இலங்கையிலுள்ள நான்கு பிரதான மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவரூட் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான அதிகாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கடற்றொழில் அமைச்சில் நேற்று முன்தினம் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போதே பிரான்ஸ் தூதுவர் இவ்வாறு தெரிவத்தார்.
கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை போன்ற துறைகளில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் நன்னீர் மீன்பிடி துறையை அபிவிருத்தி செய்வதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்த பிரான்ஸ் தூதுவர் இலங்கையிலுள்ள அனைத்து நீர் நிலைகளும் உரிய முறையில் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் போதிய அறுவடைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.
மேலும் இலங்கையில் கண்ணாடி நாரிழையில் தயாரிக்கப்பட்ட படகுகளால் சுற்றாடல் மாசடைவதாகவும் அவற்றை உரிய முறையில் அப்புறப்படுத்துவதற்கு தகுந்த கட்டமைப்பொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்ததுடன் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு கடற்றெழில துறையில் பயிற்சிகளை பெற்றுக் கொடுக்கவும் தமது நாடு ஆர்வத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையில் கடற்றொழில் துறையைப் பொறுத்தளவில் வளமான எதிர்காலம் இருப்பதாகவும் அத்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று தெரிவித்ததுடன் இத்துறையின் வளர்ச்சிக்கு குறிப்பாக வட- கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில் துறையின் அபிவிருத்திக்கு உதவுமாறு தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் படகு கண்காணிப்பு கட்டமைப்பு (வி.எம்.எஸ்) வசதிகள் போதிய அளவில் இலங்கை மீனவர்களிடம் இல்லாத காரணத்தினால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டு வருவதாகவும் ஆகவே அதற்கான உதவிகைளை பெற்றுத் தருமாறும் இச்சந்திப்பின் போது அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
இச்சந்திப்பில பிரான்ஸ் தூதுவருடன் தூதரகத்தின் பொருளாதார ஆலோசகர் ஜோன் அலக்ஸான்டர் மற்றும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கே. தயானந்தா அமைச்சரின் ஆலோகர் சி. தவராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.