அறிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல துணை நிற்கின்றன.
ஆனால் நாம் தமிழர் சீமான் போன்றவர்கள் தெரிவிக்கும் யதார்த்தமான கருத்துக்கள், துணிச்சலான உரைகள், சமூகத்திற்கு பயன்தரக் கூடிய உண்மைகள். முதலாளித்துவம், வர்க்க அரசியல் போன்றவற்றை நன்கு விளக்கும் கருத்துக்கள் கோட்பாடுகள் ஆகியனவற்றை பரப்புரை செய்வதற்கு பெரும்பாலான தமிழ்நாட்டு ஊடகங்கள் முன்வந்ததாகத் தெரியவில்லை.
மேலும் இதுவரை காலமும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரையும், அந்த அமைப்பையும் ஈழத் தமிழ் மக்களையும் காப்பாற்ற நாம் இருக்கின்றோம் என்று கூறி வந்த திருமாவளவனும் வை. கோ என்னும் கோபாலசாமியும் . இந்தத் தேர்தலில், திமுக- காங்கிரஸ் கூட்டணியின் கீழ் போட்டியிடுகின்றார்கள். அதுவும், வை.கோவின் வேட்பாளர்கள், திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டார்கள்.
2009ம் ஆண்டு வரை திருமாவளவனும், வை.கோவும் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றி பேசுவதும், ஈழத்தமிழர் புகழ்பாடுவதிலுமே கவனமாக இருந்தவர்கள், எந்த திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர்களையும் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவிப் பொது மக்களையும், குழந்தைகள் மற்றும் தாய்மார்களையும் கொன்றழிக்க உதவியாகவும் தூண்டுதலாகவும் இருந்தனவோ அதே கொலைக்கரங்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவுக் கரங்களை நீட்டிய வண்ணம் உள்ளார்கள்.
2009ம் ஆண்டிற்கு பின்னர் தான் பெற்ற யுத்த வெற்றியைக் கொண்டாடும் முகமாக இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மகிந்தாவால் அழைக்கப்பெற்ற திமுக-காங்கிரஸ் குழுவில் திருமாவளவனும் இணைந்து சென்று மகிந்தா என்னும் யுத்தக் குற்றம் செய்த ஜனாதிபதியிடமிருந்து பரிசுப் பொருள் பெற்றுக்கொண்டதை தமிழ்நாட்டுத் தமிழர்களும், ஈழத்தமிழர்களும் மறந்து விடமாட்டார்கள்.
அதற்கு முன்னைய காலப்பகுதிகளில் ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் ஏற்பாடு செய்த விழாக்களிலும் வைபவங்களிலும் அவர்களது பிரயாணச் செலவில் பயணித்து கலந்து கொண்டு நட்சத்திர ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்து விட்டு, மேடைகளில் தலைவர் பிரபாகரன் அவர்களையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் வியந்தும் புகழ்ந்தும் பேசிவிட்டு இப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒப்பற்றத் தலைவர்களையும் அவர்களையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அழித்த அதே கூட்டு கும்பலோடு சேர்ந்து நின்று மீண்டும் அந்த கொடிய ஆட்சி அமைந்து மீண்டும் ஈழத்தமிழர்களை வஞ்சிக்கும் செயற்பாடுகளுக்கு வழிதேடி நிற்கின்றார்கள் இந்த இரட்டை வஞ்சக நெஞ்சங்கள் திருமாவளவன்- வை. கோ இருவரும்.
இவர்களுக்கு ஒரு பாடத்தை தமிழகத்து மக்கள் புகட்டுவார்கள் என்றே அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள் என்பதே உண்மை.
இறுதியாக நாம் தமிழர் கட்சியின் சீமான் தலமையில் அவர் உட்பட குறைந்தது நான்கு சட்ட சபை உறுப்பினர்களையாவது இந்த தேர்தல் முடிவுகள் அந்த ஆசனங்களில் அமரச் செய்தால், தமிழ்நாட்டில் காமராஜர் காலத்து ஆட்சி ஓன்று அடுத்து பொதுத் தேர்தலிலாவது சட்டசபையைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கையைத் தோற்றம் பெற வைக்கும், என்ற வார்த்தைகளோடு அடுத்த வாரம் சந்திக்கலாம் எனக் கூறி விடைபெறுகின்றோம்