இலங்கை விமானப்படையைச் சேர்ந்த முன்னணி நீச்சல் வீரரான, ரொஷான் அபேசுந்தர என்னும் சிப்பாய், பாக்குநீரிணையை நீந்திக் கடந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
நேற்றையதினம் 10ம் திகதி இலங்கையின், தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி நோக்கி பாக்குநீரிணை ஊடாக நீந்திச் சென்ற அவர், அங்கிருந்து மீண்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை திரும்பியுள்ளார்.
இதற்காக அவர், 28 மணித்தியாலங்கள், 19 நிமிடங்கள், 43 செக்கன்களை எடுத்துக் கொண்டுள்ளதன் மூலம், புதிய ஆசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார் என்று இலங்கை விமானப் படைத் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் 1971ஆம் ஆண்டு நிலைநாட்டப்பட்ட இச்சாதனை யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆழிக்குமரன் என அழைக்கப்படும் வி.எஸ். குமார் ஆனந்தனுக்கு உரியதாக இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
அழிக்குமரன் ஆனந்தன் அவர்களுடைய சாதனையை முறியடித்த இந்த விமானப் படைச் சிப்பாய், தென் மாகாகணத்தில் தலல்ல எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான ரொஷான் அபேசுந்தர, இச்சாதனைக்கு தயாராகும் வகையில், கடந்த ஜனவரி 03ஆம் திகதி, மாத்தறையிலிருந்து கொக்கல வரையான 25km தூரத்தை 10 மணித். 37 நிமிடங்களில் நீந்திக் கடந்ததோடு, கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி மாத்தறையிலிருந்து ஹிக்கடுவ சென்று அங்கிருந்து உணவட்டுன வரையான 49km தூரத்தை நீதிக் கடக்க 23 மணித். 10 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதன் மூலம் தேசிய சாதனையை இரு முறை முறியடித்துள்ளார்.
வல்வெட்டித்துறையில் 1943 ஆம் ஆண்டு மே 25ம் திகதி பிறந்த, ‘ஆழிக்குமரன்’ என அழைக்கப்படும் செல்வக்குமார் ஆனந்தன், ஈழத்தின் நீச்சல் வீரரும்,வழக்கறிஞரும் ஆவார். அவர் 1971ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து பாக்குநீரிணை ஊடாக இந்தியா சென்று, மீண்டும் இலங்கை திரும்புவதற்கு 51 மணித்தியாலங்கள் எடுத்திருந்தார்.
அவரது இந்த சாதனை கடந்த 50 வருடங்களாக முறியடிக்கப்படாத ஒன்றாகவே இருந்து தற்போது முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒன்பது கின்னஸ் சாதனைகள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்துள்ள ஆழிக்குமரன், இறுதியாக 1984ஆம் ஆண்டு (1984.08.06) ஆங்கிலக் கால்வாயை கடந்து சாதனை படைக்க எடுத்த முயற்சியின்போது உயிரிழந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.