கடுமையான அறிவிப்பை விடுத்த மாகாண முதல்வர் டக் போர்ட்
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் “வீட்டிலேயே இருங்கள்” சட்டம் நேற்று வியாழன் முதல் அமுலுக்கு வந்தது. மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக பெறப்பட்ட கோவிட் பரிசோதனை முடிவுகள் மற்றும் இறப்பு வீதங்கள், வைத்தியசாலைகளில் ஏற்பட்ட நோயாளர்கள் படுக்கைகளின் தட்டுப்பாடு, போதிய சுவாசக் கருவிகள் இல்லாமை கண்டு பிடிக்கப்பட்டு அவற்றைச் சமாளிக்க முடியாத ஆபத்தான சூழ்நிலை உருவான நிலைமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே இந்த “வீட்டிலேயே இருங்கள்” சட்டம் வியாழன் நள்ளிரவு முதல் அமுலுக்கு கொண்டு வரப்படுகின்றது என்றும், மேலும் இந்தச் சட்டம் மிகவும் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என்றும் இந்த கடுமையான அறிவிப்பை விடுத்த மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்தார்.
கனடாவில் இந்த மாகாணத்திலேயே அதிகளவு தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் ஒரு தமிழ் பேசும் மத்திய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும், இரண்டு மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த “வீட்டிலேயே இருங்கள்” சட்டம் அமுலுக்கு வந்த நேரம் தொடக்கம் பின்வரும் விடயங்கள் மாகாண அரசினாலும், மாகாண மற்றும் நகரசபைகள் சார்ந்த சுகாதாரப் பிரிவுகள் ஆகியவற்றாலும் அனைத்தும் கண்காணிக்கப்பெறும் என்றும் முதலவர் டக்போர்ட் தெரிவித்தார்.
இந்தச் சட்டத்தை ஒன்றாரியோ அரசு உடனயடிக அமுலுக்கு கொண்டுவருவதன் மூலம் மாகாணத்தில் கொரொனா இறப்பு விகிதத்தை குறைக்காலாம் என்றும் வைத்தியசாலைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எல்லை தாண்டி அதிகரிப்பதை தடுப்பதன் மூலம், அங்கு நோயாளர் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம் என்றும், கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம், பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதத்தை ஏற்படுத்தலாம் என்றும் இதுவரை கொரோனா தடுப்பூசிகள் பெறாத பல ஒன்றாரியோ மாகாணத்தவர்களுக்கு தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக கிட்டும் என்றும், சமூக மட்டத்தில் மாகாணத்தில் நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்க ஏதுவாக அமையும் என்றும் மாகாண முதல்வர் டக் போர்ட் மேலும் தெரிவித்தார்.
அவர் இந்த சட்டம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறான கடுமையான சட்டத்தை எமது அரசாங்கம் அமுல் செய்தாலும் மளிகைச் சாமான்கள் கொள்வனவு செய்வது மற்றும் மருந்துப் பொருட்கள், மருத்தவ உபகரணங்கள் வாங்குவது போன்ற அவசரத் தேவைகளுக்கு அந்தந்த வர்த்தக நிறுவனங்களுக்குச் சென்று வர்த்தக நிறுவனங்கள் அனுமதி வழங்கும் வரை காத்திருந்து தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுவருவது மிகவும் அவசியமானதாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாகாண முதலர் தெரிவித்துள்ளார்.